Sunday, October 4, 2020

இலங்கையில் கொரோனா பரவல் அபாயத்தின் உண்மை நிலை என்ன?




 பிரண்டிக்ஸ் என்ற பிரபலமான ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டமையை அடுத்து  கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் தொடர்பான கேள்விகளை மீண்டும் நம்முன் எழுப்பியுள்ளது. 


மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு  நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது


இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39வயதுடைய பெண்ணொருவருக்கு, இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்,  கம்பஹா வைத்தியசாலையில் பணிப்புரிந்த  15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள பிரண்டிக்ஸ் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது குறித்த பெண்ணுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது



இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனம் தமது நிறுவனத்தில் மிகவும் இறுக்கமான சுகாதார விதிமுறைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளின் உடனடியான ஒத்துழைப்பு கிடைத்தமையை அடுத்து முன்கூட்டியே கொரோனா தொற்றுக்குள்ளானவரை இனங்காண முடிந்ததுடன் துரிதமாக அவரை ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்கைக்காக அனுப்பிவைக்க முடிந்ததுடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                             இலங்கைக்கு காணப்படும் அபாயம் என்ன?

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன. ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3500க்குள் இருக்கும் அதேவேளை குணமடைந்து வெளியேறிய 3254 பேர் போக தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிகையை இன்று கண்டறியப்பட்டவர்களுடன் சேர்ந்தாலும் 200க்குள்ளேயே காணப்படுகின்றது. 

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,549,373ஆக காணப்படுகின்றனர். இவர்களில் 5,509,966 எண்ணிக்கையானவர்கள் கொரோனாவில்  இருந்து குணமடைந்து மீண்டும் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் இன்னமும் 937,595 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இதுவரை 101,812 ற்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ள இந்தியாவில் கடந்த ஒகஸ்ட் மாதம் 26ம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தினமும் சராசரியாக 75, 000 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுவருகின்றமை நாம் இலகுவில் கொரோனாவை எடுத்துக்கொள்ளகூடாது என்பதை உணர்த்துகின்றது. 




 இறக்குமதியிலேயே அதிகமாக தங்கியிருக்கும் இலங்கைக்கு தினந்தோறும் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் வருகின்றன. இந்தநிலையில் துறைமுகம் சுங்கத்துறை உட்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட முக்கியமான கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற போது இலங்கைக்கான கொரோனா ஆபத்து பற்றி சகல தரப்பினரும்  கரிசனையோடே கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கை ஒரு நேரக்குண்டின் மீது அமர்ந்திருப்பதாக Sitting on a time- bomb'  'ஆபத்தின் பரிணாமம் உணர்த்தப்பட்டிருந்தது. 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கைக்குள் பெரிதாக கொரோனா வைரஸ் பரவல் இல்லாத நிலையில் இங்குள்ளவர்கள் முகக்கவசம் அணிதல் சமூக இடைவேளையைப் பேணுதல் போன்ற சுகாதார விதிமுறைகளை கவனத்தில் எடுப்பது பெரிதும்குறைந்துவருகின்றது.  கைகளை சுத்தமாக கழுவும் நடைமுறையும் குறைந்துவருகின்றது. சிலமாதங்களுக்கு முன்னர் கைகளைக் கழுவும் பல இடங்களில் சவர்காரம் அன்றேல் திரவ நிலை கிருமி நீக்கி காணப்பட்டது ஆனால் தற்போது பெருமளவிலானோர் திரளும் இடங்களில் கூட அவற்றை காணமுடிவதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அக்கறையற்ற தன்மையும் அலட்சியமுமே பல நாடுகளில் கொரோனா கோலோச்சுவதற்கு வழிகோலின என்பதை உணர்ந்து  இனியேனும்  அவதானத்துடன் செயற்படுவோம்.


No comments:

Post a Comment