Isaac GoldbergDiplomacy is to do and say the nastiest things in the nicest way.
. இந்த விஜயம் தொடர்பாக கருத்துவெளியிட்டிருந்த அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன், வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'இலங்கை கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
' இராஜதந்திரம் என்பது மிக மோசமானவற்றைச் செய்வதானாலும் கூறுவதானாலும் இனிமையாக கூறுவதென பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஐசக் கோல்ட் பேர்க் ஒருமுறை கூறியிருந்தார்.
எதிரி நாட்டு இராஜதந்திரியானாலும் ஒரு நாட்டிற்கு வருகை தரும் போது நாட்டிலுள்ள தலைவர்களோடு எத்தகைய பாரதூரமான கடும் சொற்பதங்கள் உள்ளடங்கங்கள் தாங்கிய விடயதானத்தைப் பேசினாலும் வெளியரங்கில் சிரித்து இங்கிதமாகப் பேசி பூசி முழுகிச் செல்வதுண்டு. ஆனால் இந்த விஜயம் தொடர்பான தகவல் வெளியானது முதலே அதிரடியான கருத்துக்களும் சமிக்ஞைகளுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தால் தற்போதைய அழுத்தங்களில் இருந்து மீள வழியுண்டு என இலங்கை ஆட்சியாளர்களில் ஒருதரப்பினர் எதிர்பார்க்கக்கூடும். ஆனால் இலங்கை மீது ஜெனிவாவில் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக்கட்சி நிர்வாகம் அல்ல. மாறாக ஜனாதிபதித் தேர்தல் அவரை எதிர்த்துநிற்கும் ஜோ பைடனின் ஜனநாயகக்கட்சி நிர்வாகம். அப்படிப்பார்க்கும் போது யார் ஜனாதிபதி ஆனாலும் இலங்கைக்கு கடுமையான அழுத்தம் வருவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் இலங்கையைப் போன்று ஆட்சிகள் மாறுகின்ற போது கொள்கைகள் மாறுவது போன்று குறிப்பாக வெளியுறவுவிடயங்களில் மாற்றங்கள் அமெரிக்காவில் மாற்றம் அடைவதில்லை. அந்தவகையில் இலங்கை மீதான அழுத்தங்கள் தொடர்வதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்றால் மிகையல்ல.
கடந்த 15 ஆண்டு காலப்பகுதியில் குறிப்பாக 2009 ஆண்டு யுத்தம் நிறைவுபெற்றபின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உற்றுநோக்கினால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர ஸ்தானத்திலுள்ள இலங்கையின் மீது அதிக ஆர்வத்தைக் கொண்டுள்ள வல்லரசுளின் விருப்பங்களை சமநிலைப்படுத்தி சமாளிப்பதற்கான தொடர்ச்சியான விரக்தி மிக்க முயற்சிகள் என்றும் வர்ணிக்க முடியும் .
என்னதான் பெரும் வல்லரசுகளுடனான உறவுகளை சமநிலைப்படுத்திக்கொள்ள இலங்கை பகிரத முயற்சிகளை மேற்கொண்டாலும் அது நீண்டகாலத்திற்கு சாத்தியப்படமாட்டாது. இதற்கு இலங்கையின் மிக மோசமான பொருளாதார நிலையும் முக்கியகாரணமாக அமைந்துள்ளது.
மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி கடந்த காலத்தில் சமாளித்தது போன்று இனியும் செய்வது மிகக் கடினம் .எனவே இலங்கை விரும்பாவிடினும் கூட சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வல்லாதிக்கப் போட்டியில் ஒரு வல்லரசின் பக்கத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்ததிற்குள்ளாகியுள்ளதென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
-ஆரோ
No comments:
Post a Comment