Sunday, December 15, 2019

இலங்கையை ஆக்கிரமிக்கும் சுவரோவியங்கள்!

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து நாட்டிற்கு புதிய வடிவம் கொடுக்கின்ற செயற்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாட்டின் பல பகுதிகளிலும் சுவரோவியங்களை வரையும் நடவடிக்கைகள் அரச ஊக்குவிப்புடன் தனியார் நலன் விரும்பிகள் மற்றும் தொண்டர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் Murals எனப்படும் சுவரோவியங்களை வரைவது ஓவியக் கலையை பொதுத் தளத்திற்கு எடுத்துச் செல்கின்ற முக்கிய செயற்பாடாகக்  காணப்படுகின்றது. இந்த சுவரோவியங்களின் வகைகளும் அதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்களும் ஓவியருக்கு ஓவியர் வித்தியாசப்படும்.

இந்த சுவரோவியங்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. நாம் அறிந்த வகையில் இந்தோனேசிய குகையொன்றில் இரத்தத்தால் வரையப்பட்ட ஓவியமானது 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சில தினங்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இதுவரையில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான சுவரோவியமாக பார்க்கப்படுகின்றது.

சுவர்களில் வரைப்படும் இவ் ஓவியங்களை சுவரோவியங்கள் என நாம் குறிப்பட்டாலும் இவை அதனையும் தாண்டிய ஆழமான செய்திகளைத்தாங்கியவையாகும். வரலாற்று விடயங்களைப் பதிவுசெய்தல் ,அரசியல் செய்திகளைத் தருதல், கேலிச் சித்திர உருவங்கள் மர்மங்கள் எனப் பலவற்றை நம் கண்முன்னே நிறுத்தவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. 

இவை பொலிவிழந்து காணப்படும் இடங்களை அழகுபடுத்துவதுடன் புது உற்சாகத்தை மக்கள் மத்தியிலே  ஏற்படுத்துவதற்கும் வழிகோலும் சாத்தியமுள்ளன.சிறியதொரு பகுதியை பெரிதாக பெருப்பித்துக்காண்பிப்பதற்கும் சில ஓவியர்கள் சுவரோவியங்களைப் பயன்படுத்துவதுண்டு. அத்தோடு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும் ஊக்கியாக இவை அமையலாம். 

போகின்ற போக்கைப் பார்த்தால் அரச கட்டிடங்களை மட்டுமன்றி தனியாருக்கு சொந்தமான சுவர்களையும் இந்த சுவரோவியக் கலைஞர்களை  ஆக்கிரமித்துவிடுவார்கள் போலுள்ளதென சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காணமுடிகின்றது. தூய்மையாக வெள்ளையடிக்கப்பட்ட வர்ணம்பூசப்பட்ட சுவர்களிலும் அழகுள்ளது. அவை அந்தப் பிரதேசத்திற்கு ஒரு மேன்மைமிக்க உணர்வைதருகின்றதென்பதை இத்தகையவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களிலே பதிவுகள் இடப்பட்டிருந்தன. 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போன்று எவ்வித வழிகாட்டல்களும் இன்றி தான்தோன்றித்தனமான முறையில் வரையப்படும் சுவரோவியங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இனவாதத்தையும் வன்முறையையும் விதைக்கும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




பத்துவருடங்களுக்கு முன்னர் முடிவுறுத்தப்பட்ட ஆயுதப்போரை மீண்டும் நினைவுபடுத்துவதாக இராணுவ வீரர்களின் வெற்றி பிரவாகத் தோற்றங்கள், இங்கிலாந்தில் குற்றமாக அறிவிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் கழுத்துவெட்டு சமிக்ஞைத் தோற்றம், முஸ்லிம்கள் மரங்களை வெட்டி காடளிப்பில் ஈடுபடும் குற்றத்தைப் புரிவது போன்றதான தோற்றம் என இனவாதத்தையும் துவேசத்தையும் விதைக்கும் சுவரோவியங்கள் நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவில் விரிசலை உண்டுபண்ணுவதற்கு வழிகோலக்கூடும்.

நாட்டில் இனவாதமும் சிறுபான்மையினருக்கு எதிரான துவேசமும் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கின்றன என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகவே இப்படியான சுவரோவியங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.  

 இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற ஆயுதப் போர் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் ஆனபோதும் அதனால் சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட காயங்களும் காழ்ப்புணர்வுகளும் உரிய உளவளச் சிகிச்சை மூலமோ இழப்பீடுகள் போன்ற ஏனைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலமோ ஆற்றுப்படுத்தப்படவில்லை. போரைத் தாண்டி லஞ்ச ஊழல் மோசடிக் குற்றங்கள் பாலியல் வல்லுறவு கொலை கொள்ளைக் குற்றங்களால் நிறைந்துள்ள இலங்கையில்  சுவரோவியங்களில் மட்டும் நல்லவற்றை எதிர்பார்ப்பது எமது மடமையே என நினைத்துகொள்ளலாம். 

கௌவரத்துடன் பல்லினங்கள் வாழுகின்ற அமைதியும் சுபீட்சமும் நின்றுநிலைக்கின்ற நாடாக இந்த நாடு மாற்றம் பெறவேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினால் இந்த சுவரோவியங்களில் கூட சரியான நெறிப்படுத்தல்களை வழங்கி ,சுவரோவியங்களை நகரங்களில் ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி மக்களுக்கு மத்தியில் நற்சிந்தனைகளை விதைக்கும் வகையில் மாற்றத்தை உண்டுபண்ணமுடியும்.

No comments:

Post a Comment