Thursday, April 2, 2015

உலகக்கிண்ணம் உணர்த்தும் பாடம்



மெல்பேர்ண் மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை எழு விக்கட்டுக்களால் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி சம்பியனாகியது.

பதினோராவது முறையாக இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்தாவது முறையாக சம்பியனாகியதன் மூலம் கிரிக்கட் உலகில் தனது ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டுமாக நிரூபித்துக்கொண்டதென்றால் மிகையாகாது.  இந்த அணியின் தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு பின்னால் அந்த நாட்டில் கிரிக்கட் வீரர்களின் வளர்ச்சிக்காக இருக்கின்ற மிக உயர்தரமான கட்டுமானம் முக்கியமானது. ஒரு சில வீரர்களின் திறமையில் தங்கியிராது ஒட்டுமொத்த அணியாக இடைவிடாது தொடர்ச்சியாக வெளிப்படுத்தும்  ஆற்றல் வெளிப்பாடுகளின் பிரதிபலனே ஆஸ்;திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு வலுச்சேர்த்துநிற்கின்ற மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியினரும் அதன் ரசிகர்களும் அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பதை செய்திகளும் புகைப்படங்களும் புலப்படுத்துகின்றன. வெற்றிபெறும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியுணர்வு அலாதியானது. அதனை அனுபவிக்கும் போதுதான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் போட்டியில் தோல்வியுற்ற நியுஸிலாந்து அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் இதுவே வாழ்வின் முடிவல்ல. இறுதிப் போட்டியில் தோற்றமை வருத்தமளிக்க கூடியது தான் என்றாலும் அதனையே நினைத்துக்கொண்டு வாழ்நாளை முடித்துக்கொண்டுவிடமுடியாது. இறுதிப்போட்டியைத் தாண்டியும் வாழ்க்கையொன்று இருக்கின்றது என்பதே யதார்த்தம். உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு மூன்றுமுறை முன்னேறியும் கிண்ணத்தை வெல்லமுடியாமல் போன இங்கிலாந்து கிரிக்கட் வீரர்களும் ரசிகர்களும் அதற்குப்பிறகும் வாழ்க்கையைத் தொடரவில்லையா? தொடர்ந்துமே முயற்சித்துக்கொண்டிருக்கவில்லையா?

கிரிக்கட் உட்பட ஓவ்வொரு விளையாட்டிலிருந்தும் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைவே இருக்கின்றன.  வெற்றிபெறும் போது கிடைப்பதைவிடவும் தோல்வியடையும் போது தான் நிறைய விடயங்களை ஒரு வீரன் அன்றேல் ஒரு அணி கற்றுக்கொள்ளமுடிகின்றது. தனது பலம் பலவீனம் வீழ்த்துவதற்காக வகுக்கப்பட்ட வியூகம் உட்பட பல விடயங்களை அறிந்துகொண்டு அடுத்தகட்டத்திற்கு தயாராக முடியும். விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும் அனைவருமே சம்பியன்கள் ஆவதில்லை. அதுபோன்றே வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றிவாய்த்துவிடுவதில்லை. காபொத பரீட்சைகளில் சித்திபெறத்தவறுவர்கள் முதற்கொண்டு காதலில் வெற்றிபெறத்தவறுபவர்கள் என பலரும் தற்கொலையை ஒரு தெரிவாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்ற செய்திகளைப் பார்த்திருக்கின்றோம்;.

அத்தகையவர்கள் விளையாட்டு வீரர்களது வாழ்க்கையை எண்ணிப்பார்த்து வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்திடவேண்டும். போட்டியில் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் போட்டியில் பங்கேற்றதற்காகவும் தம்மால் ஆனமட்டும் முயன்றுபார்த்ததற்காகவும் பெருமைப்பட்டுக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுவதற்காக மேலும் திடசங்கற்பத்துடன் உழைக்கவேண்டும்.
உலகக்கிண்ணத்தை வெல்வது போன்ற பெரிய வெற்றியுணர்வு ஒரு சில அணிகளுக்கே கிடைப்பது போன்று வாழ்க்கையில் ஒரு சிலருக்கே பெரிய வெற்றியுணர்வுதரும் கணங்கள் வாய்க்கப்பெறுகின்றன.

ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கே அன்றாடவாழ்வில் எத்தனையே வெற்றிக்குரிய மகிழ்ச்சிகரமான கணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பிஞ்சுக்குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்கும் பாக்கியமாக இருக்கட்டும் அந்தக்குழந்தை முதன்முறையாக நடக்கும் அழகைப் பார்க்கும் தருணமாக இருக்கட்டும் நல்ல உணவை நான்கு சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமாக இருக்கட்டும் வீதியில் நண்பர்களுடன் விளையாடும் போட்டியில் கிடைக்கின்ற மகிழ்ச்சியாக இருக்கட்டும். நல்ல நிகழ்ச்சியைப்பார்த்த திருப்தியாக இருக்கட்டும் இவை ஒவ்வொன்றுமே ஒருவகையான வெற்றி மகிழ்ச்சியைத் தரும் தருணங்கள் தாம் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். வாழ்க்கையை கணங்களாக தருணங்களாக ரசித்து அனுபதிவத்து மகிழ்ந்திடவேண்டும்.

No comments:

Post a Comment