Tuesday, December 14, 2010

ஸியாபோவின் நோபல் பரிசு உலகிற்கு வழங்கும் செய்தி


சீன அதிருப்தியாளர் லியு ஸியாவோபோவிற்கு 2010ம் ஆண்டிற்கான நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டமை உலக நாடுகளிடையில் பல்வேறு கருத்துமோதல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிகோலியிருந்தது

ஊடகங்களால் அதிகமாக அலசி ஆராயப்பட்டுள்ள இவ்விடயத்தில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு செய்தி அடங்கிநிற்கின்றது .

கருத்துவெளியிடும் சுதந்திரத்தினை நசுக்குவதற்கு அடக்குமுறை ஆட்சியாளர்கள் முற்படுகின்றபோது தமக்குத்தாமே எத்தகைய அழிவினை அன்றேல் அபகீர்த்தியை அவர்கள் வரவழைத்துக்கொள்கின்றனர் என்பதற்கு லியு ஸியாபோவிற்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டமை நினைவுறுத்துகின்றது.

CHARTER 08 ( சரம் 08) என ஆங்கிலத்தில் அறியப்படும் சீனாவில் அரசியல் மாற்றங்களுக்கான விஞ்ஞாபனமொன்றை தயாரிப்பதற்கு துணைபுரிந்தமைக்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரே நாளில் இடம்பெற்ற  விசாரணைகளையடுத்து லியு ஸியாபோ 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அரச அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தமையே இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக அமைந்திருந்தது .

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி வெளியிடப்பட்ட சரம் 08 விஞ்ஞாபனத்தில் ஆரம்பத்தில் புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என 350ற்கு அதிகமான சீனர்கள் கையொப்பமிட்டிருந்தனர் . தற்போதோ சீனாவிற்கு உள்ளும் வெளியுமாக பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் இந்த விஞ்ஞாபனத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . சீனாவில் அரசியல் மாற்றத்திற்கான Charter
  08 விஞ்ஞாபனம் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவில் அதிருப்தியாளர்களால் வெளியிடப்பட்ட சோவியற் யூனியனுக்கு எதிரான Charter 77 ன் பெயரையும் பாணியையும் பின்பற்றியதாகவே அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது


லியு ஸியாபோவை சிறையடைத்ததன் மூலமாக அரசியல் மாற்றத்திற்கான வேர்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கு சீன அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதற்கு மாற்றான விடயமே நடந்தேறியுள்ளது .அடக்;குமுறை மூலம் உண்மையின் குரலை நசுக்கிவிடுவது எளிதல்ல அது இன்னுமின்னும் விஸ்வரூபமெடுத்து உலகையே ஆட்கொள்ளும் என்பதையே இது உணர்த்திநிற்கின்றது

தற்போது 54வயதுடைய ஸியாபோவின் பெயர் 1989ம் ஆண்டில் சீனத்தலைநகர் பீஜிங்கிலுள்ள தியனமென் சதுக்கத்தில் ஆட்சியாளர்களால் ஈவிரக்கமற்றமுறையில் மாணவர்களது ஆர்ப்பாட்டம் அடக்கியொடுக்கப்பட்டபோது முதலில் பிரபலமாக அறியப்பட்டிருந்தது

ஆனால் சீனா கடந்தாண்டில் அவரை சிறையடைத்ததன் பின்னர் தற்போது உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் லியு ஸியாபோவின் பெயரும் அவரது முன்னெடுத்த பணியின் நோக்கமும் நன்கறியப்பட்டதாகிவிட்டது .

அசூர வேகத்தில் பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் சீனாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என்ற எண்ணக்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் உயர்மட்டத்தலைவர்கள் அரசியல் தாராளமயமாக்கல் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்த முறபடும் நிலையில் ஸியாபோவினை சிறையடைத்ததால் அவரது பெயர் நோபேல் சமாதானப்பரிசு உயர்ந்ததோடன்றி சீனாவிற்கு சர்வதேச அளவில் பாரியளவிலான அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது.

ஸியாபோவிற்கு வழங்கப்பட்ட நோபேல் பரிசு இன்னுமின்னும் அதிகமான அதிருப்தியாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகின்றவர்களுக்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்பினைக்காண்பிப்பதற்கு சக்தியையும் உத்வேகத்தையும் கொடுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது
.
சிறுதுளி பெருவெள்ளம் என்ற முதுமொழியை நாம் கேட்டதுண்டு சிறிய எதிர்ப்பு செயல் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதற்கு லியு ஸியாபோ சிறந்த உதாரணமாக திகழ்கின்றார்.

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களுக்கு முன்பாக நாம் என்ன செய்யமுடியும் எமது இந்த சிறிய செயற்பாட்டால் என்ன மாற்றம் தான் நிகழ்ந்துவிடப்போகின்றது போன்ற எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பவர்களையும் கண்திறந்துபார்க்க வைப்பதாக சிந்திக்க வைப்பதாக முக்கியமாக செயற்படத்தூண்டுவதாக ஸியாபோவின் நோபல் பரிசு அமைந்துள்ளதென்றால் மிகையல்லNo comments:

Post a Comment