சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக்குழு சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளது. சீனத்தூதுக்குழுவினர் 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர். இதனை சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லூவோ சொங் குளோப் தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட முக்கிய பிரமுகர்களுடன் இந்த உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் இலங்கைப்பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கும்-சீனாவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துக்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அதன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுதொடர்பாக மூன்றாம் நாடான அமெரிக்கா பகிரங்கமாக கருத்துவெளியிட்டிருப்பதன் மூலமான இராஜதந்திர நெறிமுறைகளை கடுமையாக மீறியுள்ளதாக சீனத்தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்வது ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல என்ற போதிலும் ஏனைய நாடுகளில் இராஜதந்திர செயற்பாடுகளில் மூக்கை நுழைத்து குழப்பங்களை ஏற்படுத்த முனையும் வெறுக்கத்தக்க முயற்சிகள் தொடர்பாக மக்கள் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப்பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் சாரமாக இலங்கையுடனான உறவுகளில் சீனா வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீனத்தூதரகம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு பல்வேறு சோதனைகளைத் தாண்டி நின்றுநிலைக்கின்ற உறவு எனவும் அது எவ்வாறு அமையவேண்டும் என விரிவுரை எடுக்க வேண்டிய கடப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கவேண்டியதில்லை எனவும் சீனத்தூதரகம் தெளிவுபடுத்தியிருந்தது.
No comments:
Post a Comment