Sunday, October 4, 2020

ரிஷார்ட் பதியுதீனுடன் எந்தவித அரசியல் உடன்படிக்கையும் கிடையாது -விசேட அறிக்கையில் ஜனாதிபதி தெரிவிப்பு

 




அண்மையில் எழுந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுடன் எந்த விதமான அரசியல் உடன்படிக்கையும் கிடையாது என விசேட அறிக்கை மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டமை, மற்றும் வவுனியாவில் இடம்பெற்ற வைபத்தின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ  முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுடன் சந்தித்துக்கலந்துரையாடியமை, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண ரிஷார்ட் பதியுதீனின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக நற்சான்று வழங்கும் வகையில் தனது உரையில் குறிப்பிட்டமை 20வது திருத்தம் தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தமையை அடுத்து  ராஜபக்ஸ அரசாங்கம் ரிஷார்ட் பதியுதீனுடன் உறவுகளைப் புதுப்பித்து 20வது திருத்தத்திற்கு ஆதரவு தேட முயற்சிக்கின்றது என சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டமையை  தொடர்பாக நேற்றையதினம் கொழும்பு கத்தோலிக்க ஆயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆச்சரியமளிப்பதாகவும் அதனையிட்டு கவலையடைவதாகவும் தெரிவித்திருந்தார். இது அரசியல் உடன்படிக்கையின் விளைவாக இடம்பெற்ற விடுதலையா என்ற வகையிலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பே தனது அரசாங்கத்தின் முதலாவதும்  முக்கியமானதுமான  முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கடந்த காலத்தில் செய்ததைப் போன்று அரசியல்வாதிகளுக்காக எவரையும்  கைது செய்யவோ அன்றேல் எழுந்தமானமாக விடுதலை செய்வோ தாம் தயாராக இருக்கவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளால் ஏதேனும் தவறுகள் அன்றேல் அலட்சியங்கள் இழைக்கப்பட்டிருப்பின் அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கட்டிக்காப்பதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுடன் எந்தவிதமான அரசியல் உடன்படிக்கையும் செய்யும் எண்ணத்தை தமது அரசாங்கம் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment