Monday, April 27, 2009

யுத்தத்தின் கோரத்தைப் பறைசாற்றும் வன்னி...

(கிளிநொச்சி புதுக்குடியிருப்பு புதுமத்தளானில் இருந்து ஆ அருண் )
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான மரபுவழியுத்தம் இறுதிக்கட்டத்தையடைந்துள்ளதாக அரசாங்கமும் சர்வதேச ஊடகங்களும் சர்வதேச சமூகத்தின் பெரும்பாலான தரப்பினரும் கூறிவருகின்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சு முக்கியமான யுத்தப்பிரதேசங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவிலாளர்களை அழைத்துச்சென்றிருந்தது வட இந்தியாவைத்தளமாகக்கொண்ட பல்வேறு முக்கிய தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களுடன் மேற்குலக மற்றும் உள்நாட்டுச்செய்தியாளர்களுமாக சுமார் 50ஊடகவியலாளர்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றிருந்தனர் .

ஊடகவியலாளர்கள் யுத்தப்பிரதேசங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த போதிலும் எங்கு போகப்போகின்றோம் என அனேகமான ஊடகவியலாளர்கள் அங்கலாய்த்திருந்தமையை அவர்களுடனான உரையாடல்களின் போது உணரமுடிந்தது .

இரத்மலானை விமானநிலையத்திலிருந்து விமானம் மூலம் அநுராதபுரவிமானநிலையத்திற்கு ஏற்றிச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் அங்கிருந்து ஹெலிக்கொப்டர் மூலமாக அழைத்துச்செல்லப்பட்டு அங்கே ஒரு திறந்தவெளியில் தரையிறக்கப்பட்டபோதுதான் தாம் சென்றிருப்பது கிளிநொச்சிக்கு என அறிந்து ஊடகவியலாளர்கள் மத்தியிலே ஒருவித ஆச்சரியம் கலந்த உற்சாகம்தொற்றிக்கொண்டது .

நாம் தரையிறங்கியது கிளிநொச்சி விளையாட்டு மைதானம் என்பதும் அங்குதான் சமாதானகாலத்தின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளை ஏற்றிவந்த ஹெலிக்கொப்டர்களும் தரையிறக்கப்பட்டன என்பதையும் அங்கிருந்த சக ஊடகவியலாளர்கள் கூறியதை கேட்கமுடிந்தது

ஊடகவியலாளர்கள் பின்னர் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் உட்பட முக்கிய பணிமனைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு கவசவாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்டனர் அப்போது கிளிநொச்சிய+டாக செல்லும் ஏ9பாதை எவ்வித சேதங்களுக்குமுட்படாது புதுப்பொலிவுடன் காணப்படுவதையும் வீதியோரங்களில் அமைந்திருந்த கடைகளில் பெரும் பாலானவை கூரைகளற்ற நிலையில் அன்றேல் சுவர்கள் இடிந்த நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது எனினும் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட இந்துக்கோவில் வெளித்தோற்றம் குலையாமல் அப்படியே இருப்பதை காணமுடிந்தது .

விடுதலைப்புலிகளது அரசியல்துறை நடுவப்பணியகம் அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுதற்கு போடப்பட்டிருந்த குறியீட்டுப்பலகைகு பதிலாக தற்போது 58வது படைப்பிரிவின் தலைமையகத்தை குறிக்கும் குறியீட்டுப்பலகை போடப்பட்டிருந்தது .

ஊடகவியலாளர்களுக்கான காலை உணவுபரிமாறப்பட்ட இடம் முன்பு விடுதலைப்புலிகளின் சமாதான செயலக கட்டிடமாக இருந்ததுடன் அந்தக்கட்டிடமும் வெளியே தெரியக்கூடிய பாதிப்புக்கள் ஏதுமின்றி முழுக்கட்டிடமாக இருந்தது


அதனைத்தொடர்ந்து சமாதானசெயலகப்பணிமனைக்கு அருகே முன்னர் விடுதலைப்புலிகளின் பிரதான நிர்வாகக்கட்டிடமாகவும் தற்போது 58வது படைப்பிரிவின் தலைமையகமாகவும் மாற்றப்பட்டுள்ள மாடிக்கட்டிடத்தில் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சவிந்திர சில்வா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்


இதன்போது மன்னார் முதற்கொண்டு புதுமத்தளான் பாதுகாப்பு வலய மண் அரண்தகர்பு நடவடிக்கைவரை 58வது படைப்பிரிவினர் ஈட்டிய வெற்றிகள் தொடர்பாக அவர் விபரித்தார்

ஆரம்ப கட்டத்தில் மன்னாரிலிருந்து படைநடவடிக்கையை ஆரம்பித்த போது அதிகளவான விடுதலைப்புலி உறுப்பினர்களைக்கொன்றொழிப்பதனையே இராணுவத்தினர் குறியாக கொண்டிருந்ததாக தெரிவித்த பிரிகேடியர் சவிந்திர சில்வா
ஆரம்பகட்டத்தில் மன்னார் விளைநிலப்பகுதியைக்கைப்பற்றும் வரையில் இராணுவநடவடிக்கைகள் மிகவும் மெதுவாக முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்ட வகையில் விடுதலைப்புலிகளைச்சேர்ந்த 2000பேரைக்கொன்றொழித்திருந்ததாகவும் குறிப்பிட்டார் இதேவேளை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த விளக்கப்பலகையில் 58வது படைப்பிரிவினர் தாக்குதல்களை ஆரம்பித்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 11ம்திகதி முதற்கொண்டு 2009ம் ஆண்டு ஏப்ரல் 23ம்திகதி வரையான காலப்பகுதியில் 5953விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் 2938பேர் காயமுற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

மன்னார் விளைநிலப்பகுதி கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளே எதிர்பாராத வகையில் இராணுவநடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது வன்னியின் மேற்குப்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்படைத்தளமான விடத்தல்தீவு உட்பட பல முக்கிய தளங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டார் இந்தவகையில் ப+நகரி கைப்பற்றப்பட்டமையானது முக்கியமானது என பிரிகேடியர் சவிந்திர சில்வா குறிப்பிட்டார் யாழ் பலாலி தளத்திற்கு இங்கிருந்து ஏறிகணைத்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருந்ததுடன் யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவியிருந்ததாக குறிப்பிட்டார் ப+நகரி கைப்பற்றப்பட்டதுடன் யாழ்ப்பாணத்திற்கான ஊடுவல்கள் நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

58வதுபடைப்பிரிவினரே விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களை முறியடித்தும் இயற்கையின் மாற்றங்களை எதிர்கொண்டும் பலத்த சவால்களுக்கு மத்தியில் ப+நகரியைத்தொடர்ந்து பரந்தன் கிளிநொச்சி விசுவமடு தர்மபுரம் புதுக்குடியிருப்பு போன்ற முக்கிய நகரங்களையும் கைப்பற்றியதாக பிரிகேடியர் சவிந்திர சில்வா குறிப்பிட்டார் இம்மாத முற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் முற்றுகைச்சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டு போரியல்வரலாற்றில் பெரும்வெற்றியொன்றை ஈட்டியதாக தெரிவித்த பிரிகேடியர் சவிந்திர சில்வா ஏப்ரல் 2ம்திகதிமுதல் 6ம்திகதிவரை இடம்பெற்ற இந்த முற்றுகைத்தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் வடபோர்முனைத்தளபதி கேணல் தீபன் உட்பட முக்கிய படைப்பிரிவுகளைச்சேர்ந்த 15தளபதிகள் அடங்கலான 602பேர் கொல்லப்பட்டதுடன் 37பேர் காயமுற்றதாக தெரிவித்தார் விடுதலைப்புலிகள் இலங்கை இரர்ணுவத்தினரை குறைமதிப்பீடு செய்திருக்கலாம் எனவும் அதனாலேயே அவர்கள் இத்தகைய பாரிய இழப்பை சந்திக்க நேர்ந்ததெனவும் அவர் கூறினார்

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரிகேடியர் சவிந்திரசில்வாவிடம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக உங்கள் கருத்து என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது “
விடுதலைப்புலிகளிடன் இத்தனை உறுப்பினர்கள் தான் உள்ளனர் என உறுதிபடுத்திக்கூறி என்னுடைய நம்பகத்தன்மையை இழக்க விரும்பவில்லை ஏனெனில் விடுதலைப்புலிகளிடம் உதாரணமாக 500 உறுப்பினர்கள் தற்போது இருக்ககூடும் ஆனால் நாளைக்கே அவர்கள் நினைத்தால் அதனை 5000மாக அதிகரிக்ககூடிய ஆற்றல் அவர்களுக்கு உள்ளதென கூறினார் விடுதலைப்புலிகளின் தலைமையின் உத்தரவிற்கிணங்க தற்போது இயக்க அங்கத்தவர்கள் யாவரும் சீருடைகளைக்களைந்துவிட்டு சிவில் உடையிலேயே சண்டையிடுவதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்

இராணுவநடவடிக்கையின் போது பெருமளவான பொதுமக்கள் கொல்லப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது அந்தக்குற்றச்சாட்டு முற்றுமுழுதாக பொய்யானது எனத் தெரிவித்த 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி சீரோ சிவிலியன் கசுவல்டி என்ற பொதுமக்களுக்கு இழப்பேதும் ஏற்படாது தவிர்க்கும் கொள்கையை அனுசரிப்பதாக வலியுறுத்தினார்


இதன்போது விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பிச்செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டா என இந்திய ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர் இதற்கு பதிலளித்த பிரிகேடியர் சவிந்திர சில்வா தரைவழியாக தப்பிச்செல்வதற்கான வாய்ப்புக்களே கிடையாது எனினும் கடல்வழியாக மாத்திரமே அப்படியான வாய்ப்புக்கள் உள்ளன ஆனால் கடல்வழியாகவும் தப்பிச்செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்துமாறு கடற்படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கூறப்படும் புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் புதுமத்தளான் வைத்தியசாலையில் சிகிச்;சை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதாக தென்இந்தியச்செய்திகள் கூறுகின்றனவே இது தொடர்பில் உங்கள் பதிலென்ன என வினவியபோது இல்லை இல்லை அவர்கள் கைதுசெய்யப்படவில்லை மாறாக சரணடைந்தார்கள் என பிரிகேடியர் சவிந்திர சில்வா கூறினார்

விடுதலைப்புலிகள் தலைவர் பற்றி தயா மாஸ்டர் என்ன கூறினார் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரிகேடியர் சவிந்திர சில்வா தாம் இறுதிவரை போராடுவதாக விடுதலைப்புலிகளின் தலைவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரிடம் கூறியுள்ளதாகவும் ஆனால் போராளிகளில் அனேகர் அதனை நம்பவில்லை தலைவர் எப்போதேனும் தப்பிச்சென்றுவிடுவார் என்றே அவர்கள் கருதுவதாக தயாமாஸ்டரை மேற்கோள்காண்பித்து பிரிகேடியர் கூறினார்

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பிச்செல்வதற்காக நீர்மூழ்கி கப்பலொன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாமாஸ்டர் மேலும் தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரிகேடியர் கூறினார்

இதனையடுத்து புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களென ஒரு யுத்த தாங்கி சகிதமாக ஆயுதங்கள் ஊடகவியலாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டன

உயிரிழந்த விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்களது புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இதனைத்தவிர விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களது குடும்ப ஆல்பங்களும் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தின் போது பிடிக்கப்பட்ட புகைப்பட ஆல்பங்களும் ஆயுதங்களுக்கு முன்பாக விரிக்கப்பப்டிருந்த தரப்பாளில் பரப்பிக்கிடக்க காணமுடிந்தது

அடுத்ததாக ஊடகவியலாளர்கள் கவச வாகனங்களில் ஏற்றப்பட்டு கிளிநொச்சிக்கு வடக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் அப்போது பாதையின் இருமருங்கிலும் பார்வையைச்செலுத்திய போது சேதமுற்ற கடைத்தொகுதிகளையும் வீடுகளையும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இராணுவ வீதித்தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் அவதானிக்க முடிந்தது பரந்தன் சந்திவரை வடக்கு நோக்கி நகர்ந்த கவசவாகனங்கள் பின்னர் கிழக்கு நோக்கி பரந்தன் புதுக்குடியிருப்பு யு 35 பாதையில் திரும்பி பயணத்தை தொடர்ந்தன வாகனங்கள் மிகவேகமான நகர்ந்தால் கடும் புழுதிமண்டல எழுந்தபோதிலும் புழுதியை விலக்கிக்கொண்டு பாதையின் இருமருங்கிலும் பார்வையைச்செலுத்தினேன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெறுமனே எச்சங்களாக காணப்பட்டன கடைகள் வீடுகள் கட்டடங்கள் என கண்ணுற்;ற அனைத்துமே யுத்தத்தால் சின்னாபின்னமாகியுள்ளமை மட்டும் தெளிவாக விளங்கியது

ஏ35பாதையில் பல இடங்களில் 58வது படைப்பிரிவின் உப முகாம்களும் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிஞ்சியிருந்த உடைந்த கடைகளின் சுவர்களில் 58வது படைப்பிரிவினரின் பிரசன்னத்தை குறிக்கும் வகையில் அதன் பெயர்கள் தீந்தையால் ப+சப்பட்டிருந்தன அந்தப்பாதையில் தொடர்ந்து பயணித்தபோது தர்மபுரம் விசுவமடு போன்ற வளமிக்க கிராமங்கள் இருந்தமைக்கு சான்றுகள் காணப்படவில்லை புதுக்குடியிருப்பு நகரை அண்மித்தபோது கண்ணுற்ற காட்சி வேதனையை யுத்தத்தின் கோரத்தை பறைசாற்று;வதாக காணப்பட்டது செல்வம்கொழிக்கும் நகரென புகழப்பட்ட புதுக்குடியிருப்பு நகரின் கட்டிடங்கள் கடைகள் யாவுமே பாரிய சேதங்களையும் கோரங்களையும் சந்தித்திருப்பதற்கு அவற்றின் காட்சிகளே சாட்சி அங்குள்ள வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணணுற்றால் ; கனத்த இதயங்களிலும் இரத்தம் கசியச்செய்துவிடும் தற்போது இராணுவத்தினர் பாதையின் இருமருங்கிலும் கணிசமான மீற்றர்கள் நிலப்பரப்பை கனரக இயந்திரங்கள் மூலம் துப்பரவுசெய்துள்ளதாக எம்முடன் வந்திருந்த இராணுவசிப்பாயொருவர் குறிப்பிட்டார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவ்வாறு சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்


புதுக்குடியிருப்பிலிருந்து புதுமத்தளான் நோக்கி கவச வாகனங்கள் விரைந்தபோது ஒரிடத்தில் பொதுமக்கள் நின்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடிந்தது இரணைப்பாலை சந்தியிலேயே எமது இந்த விஜயத்தின் போது முதன்முறையாக பொதுமக்களைக்காணமுடிந்தது உருவங்களைத்தொலைத்தவர்களை கையிலே உடைமைகளும் இன்றி உடுத்த உடையுடன் வந்த மக்களைக்கண்ணுற்ற ஊடகவியலாளர்கள் இனமொழி பாராது நெஞ்சுருகியதை உணரமுடிந்தது காலில் செருப்பேதுமின்றி பட்டப்பகலில் தட்டாந்தரையிலஅங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த மக்களுக்கு இராணுவத்தினர் பிஸ்கட் பக்கற்றுக்களை வழங்கியதைக்காணமுடிந்தது

கடந்த ஒரிரு தினங்களுக்குள்ளாக பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்ளிருந்து வெளியே வந்ததாக கூறப்பட்ட மக்களே இவர்கள் எனவும் முதற்கட்டமாக இராணுவத்தினர் இவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீரை வழங்கி பின்னர் அவர்கள் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்கள் என கூறப்படுவனவற்றிற்கு அழைத்துச்செல்லப்படுவதே வழமை என எமது வாகனத்தில் வந்த இராணவமேஜரொருவர் கூறினார்

வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களின் 62வயதான கந்தையா நடேஸ்வரி கருத்துவெளியிடுகையில்
தாம் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வருவதற்கு முன்பாக சுமார் ஒருமாத காலம் பதுங்குகுழிகளுக்குள் இருக்க நேர்ந்ததாகவும் அதிலும் குறிப்பாக இருநாட்கள் முழுமையாக பகுங்குகுழிகளை விட்டு நகரமுடியாதவாறு கடும் எறிகணைவீச்சு காணப்பட்டதாகவும் தெரிவித்தார் அங்கு உணவுபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் தேங்காய் சீனி குடிக்கப்பால் ஏதுமின்றி காணப்பட்டதாகவும் இவற்றைவிட தமக்கு ஆதரவில்லாதநிலை காணப்பட்டதாகவும் வழியிலும் தெருவிலும் மக்கள் இறந்துகிடந்ததை தாம் கண்ணுற்றதாக தெரிவித்த அவர் தாங்களே மிகவும் பயந்து பயந்து இப்பகுதிக்குள் வந்ததாக தனது தளதளத்த குரலில் குறிப்பிட்டார்

தனது வயதுமுதிர்ந்த தாயாரைத்தாங்கியவாறு பிஸ்கட்களை பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த அ ரஜனி என்பவரிடம் இன்னமும் மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் எவ்வளவு பேர் இருக்ககூடும் என வினவியபோது தயங்கியவாறு இன்னமும் ஒரு ஒருலட்சம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் மக்கள் இருக்க கூடும் எனவும் தாம் முந்தநாள் வந்ததாகவும் கூறினார்

புதுமத்தளன் நோக்கிய பயணத்தினை இரணைப்பாலைசந்தியில் இருந்து தொடர்ந்தபோது எமக்கு சில நூறு மீற்றர்கள் தொலைவில் ஒரிரு தென்னைமரங்களே காணப்பட்ட ஒரு வெட்டாந்தரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருப்பதைக்காணமுடிந்தது அவர்களில் ஒருசில நாம் பயணித்த பாதையோரத்தில் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதை வெகுவேகமாக விரைந்த கவசவாகனத்தில் இருந்தவாறே அவதானித்தோம் மேலும் சிலர் அங்கேகாணப்பட்ட நீர் தேங்கிநின்ற ஒரு சிறிய பகுதியிலுள்ள நீரில் குளித்துக்கொண்டிருந்ததையும் மேலும் சிலர் ஒரு பிளாஸ்டிக் நீர்த்தாங்கியில் நிரப்பியிருந்த நீரில் உடல்கழுவிக்கொண்டிருந்ததையும் கண்ணுற்றோம் அவர்களில் அனேகரின் உடற்தோற்றம் வாடி வதங்கியிருந்தது சிறுகுழந்தைகள் சிலரின் முகங்களில் புன்னகை மலர்ந்திருந்ததையும் பார்க்கமுடிந்தது


எனினும் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்த இடத்திற்கு அருகே செல்ல எமக்கு அனுமதி வழக்கப்படவில்லை இதுபற்றி வெளிநாட்டு செய்தியாளர் ஒருவர் எம்மோடு வருகைதந்திருந்த இராணுவ அதிகாரியிடம் வினவியபோது அந்த மக்கள் ஒரிருநாட்பகுதிக்குள்ளாக பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்ளாக இருந்து வந்தவர்கள் எனவும் அவர்கள் இன்னமும் சோதனைசெய்யப்படவில்லைஎனவும் அவர்களிடமுள்ள பொதிகள் யாவும் சோதனையிடப்பட்டபின்னரே அவர்கள் வவுனியாவிற்கு அனுப்பிவைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார் அந்த மக்கள் கூட்டத்தினரிடையே தற்கொலைக்குண்டுதாரிகளும் இருக்கக்கூடும் எனவும் அவர்களை சந்திப்பது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்றதென தாம் கருதுவதன் காரணமாகவே அருகில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என அந்த இராணுவ அதிகாரி மேலும் கூறினார்

இப்படியாக பெருந்திரளாக குவிந்திருந்த மக்களை தூரத்தே பார்த்தவாறே புதுமத்தளான் நோக்கிய கவசவாகனங்கள் விரைந்தன

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் இறுதி கட்ட போர் நடைபெறுவதாக கூறப்படுகின்ற பாதுகாப்பு வலயப்பகுதியின் தென்பகுதிக்கு சில நூறுமீற்றர்கள் தொலைவிற்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர் நாம் அங்கே இறுதியாக தரித்து நின்ற பகுதிதான் புதுமத்தளான் புதுக்குடியிருப்பு வீதியில் புதுமத்தளான் சந்திக்கு அருகிலுள்ள இடம் என இராணுவத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது அண்மையில் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்த பகுதியே நாம் நின்றுகொண்டிருந்த பகுதி அங்கே ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு சென்றமையால் விழுந்துகிடந்த உடைகள் கைப்பைககள் மற்றும் ஆவணங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன

இராணுவத்தினரின் பல்வேறு படைப்பிரிவைச்சேர்ந்தவர்களும் அவர்களது வாகனங்களும் ஆங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது அந்த இடத்தில் ஊடகவியலாளர் ஒருவர் எம்முடன் வருகைதந்திருந்த 58வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியிடம் விடுதலைப்புலிகள் கரும்புலிகள் படையணியை இன்னமும் கொண்டிருக்கின்றார்களா என வினவியபோது இன்னும் சிலநாட்களின் பின்னர் இங்கு ஒருபுலியும் இருக்க முடியாது இந்தியாவில் இருந்துதான் புலியைக்கொண்டுவரவேண்டும் எனக்கூறினார்

எம்மோடு வருகைதந்திருந்த இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் இன்னமும் புலிகள் நிலைகொண்டுள்ள பகுதியின் பரப்பளவு குறித்து வினவியபோது விடுதலைப்புலிகள் தற்போதுள்ள பகுதி 8கிலோமீற்றர்கள் கடற்கரையைக்கொண்ட பகுதியெனவும் இதில் சிலபகுதிகள் இரண்டுகிலோமீற்றர் அகலத்தையும் சில பகுதிகள் ஒருகிலோமீற்றர்அகலத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்

புதுமத்தளானில் நாம் நின்று கொண்ட இடத்தில் இருந்து பார்த்தபோது ஓரிடத்தில் கரும்புகை எழுந்தவண்ணமிருந்தது அங்கே மோதல்கள் நடப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர் தாம் கனரக ஆயுதங்களை தற்போது பாவிப்பதில்லை என தெரிவித்த இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் வசம் இன்னமும் 122மில்லிமீற்றர் 120 மீல்லிமீற்றர் எறிகணைகள் காணப்படுவதாகவும் அவர்களின் தாக்குதல்களாலேயே படையினருக்கு சேதங்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர் நாம் அங்கு சுமார் ஒரு மணிநேரம் நிலைகொண்டிருந்தபோது மெல்ல மெல்ல வெடிப்புச்சத்தங்களைக்கேட்க முடிந்தது நேரம் ஆக ஆக அந்த சத்தங்கள் பெரிதாக ஒலித்து அதிர்வுகளை ஏற்படுத்தவே அங்கிருந்து ஊடகவியலாளர்கள் மீண்டும் திரும்பிச்சென்றோம்தற்போது இடம்பெறும் யுத்தத்தில் இராணுவத்தினரின் கைமேலோங்கியிருப்பதற்கு சான்று பகரும் வகையிலேயே இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட மோதல்கள் இடம்பெறுவதாக கூறப்படும் பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஊடகவியலாளர்களை அழைத்துச்சென்றமையை நோக்கமுடியும் என எம்மோடு வருகைதந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்

30வருடத்திற்கும் அதிகமான வரலாற்றைக்கொண்ட விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிடுவதற்கு இன்னமும் சில தினங்களே உள்ளதென இராணுவத்தினரும் அரச தரப்பினரும் பெருமளவான இலங்கைமக்களும் கருத்துக்களை கொண்டிருப்பது உண்மைதான் ஆனால் கடந்த காலங்களிலும் இவ்வாறு யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் என பல்வேறு கட்டியங்களும் காலக்கெடுக்களும் கருத்துக்களும் கூறப்பட்டிருந்தும் அது நிறைவேறாமற்போன வரலாறுகளுக்கு முன்பாக தற்போதைய கருத்துக்களுக்கும் காலக்கெடுக்களுக்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும் .No comments:

Post a Comment