Thursday, September 30, 2010

எந்திரன் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புக்கள்



அருண் ஆரோக்கியநாதர்

அன்றாடவாழ்வை முன்னெடுப்பதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் பலரது வாழ்வில் தமது வாழ்வுடன் சம்பந்தப்பட்ட செய்திகளைத்தவிர வேறேதும் முக்கியமானதாக தோன்றுவதில்லை . ஆனால் சில செய்திகள் அவற்றின் பரிணாமம் காரணமாக விரும்பியோ விரும்பாமலோ முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன .


அந்தவகையில் சினிமாவை ரசிக்கின்றவர்களாக இருந்தாலும் இல்லையென்றாலும் எந்திரன் திரைப்படம் குறித்த செய்திகளை இந்நாட்களில் கேள்விப்படாமல் இருப்பின் அது ஆச்சரியமாகவே இருக்கும்


இந்தியத்திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் இருவரான சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் படத்தில் நடிப்பது எந்திரன் மீதான ரசிகர்களது ஆர்வத்திற்கு காரணமாக இருப்பினும் திரைப்படத்திற்கான தயாரிப்புச் செலவு குறித்த செய்திகளே முதலில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன .



இத்திரைப்படத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து இந்திய ஊடகங்கள் பல்வேறு தொகைளைக் குறிப்பிட்டுள்ளன .இந்திய ரூபா மதிப்பில் 150 முதல் 200 கோடிகள் செலவிடப்பட்டதாக மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன


எந்திரன் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைவாக இந்த திரைப்படத்திற்காக 165 கோடி இந்திய ரூபாவிற்கு அதிகமாக செலவிடப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது .தற்போதைய இலங்கை நாணயமதிப்பின் படி 411 கோடி ரூபாவாகும். இதுவரைகாலத்தில் இந்தியத்திரைப்படமொன்றிற்கு செலவிடப்பட்ட அதிகூடிய தொகை இதுவெனவும் குறிப்பிடப்படுகின்றது .எந்திரனுக்கு முன்னர் இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் அக்ஷய் குமார் மற்றும் சஞ்சய் தத் நடித்த 'புளு'  (BLUE)  இதற்காக 100 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது


உலகளவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஜேம்ஸ் கமரூனின் அவதார் AVATAR திரைப்படம் இதற்காக 300மில்லியன் அமெரிக்கடொலர்கள் (அண்ணளவாக 3000கோடி இலங்கை ரூபா ) பொருட்செலவில் தயாரிக்க்பபட்ட இந்த திரைப்படமே அதிக வருமானத்தை குவித்த திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது 2.8பில்லியன் அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 28000 கோடி ருபாவை இந்ததிரைப்படம் சம்பாதித்துள்ளம குறிப்பிடத்தக்கது


இலங்கையில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக அதிகமான தயாரிப்புச்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக ஜக்ஸன் அன்டனியியின் இயக்கத்தில் வெளியாகிய ' அபா' திரைப்படத்திற்கு 60 மில்லியன்கள் முதல் 80 மில்லியன்கள் வரை செலவானதாக இலங்கை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் அதிக பட்ச தொகையைக் கருத்தில் கொண்டாலே 8கோடி இலங்கை ரூபா தான் அபா திரைப்படத்திற்காக செலவிடப்பட்டிருக்கின்றது .


ஒப்பீட்டளவில் பார்க்கின்றபோது இது இந்திய திரைப்படத்துறையின் பெரும் பரிமாணத்தை காண்பித்துநிற்கின்றது .


மறுமுனையில் உலகின் மூன்றிலொரு பங்கு வறியமக்கள் வாழ்கின்ற இந்தியாவில் இப்படிபெரும் தொகைப்பணததை விரயம் செய்து திரைப்படம் எடுக்கத்தான் வேண்டுமா என கேள்வியெழுப்புகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர் .


இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என எந்திரன் திரைப்படம் தற்போது ஊடகங்களில் பெருமையாக குறிப்பிடப்படுகின்றது .


இவ்வாறாக பெரும் தொகை செலவில் திரைப்படங்கள் எடுக்கப்படுவது இந்தியாவைப்பொறுத்தவரையில் என்ன செய்தியைக் குறிப்பிடுகின்றது என கொழும்பிலுள்ள இந்தியா செய்தியாளர் ஸ்ரீராமிடம் வினவியபோது ' இது அசூர வேகத்தில் பொருளாதார வளர்ச்சிகண்டுவருகின்ற இந்தியாவில் ஏற்பட்டுவருகின்ற மாறுதலைக் காண்பிக்கின்றது .இந்தியாவில் தற்போதுள்ள மத்திய தரவர்க்கத்தின் பொருளாதார வலுவைக்காண்பிக்கின்றது. இந்தியாவில் தற்போது சுமார் 300 மில்லியன் மக்கள் மத்திய தரவர்க்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் .இவர்களை நம்பியே இவ்வாறான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இது தமிழர்களது பொருளாதார பலத்திற்கும் சான்றாக அமைந்துள்ளது' எனத்தெரிவித்தார்.


இந்தியாவைப்பொறுத்தவரையில் எந்திரன் போன்ற படங்கள் மிகப்பெரிய ரிஸ்க்கை கொண்டுள்ளன அவர் குறிப்பி;ட்டபோது ஏன் அப்படிக்கூறுகின்றீர்கள் என வினவினேன் '  எந்திரன் திரைப்படம் விஞ்ஞானபூர்வமான கதையை மையமாகக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.ஆனால் இந்தியாவில் திரைப்படங்களைப் பார்க்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் வறியவர்களாக பாமரர்களாக இருக்கின்றனர் .அவர்களால் நவீன விஞ்ஞான விடயங்களை புரிந்துகொள்ளமுடியுமா அதனை ரசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே என்னைப்பொறுத்தவரையில் ரஜனிக்காந்த் என்ற சூப்பர் ஸ்டார் நடிகரின் மக்கள் செல்வாக்கை மனதில் நிறுத்தியே இத்தகைய பெரும் ரிஸ்க்கை எடுத்திருக்கின்றனர்' எனக்குறிப்பிட்டார் .


எந்திரன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜனிகாந்த்   இந்தியாவைப்பொறுத்தவரையில் முதலில் வெளிவருகின்ற உயர் விஞ்ஞானத் தொழில் நுட்ப திரைப்படமெனக் குறிப்பிட்டிருந்தார் .
இவ்வாறான திரைப்படங்களை ஆங்கிலத்தில் 'Sci- Fi Movies' என அழைக்கின்றனர் .விஞ்ஞர்னபூர்வ கதைகளை அடிப்படையாகக்கொண்ட திரைப்படங்களான இவை வேற்றுக்கிரகவாசிகள் வாழ்க்கை கடந்தகாலத்திற்குள் பயணித்தல் ரோபோக்கள் விண்வெளி சஞ்சாரம் போன்ற வித்தியாசமான கதைக்கருக்களை கொண்டிருந்தன.


ஒருவேளை இதனை விளங்காதவர்கள் ஸ்டார் வோர்ஸ் ஏ ஸ்பேஸ் ஒடிசி தி மட்ரிக்ஸ் டேர்மினேற்றர் ஏலியன் பக் டு த பியூசர் அவதார் இன்செப்ஷன் போன்ற படங்களை பார்த்திருந்தால்; விளங்கிக்கொள்ளமுடியும் .


ஆரம்பத்தில் மரத்தைச் சுற்றிக் காதல் பண்ணிக்கொண்டிருந்த இந்திய சினிமா அண்மைக்காலங்களில் அதிகமதிகமாக வெளிநாடுகளில் காதல் பண்ணிக்கொண்டும் குடும்பம் உறவுகளை மையமாகக்கொண்ட கதைக்கருக்களிலும் சுழன்றுகொண்டிருக்கின்ற வேளையில் நவீன சினிமாவின் நடப்புப் போக்கிற்கு அமைவாக விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்குள் பிரவேசித்திருப்பது வரவேற்கத்தக்கவிடயம் .


விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மேற்கத்தேயர்களுக்கு மட்டும் உரித்தான விடயமல்ல மாறாக அது அனைவருக்கும் அவசியமானது என உணரப்படுpகின்றதை உறுதிப்படுத்துவதாக இந்த திரைப்படம் அமைந்துநிற்கின்றது


எனினும் பாமர மக்களை அதிகமாகக் கொண்ட இந்தியாவில் இந்த திரைப்படத்திற்கு கிடைக்க கூடிய வரவேற்பை பார்த்தே இதுபோன்ற திரைப்படங்கள் இனிவரும் காலத்தில் தயாரிக்கபடுவது தீர்மானிக்கபடும் என எதிர்பார்க்கலாம் .


எந்திரன் திரைப்படத்தின் இயக்குநர் சங்கர் தமிழ் திரைத்துறையிலுள்ள சிறந்த கற்பனாவாதிகளில் ஒருவர் என்பதுடன் அதிநவீன தொழில்நுட்பம் குறித்த அறிவையும் கொண்டிருப்பவர்.அவரது கடந்த காலத்திரைப்படங்களை பார்த்தவர்கள் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கின்ற கதாநாயகர்களை மையமாகக்கொண்ட இந்தியன் அந்நியன் சிவாஜி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை அவர் தந்துள்ளமையை நினைவிற்கொள்ளலாம். அந்தவகையில் நவீன தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் நல்லகதைக்கருவையும் பொழுதுபோக்கு அம்சங்களையம் உள்ளடங்கியிருப்பின் எந்திரனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புக்கிடைக்கும்


எந்திரன் போன்ற திரைப்படங்கள் எத்தகைய தாக்கததை ஏற்படுத்தும் என இலங்கையின் பிரபல சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஹொலிவுட் திரைப்படங்கள் பலவற்றை இலங்கையில் படம்பிடிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவருமான சந்திரன் ரட்ணத்திடம் வினவியபோது'
இத்தகைய திரைப்படங்கள் உயர்ரக தொழில்நுட்பத்தை இப்பிராந்தியத்திற்கு கொண்டுவர வழிகோலும்.அதனைவிட மேலாக ஆசியாவினது குறிப்பாக இந்திய உபகண்டத்தின் பெரும் சனத்தொகையை கருத்திற்கொண்டு அந்த சந்தைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்கு அதிகமதிகமாக ஆர்வங்காண்பித்துவருகின்ற ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது முதலீடுகளை இப்பிராந்தியத்தில் முதலிடுவதற்கு வழிகோலும். இத்தகைய பெரும் தொகையில் அதனைவிடமேலாக சிறந்த தராதரத்துடன் உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடிய உள்ளுர் வாசிகள் இருப்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் பக்கம் மேலும் மேலுமாக இப்பிராந்தியம் மீது திரும்புவதற்கு வாய்ப்புண்டு' எனக் குறிப்பிட்டார்


தற்போது கிடைக்கும் தகவல்களைப் பார்க்கின்றபோது வடஅமெரிக்காவிலும் அதனைத் தொடர்ந்தும் இந்தியாவிலும் முதல்வாரத்திற்கான முன்பதிவுகள் யாவும் சில மணிநேரத்திற்குள்ளாகவே விற்றுத்தீர்ந்துவிட்டதாக அறியமுடிகின்றது


அந்தவகையில் இதுவரை காலத்தில் இந்தியத்திரைப்படமொன்று முதல் வாரத்தில் அதிகமாக சம்பாதித்த திரைபடமென்ற சாதனையை ஏற்படுத்தி தற்போது மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற சல்மான் கான் நடித்த DABANGG டபாங் திரைப்படத்தின் வசூலை எந்திரன் முறியடிக்கும் என்றே செய்திகள் வெளியாகியுள்ளன்


 டபாங் திரைப்படம் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் 3 IDIOTS திரைப்படத்தின் சாதனையை முறியடித்து முதல் வாரத்தில் 81.57 கோடி இந்திய ருபாயை சம்பாதித்திருந்தது .இரண்டாவது வாரமுடிவில் 116கோடி இந்திய ருபாவை சம்பாதித்துள்ள இந்த டபாங் திரைப்படம் 3 இடியற்ஸ் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வருவான சாதனையை படைக்கும் என எதிர்பார்ப்புக்களும் வெளியாகியுள்ளன. 3 இடியட்ஸ் திரைப்படம் தான் இதுவரைகாலத்தில் இந்தியாவில் அதிக வருமானத்தை ஈட்டிய திரைப்படமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது 35 கோடி இந்திய ருபா செலவில் தயாரிக்கப்பட்ட 3 இடியட்ஸ் தரைப்படம் மொத்தமாக 339 கோடி ருபாவை ஈட்டியது .
 சினிமா வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள செய்திகளில் எந்திரன் திரைப்படத்தின் திரை உரிமை மாத்திரமே 200 கோடி இந்திய ரூபாவிற்கு விற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .இது உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால் படம் வெளிவரமுன்பே படத்திற்காக இட்ட மூலதனத்தை தயாரிப்பாளர்கள் பெற்றுவிட்டார்கள் என்றே கூறவேண்டும்




எந்திரன் திரைப்படம் இந்திய திரைப்படவரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் 2000ற்கு மேற்பட்ட பிரின்ட்கள் போடப்பட்டதும் 3000 திரையரங்கங்களில் வெளியாகப்போவதுமான பெரும் திரைப்படமாக எக்கச் சக்க எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டுள்ளது .இந்தியாவிற்கு வெளியே 300 திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது .ஸ்பைர்டமான் திரைப்படத்திற்கு பின்னர் உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் என்ற சாதனையையும் இந்த திரைப்படம் ஏற்படு;த்தியுள்ளதாக ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன் இவ்வாறு பல சாதனைகளை ஏற்கனவே தன்னகத்தே கொண்டு நாளையதினம் ( ஓக்டோபர் முதலாம் திகதி ) வெளியாகும் எந்திரன் திரைப்படம் எத்தகைய சாதனையை நிலைநாட்டப்போகின்றதென பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

2 comments:

  1. Wow too much information with statistics ...interesting part is comparing the world cinema with Indian Cinema and then comparing it with Sri Lankan 28000 Cr to 411 Cr to 8 crs lol

    ReplyDelete
  2. இது தான் பண வீக்கமுங்களா? lol. :P

    எதுவாகினும் இந்திய பொருளாதாரத்தில் சினிமா முக்கிய தொழில் துறையாகி உள்ளது.
    இதுவும் வளர்ச்சியே !

    This is the CORPORATE era.
    Saami muthal Cinema varai.

    ReplyDelete