Thursday, April 29, 2010

நான்கு வருடத்திற்குள் மூன்றாவது உலகக்கிண்ணம்



இருமாதங்கள் நீண்ட ஐபிஎல் போட்டிகள் தந்த களைப்போ அதனிலும் மகத்தான டுவன்டி டுவன்டி உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் தொடர்பான ஆர்வத்தை இதுவரைக்கும் எம்மவரிடையே மழுங்கடித்திருக்கின்றது

மேற்கிந்தியத்தீவுகளில் நாளையதினம் ஆரம்பமாகும் மூன்றாவது டுவன்டி டுவன்டி உலகக் கிண்ண போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்ற கழகங்களுக்கிடையிலான போட்டிகளிலும் பார்க்க விறுவிறுப்பை தரும் என்பதில் ஐயமில்லை

நாடுகளுக்கிடையிலான போட்டிகள் என்கின்றபோது ஏற்படும் விறுவிறுப்பும் பரபரப்பும் கழக மட்டப்போட்டிகளை பார்க்கிலும் பன்மடங்கு அதிகம்

கழக மட்டப்பபோட்டிகளில் சர்வதேச தரத்திலான சில வீரர்களே அக்கழகங்களில் அங்கத்துவம் வகிப்பர் மாறாக நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் என்று வரும் போது பங்கேற்கும் அனைவருமே சர்வதேசத்தரத்தில் இருப்பர்

அணிக்கு இருபது ஓவர்களைக் கொண்ட போட்டிகள் 2003ம் ஆண்டிலேயே முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கட் சபையால் உள்ளுர் கழக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அதற்குள்ளாகவே மூன்றாவது உலகக்கிண்ணப் போட்டிகளைக் காணப்போவது அதற்குள்ள செல்வாக்கைப் பறைசாற்றி நிற்கின்றது

2007ம் ஆண்டில் தென் ஆபிரிக்காவில் முதன் முறையாக இடம்பெற்ற உலகக்கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகிய பின்னர் டுவன்டி டுவன்டி போட்டிகளின் பிரபல்யம் வெகுவாக அதிகரித்தது .

இதனைத்தொடர்ந்து கடந்தாண்டு ஜுன் மாதத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இரண்டாவது டுவன்டி டுவன்டி உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணியைத்தோற்கடித்து பாகிஸ்தான் அணி வெற்றிவாகை சூடியது.

இரண்டாவது உலகக்கிண்ணப்போட்டிகள் நிறைவடைந்து ஒருவருடமே செல்லும் முன்னர் மூன்றாவது உலகக்கிண்ணப்போட்டிகளை நடத்துவது பணம்சம்பாதித்துவிட வேண்டும் என்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் பேராசையைக் காண்பிப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன

ஆனால் ஏற்கனவே நாடுகளுக்கிடையிலான டெஸ்ற் போட்டிகள் அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஒருநாள்  உலகக்கிண்ணப்போட்டிகள் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் என்பவற்றால் நிரம்பி வழியும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் அட்டவணையின் ஒழுங்குபடுத்தி போட்டிகள் ஒன்றையொன்று மேலிடாதவாறு நேர்த்தியாக்குவதற்கே இவ்வளவு விரைவாக மூன்றாவது உலகக்கிண்ண டுவன்டி டுவன்டி போட்டிகளை நடத்துவதாக கூறப்படுகின்றது

எது எப்படி இருப்பினும் டுவன்டி டுவன்டி போட்டிகள் ரசிகர்களுக்கு சலிப்பைக் கொடுக்கப்போவதில்லை என்ற உத்தரவாதம் இருக்கும் காரணத்தினால் மூன்றுவருடகாலப்பகுதிக்குள் நடக்கும் மூன்றாவது உலகக்கிண்ணம் நாளைமுதல் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் டெஸ்ற் கிரிக்கட் விளையாடும் அவுஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆபிரிக்கா நியூஸிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஸிம்பாப்வே ஆகிய பத்துநாடுகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுமாக மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன

கடந்த ஜுன் மாதத்தில் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டிகள் முதற்கொண்டு இதுவரையான காலப்பகுதியில் எந்த ஒரு அணியுமே பத்து டுவன்டி டுவன்டி சர்வதேச போட்டிகளில்தானும் விளையாடியிராத நிலையில் எந்த அணிக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதை ஊகித்துக் கூறுவது கடினமானது

எனினும் விளையாடிய ஒரு சில சர்வதேசப்போட்டிகளையும் கிரிக்கட் விளையாடும் நாடுகளின் உள்ளுர் கழக மட்டப்போட்டிகளில் வீரர்கள் காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளையும் நோக்குமிடத்து அவுஸ்திரேலியா  இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு வெற்றிவாய்ப்புக்கள் அதிகம் உண்டென்றே கூறவேண்டும்

போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணி டெஸ்ற் கிரிக்கட்டில் கண்டுவரும் தொடர்வீழ்ச்சிக்கும் 50 ஓவர்கள் போட்டிகளில் அடைந்துவரும் தோல்விகளுக்கும் விடைகொடுக்கவேண்டுமானால் அந்த அணியிலுள்ள அனேக வீரர்களின் ஆட்டப்பாணிக்கு பெரிதும் சாதகமான டுவன்டி டுவன்டி போட்டியினாலேயே சாத்தியம்.

பலம்வாய்ந்த கிரிக்கட் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும் தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் உலகக்கிண்ணப்போட்டிகள் என்று வந்துவிட்டால் அதிக திறமைகளை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் அணிக்கும் அனுபவம் வாய்ந்த திறமையான வீரர்களைக் கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் வெற்றிவாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன

இறுதியாக ஒன்றை மாத்திரம் சொல்லியாகவேண்டும் டெஸ்ற் கிரிக்கட் போட்டிகளைப் போன்றோ அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளைப் போன்றோ வெற்றி பெறுவதற்கு நீண்டகால அனுபவமும் அனேகமான வீரர்களின் தொடர்ச்சியான திறமை வெளிப்பாடும் டுவன்டி டுவன்டி போட்டிகளுக்கு அவசியமில்லை

 ஒரு சில ஓவர்களில் ஒரிரு வீரர்கள் காண்பிக்கும் அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளே டுவன்டி டுவன்டி போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கு போதுமாக இருப்பதனால் அதிகம் அறியப்படாத ஆப்கானிஸ்தான் அயர்லாந்து அணிகள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் வெளிப்பாடுகளைக் காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

No comments:

Post a Comment