Friday, October 30, 2020

அமெரிக்காவுடனான கருத்துமோதல்களுக்கு மத்தியில் சீனாவின் புதிய தூதுவர் இலங்கை வருகை

 


இலங்கை விடயத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான கருத்துமோதல்கள் பொதுவெளியிலும்  தீவிரமடைந்துவரும் நிலையில் இலங்கைகான சீனாவின் புதிய தூதுவர் ட்சீ சென்ஹொங் இன்று மாலை 6.30 மணியளவில்  வந்தடைந்துள்ளார். 

 1988ம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு சேவையில் இணைந்த  வெளியுறவுத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதுடன் 2014ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டுவரை பஹ்ரேய்ன் நாட்டுக்கான சீனத்தூதுவராக  ட்சீ சென்ஹொங் பதவிவகித்துள்ளார். இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட வேளை அவர் சர்வதேச கற்கைகளுக்கான சீனா நிலையத்தின்  தலைவராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இன்று மாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை  வந்தடைந்தபின்னர் அவர் ஊடகங்களுக்கு விடுத்த செய்தியைத் தாங்கிய சீனத்தூதரக அறிக்கை இதோ:..


இலங்கைக்கான சீனாவின் புதிய தூதர் ட்சீ சென்ஹொங்கின் உரை

(2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள், கொழும்பு சர்வதேச விமான நிலையம்)


அன்புள்ள இலங்கை நண்பர்கள், சக நாட்டவர்கள்:

இலங்கை வந்தடைந்தும் இந்து மாக்கடலின் முத்து என போற்றப்படும் இலங்கையின் அழகு, உற்சாகம் மற்றும் நட்புறவை ஆழ்ந்த முறையில் உணர்ந்து கொள்கின்றேன். அன்புணர்வோடு மனமுருகினேன். சீன அரசு மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு தோள் கொடுத்து நட்பார்ந்த இலங்கைக்கான தூதராக வருகின்றேன். நான் பொறுப்பேற்க வேண்டிய கடமை மிகவும் முக்கியமானதாகவும் பிரகாசமாகவும் உள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகிறது. இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று நேர்மையாக உதவியளித்து, தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்து பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும். இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, குறிப்பாக 2014ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இலங்கையில் பயணம் மேற்கொண்டதிலிருந்து, பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் பெரும் சாதனைகளைப் பெற்று, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் நெருக்கமான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. நீண்ட வரலாறுடைய இருநாட்டுறவு இன்னும் பசுமையாக உள்ளது. பரஸ்பர நெடுநோக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் கோவிட்-19 நோய்த் தடுப்புக்கான கூட்டுப் போராட்டத்தில் இருநாட்டுறவு மேலும் உயர்ந்து, நாடுகளுக்கிடையே நட்பார்ந்த உறவுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதராக, சீன மற்றும் இலங்கை பணியாளர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து பாடுபட்டு, இருநாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை உணர்வுப்பூர்வமாகச் செயல்படுத்தி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று உதவியளித்து நட்பார்ந்து பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளின் மூலம் இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் மனநிறைவைக் கொண்டு வந்து, பிராந்திய அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுத்துச் செல்வதை எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் மீண்டும் நன்றி!

பிற்குறிப்பு 

இரண்டு வாரகால தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் அவர்  இலங்கைக்கான சீனத்தூதுவர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வார் என சீனத்தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment