Monday, December 6, 2010

யுத்தத்தால் விதவைகளானோருக்கு விமோசனம் யார் தருவார்?

வவுனியாவிலிருந்து 
அருண் ஆரோக்கிய நாதர்



யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் குண்டுச்சத்தங்கள் மௌனித்துவிட்ட போதிலும் யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் வடக்கு கிழக்கு பகுதியில் துலாம்பரமாக தெரிகின்றன.

இதில் யுத்தத்தால் கணவனை இழந்து விதவைகளானோர் நிலைமை பரிதாபகரமானது .இலங்கை அரசாங்கத்தின் தரவுகளுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் 49000 விதவைகளும் வடமாகாணத்தில் 40000 விதவைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது

இந்த விதவைகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அரசாங்க அமைச்சர்கள் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தனர் .இவர்களுக்கு உதவியளிக்க இந்தியா ஏற்கனவே முன்வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

விதவைகள் விபரம் 
கிழக்கு மாகாணம் -49000
வடமாகாணம் -40000

இந்த நிலையில் கொடூர யுத்தத்தினால் விதவைகளான சாந்தி உமா மற்றும்  ஜான்ஸி ஆகிய மூன்று இளம் பெண்களை சந்திக்கின்ற வாய்ப்பு அண்மையில் கிட்டியிருந்தது .

 அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நற்பெண்களுக்குள்ள உயரிய குணத்தால் இவர்கள் ஆரம்பத்தில் பேசத்தயங்கியபோதும் இரண்டு நாட்களின் பின்னர் மனந்திறந்து பேசத்தொடங்கினர்.

சாந்தி( 21வயது )
'அண்ணா எனக்கு 2006ஆண்டு ஏப்ரல் 12ம்திகதி 16வயதில் திருமணமானது .எனது பள்ளித்தோழிpயின் அண்ணாவைத்தான் நான் விரும்பித் திருமணம் செய்திருந்தேன் . திருமணத்தின் பின்னர் விசுவமடுவிலுள்ள என்னுடைய பெற்றோருடன் தான் வாழ்ந்துவந்தோம். கணவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் 2007ம் ஆண்டு ஜுலை 21ம்திகதி எங்களுக்கு மகன் பிறந்தான் .கணவன் என்னை நல்லா பார்த்துக்கொண்டார்.எந்த உதவிக்காகவும் நான் வேறுவீடுகளைத்தட்டியது கிடையாது. இப்படி சிறப்பாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோதுதான் யுத்தம் வெடித்திருந்தது. விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரிடமாக சென்று போன வருசம் (2009)ஏப்ரல் மாதம் 7ம்திகதி புதுமாத்தளனிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று கொண்டிருந்தபோது தான் ஷெல் வீச்சில் கணவர் பலியானார். இடம்பெயரும் போது எங்களை முன்னுக்கு அம்மா அப்பாவுடன் போக சொல்லிவிட்டு அவர் சைக்கிளின் சமான்கiளை சுமந்துவருவார். ஷெல் வீச்சில் அவர் பலியானபோது நான் உடனிருக்கவில்லை முதலில் அவருடைய தம்பிதான் இறந்துவிட்டதாக சொன்னாங்க உண்மைய எல்லோரும் மறைச்சிட்டாங்க பிறகு தம்பி வந்து நடந்ததைக் கூறியவுடன் நான் மயங்கிவிழுந்துட்டேன் .பிறகு நாங்க இருந்த இடத்திலேயே அவரது சடலத்தை புதைத்துவிட்டு முள்ளிவாய்காலுக்கு போனோம் .அங்கிருந்து போனவருசம் மே 17ம்திகதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து மெனிக்பாமில் ஒருவருடத்திற்கு மேல் இருந்தோம் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் விசுவமடுவிற்கு சென்றிருந்தோம் '

உமா( 30வயது)
'நாங்க கிளிநொச்சி ஊற்றுப்பாலம் பகுதியை சேர்ந்தவங்க. நானும் எனது கணவரும் விரும்பித்தான் திருமணம் செய்திருந்தோம் .எங்கட அப்பாவிலுள்ள உயர் குணங்கள் இருப்பதைக் கண்டுதான் நான் அவரை விரும்பினேன் .2007ல் திருமணமானது .2008ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம்திகதி மகள் பிறந்ததும் கணவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு வந்து பார்த்து தூக்கி மகிழ்ந்தார் அதற்கு பிறகும் பல தடவைகள் வந்தார்.இரண்டு நாட்கள் கழித்து ஜுலை 28ம்திகதி எங்களை மருத்துவமனையில் பார்த்துவிட்டு சென்ற பின்னர் தான் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். அதற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை இருண்டுவிட்டது. ஷெல் தாக்குதல் எங்கட பிரதேசத்திற்கு அருகில் அதிகரிக்க அதிகரிக்க அவர் செத்து ஒரு மாதத்திற்கு பிறகு நாங்க இடம்பெயர்ந்து ஒவ்வொரிடமாக சென்றோம் இறுதியில் மாத்தளனில் இருந்து மார்ச் மாதம் நாங்க மெனிக் பாம் வந்தோம் .பிறகு ஒன்றரை வருஷத்திற்கு பிறகுதான் சொந்த இடத்திற்கு திரும்பினோம் '

ஜான்ஸி ( 26வயது )
'இரணைப்பாலை தான் எங்கட சொந்த இடம் எனக்கு 2007ம் ஆண்டு திருமணமானது நாங்க புதுமாத்தளனுக்கு இடம்பெயர்ந்த போது போன வருசம் (2009) மார்ச் 22ம் திகதி அவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். ஒரு குழந்தையும் நானும் எங்கட அம்மா அப்பாவும் தற்போதும் மெனிக் பாமில் தான் இருக்கின்றோம் .இன்னமும் எங்கட பகுதியில் மீள் குடியமர அனுமதிக்கப்படவில்லை'

தம்மை நன்கு பார்த்துக்கொண்ட தமது கணவர்மார் உயிருடன் இருந்திருந்தால் தம்மை எந்தவேலைக்கு செல்லவும் அனுமதித்திருக்கமாட்டார்கள் எனக்கூறும் இந்த இளம் விதவைகள் தற்போது மிதிவெடி அகற்றும் நிறுவனமொன்றில் ஆபத்துமிக்க மிதி வெடி அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் .

ஏனையோரைப்போன்றே தமக்கும் சில நிறுவனங்கள் உதவிப்பொருட்களையும் சிறுதொகைப்பணத்தையும் வழங்கியுள்ளபோதிலும் கணவனை இழந்த பெண்கள் என்ற நிலைமை கருதி இதுவரையில் விசேடமான உதவிகளோ நிவாரணங்களோ கிடைக்க வில்லை எனக்கூறும் இவர்கள் தமது குடும்ப நிலைமை கருதி தமது வாழ்விட சூழலுக்கு வெளியே தொழிலுக்கு வந்துவிட்ட நிலையில் தாம் இல்லாத காரணத்தால் ஏனையோருக்கு கிடைத்துள்ள சில நிவாரணப் பொருட்களும் தமக்கு கிடைக்காது போயுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

கணவன் உயிருடன் இருந்த காலத்திற்கும் தற்போதைய நிலையிலுவும் சமூதாயத்தில் எத்தகைய வேறுபாட்டை உணருகின்றீர்கள் என வினவியதற்கு பதிலளிக்கையில்

சாந்தி
' அவர் உயிருடன் இருக்கும் போது யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் எங்கவேண்டுமானாலும் போகலாம் ஆனா இப்ப நான் சொந்தக்காரர்களிடம் பேசினால் கூட ஏன் அவ அவரோட பேசுறா இவரோட பேசுறா என குத்தலா பேசுறாங்க எங்கட அம்மா அப்பா கூட மகள் நீ அவங்களோட பேசினா சமூதாயம் அப்படி இப்படி பேசும் என்று கட்டுப்பாடு விதிக்கிறாங்க'

உமா
' அவர் இருக்கையில் நான் கேட்கிறத்திற்கு முதலே எல்லாத்தையும் வாங்கித்தந்திடுவார்.இப்ப கடைக்களுக்கென்றாலும் ஏனைய இடங்களுக்கு என்றாலும் நாங்கள் தான் போகணும் .நிவாரணங்கள் கொடுப்பவர்கள் உரிய ஆளே நேரில் வரவேணும் என்று கூறுவதால் எல்லாத்திற்கும் நாங்கள் தான் போகவேண்டியுள்ளது வெளியே போய்வரும் போது சிலரது கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டியிருக்கின்றது என்னசெய்கிறது எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது'

ஜான்ஸி
'என்ற கணவர் நோய்வாய்பபட்டு ஊனமுற்றவராய் இருந்திருந்தாலும் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் .இப்ப ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்லியும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறாங்க '

யுத்த்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரில் மிகவும் துர்ப்பாக்கிய சாலிகளாக காணப்படும் கணவனை இழந்த இளம் பெண்களின் இளம்தாய்மாரின் எதிர்காலம் எதிர்ப்பார்ப்புக்கள் குறித்து அவர்களிடமே வினவியபோது

சாந்தி
' என்னுடைய பிள்ளையை நன்கு வளர்த்தெடுக்கவேண்டும் நல்ல கல்வியை கொடுத்து சிறந்த எதிர்காலத்தை வழங்கவேண்டும் அதுதான் எனது எதிர்பார்ப்பு'

உமா
'நான் பட்ட கஷ்டத்தை சொல்லி பிள்ளையை வளர்ப்பேன் ஆனால் எல்லாவற்றிலும் சிறப்பானது கிடைப்பதற்கு நான் என்னால் இயன்றதை செய்வேன். எங்கட ஒன்றவிட்ட அக்கா ஒருவரும் யுத்தம் காரணமாக 1996ம் ஆண்டு கணவனை இழந்தவ அப்ப அவங்கட குழந்தைக்கு 6மாதம் மட்டும் தான் அவ நல்ல முறையில் பெண்குழந்தையை வளர்த்தெடுத்திருக்கிறா அதுபோல என்னுடைய பெண் குழந்தையையும் நான் நல்ல முறையில் வளர்த்து நல்ல ஒருவரது கையில ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்'

ஜான்ஸி
'பிள்ளையை ஒழுங்கா வளர்த்தெடுக்கணும் என்பதே என்னுடைய ஒரே எதிர்ப்பார்ப்பு அதனைத்தவிர நோயுற்றிருக்கிற என்னுடைய பெற்றோரை நன்கு உழைத்து பராமரிக்க வேண்டும்'

தமது எதிர்பார்ப்புக்கள் குறித்து இவ்வாறு கூறியவர்களைப்பார்த்து தயங்கியவாறே கோபித்துக்கொண்டுவிடாதீர்கள் நீங்கள் இளம் வயதினராய் இருப்பதனால் மீண்டும் திருமணம் செய்துகொள்வீர்களா என்று வினவியபோது

சாந்தி
 'எங்க சமூகத்தில் மீண்டும் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டாங்க சொந்தக்காரங்களே பிரித்துவைத்திடுவாங்க அவங்க ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என்னைப்போல நிறையப்பேர் கணவன் இல்லாம இருக்கிறநிலையிலே இப்படி இருப்பதே பழகிப்போய்விட்டது '


உமா
' அம்மா அப்பாவிடம் நான்கைந்துபேர் வந்து திருமணம் கேட்டிருக்கிறாங்க அவங்க எனக்கு எதையும் உடனே கூறமாட்டாங்க நான் ஏசி விடுவன் அல்லது வீட்டை விட்டு பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போய்விடுவேன் என்று அவங்களுக்கு பயம் . மெனிக்பாம் முகாமில இருக்கும் போது கணவனை இழந்த மனைவியை இழந்தவர்கள் மீண்டும் திருமணம் செய்ததை பார்த்திருக்கின்றேன் . தங்களுக்கு என்று பிள்ளைகள் பிறந்த பிறகு அவர்கள் நடந்துகொள்வதையும் பார்த்திருக்கின்றேன் .முன்னைய பிள்ளையை ஏதோ மாற்றாந்தாய் பிள்ளையாக பிரித்து பார்ப்பதுடன் அந்தப்பிள்ளையிடம் வேலைவாங்கிறதும் அடித்துதைப்பதையும் பார்த்து வெறுத்துப்போய்விட்டது .இதனால மீண்டும் திருமணம் முடிப்பதென்றால் பயமா இருக்கின்றது .அதைவிட இருக்கிற பிள்ளையை நன்கு வளர்த்தெடுத்தா போதும்'

ஜான்ஸி
'நினைத்தேன் நீங்கள் இந்த கேள்வியை கேட்கத்தான் சுற்றிவளைக்கின்றீர்கள் என்று ஆனா எனக்கு இந்த நிலையில் அது குறித்து சிந்தித்துபார்க்கமுடியாது என்னுடைய கணவரின் நினைவுகள் இப்போதும் அதிகமாக என்னை ஆட்கொண்டிருக்கின்றது அதiனைத்தவிர பிள்ளையை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற நோக்கமும் உள்ளது '


 நீங்கள் எல்லோரும் இளவயதினராய் இருக்கின்றீர்கள் கணவனை இழந்தது நீங்கள் செய்த தவறல்ல காலம் செய்த தவறு ஒருசில உதாரணங்களுக்காக மீண்டும் திருமணம் செய்யக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிடுவதுதானா தீர்வு என வினவியபோது ?

சாந்தி
'சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டும்'

உமா
' நல்லது வந்தால் பார்க்கலாம்'


ஜான்ஸி
'இப்ப பிள்ளையை வளர்ப்பதுதான் முக்கியம் '


யுத்தம் காரணமாக எமது நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் விதவைகளானவர்களுக்கென இதுவரையில் உருப்படியான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதையே ஒருபானைச் சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பது போன்று இந்த மூன்று இளம் விதவைகளுடனான கலந்துரையாடலின் மூலமாக உணரமுடிந்தது

இவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்கு மேலாக உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் சிகிச்சைகளும் வழங்கப்படுவதுடன் தாம் இழைக்காத தவறிற்காக விதவைகளாகிப்போயுள்ள இவர்களுக்கு நிரந்தரமான தீர்வாக விதவைகள் மறுதிருமணம் போன்ற விடயங்களில் சமூக எண்ணக்கருவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்

புறக்கணித்து இருப்பதற்கு விதவைகள் எண்ணிக்கை ஒன்றிரண்டல்ல மாறாக ஆயிரக்கணக்காக இருப்பதன் காரணமாக சமூகத்தில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் பணியில் சமூக நிறுவனங்கள் தொண்டர்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் ஊடகவியலாளர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்

இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக உண்மையான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன





No comments:

Post a Comment