Monday, December 1, 2014

உற்சாகமளிக்கும் ஆரம்பம்

நேற்றைய தினம் பொலநறுவையில் இடம்பெற்ற பொது எதிரணிகளின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற் சாகத்துடன் பங்கேற்றிருந்தனர்.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன முதன் முதலாக தன்னை அறிவித்தபோது கடந்த மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காணப்பட்ட உற்சாகம் அதன் பின்னர் அவர் பங்கேற்ற நிகழ்வு களில் அதிகரித்துவந்த நிலையில், நேற்றைய தினம் பொலநறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் உற்சாகம் மற்றுமொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விவசாயப் பின்புலத்தைக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் கூட்டம் இடம்பெற்றமை இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி யிருந்ததை மறுக்க முடியாது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மத்தியில் மட்டுமன்றி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள், தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதமான புத்து ணர்ச்சியுடன் கூடிய உற்சாக நிலையைப் பார்க்கும் போது எதிரணியினரின் நகர்வுகள் நல்லதொரு ஆரம்ப அடித்தளத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகின்றது.

இந்நிலையில், பொது எதிரணியினர் இன்று விகாரமாதேவி பூங்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கைச்சாத்திடவுள்ளனர். தேசிய அரசை நிறுவி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், புதிய தேர்தல் முறைமை, சுயாதீன ஆணைக் குழுக்கள் ஆகியவற்றை ஸ்தாபிக்கின்ற 17ஆவது திருத்தத்தை மீண்டும் செயன்நிலைக்குக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தல் போன்ற முக்கிய அம் சங்களை இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் தாங்கி யுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில் மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்­ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சியில் இருந்தும் அம் முறைமையை ஒழிக்கத் தவறிய நிலையில் மைத் திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறினால் தமது வாக்குறு தியை நிறைவேற்றுவார் என்பதற்கு எவராலும் ஆணித்தரமான உத்தரவாதங்களைக் கொடுக்க முடியாமற் போனாலும் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் மக்களுக்கு மைத்திரியின் வருகை உற்சா கத்தைக் கொடுத்துள்ளதை உணர்வுவெளிப்பாடுகள் துலாம்பரமாக்கி நிற்கின்றன.

உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணி யினர் செயற்பாட்டில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், நெருக்கடிகள் குறித்த ஆரம்பக்கட்ட ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. 35இற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளைத் தாங்கிய பொது எதிரணியிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் போன்ற நல்லாட்சியுடன் தொடர்புடைய பொதுப்புள்ளியில் இணைந்திருக்கின்றார்களே அன்றி ஏனைய அனைத்து விடயங்களிலும் உடன்பாடு உடையவர்கள் அல்லர் என்பதை ஜாதிக யஹல உறுமயவின் அண்மைய அறிவிப்புகள் வெளிப்படுத்திநிற்கின்றன.

குறிப்பாக, பொறுப்புக்கூறுதல் விடயத்தில் நல்லி ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பையே கடுமையாக எதிர்த்துநிற்கும் யஹல உறுமய தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இப்படியாக பல முரண்பட்ட அமைப் புகளின் கூட்டணியே பொது எதிரணி என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு அதன்மீதான எதிர்பார்ப் புகளை யதார்த்தமாக வைத்துக்கொண்டால் ஏமாற் றங்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

அடுத்தடுத்த கட்டங்களில் வரக்கூடிய சவால்கள், சங்கடங்கள், நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணியினரின் ஆரம்பச் செயற்பாடுகள் உற்சாகமளிப்பதை மக்களின் உணர்வலைகளி லிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆரம்பம் சரியாக அமைந்தால் அடுத்துவரும் கட்டங்களும் சரியாகும் என்ற நம்பிக்கையை வலுவாகக்கொண்ட எமது மக்களின் எதிர்பார்ப்புகள் தடை களைத் தாண்டி நிறைவேறுமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment