கடந்த 48 மணித்தியாலங்களுக்கும் சற்றே அதிகமான காலப்பகுதியில் இலங்கையில் 300ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை, இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 220 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் ஏற்கனவே 3259 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 461 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், குறித்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டே உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் சுய சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பித்தல் தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 'முடக்கம்' என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (செ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனங்கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு வருவதனை கருத்திற்கொண்டே மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 1400 பேரில் 495 பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்றனர் என்றும் எனவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment