Wednesday, November 8, 2017

சர்வதேச வலைக்குள் இலங்கை: பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்க முடியாத நிலை



இலங்கை அரசாங்கத்தை தாம் தற்போது ஒரு சர்வதேச வலைக்குள் போட்டிருப்பதன் காரணமாக அவர்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு இருப்பதாக உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்தந்தை எஸ். ஜே. இம்மானுவேல் தெரிவிக்கின்றார். 
நீண்டநாட்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்ட அவர் "சுடர் ஒளி'க்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்தக்கருத்துகளைத் தெரிவித்தார்.
கேள்வி தங்களது இந்த விஜயம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்வதாக நான் அறிகின்றேன். தற்போது நீங்கள் வருகை தந்தமைக்கான உண்மையான நோக்கம் என்ன?
பதில் உண்மையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் வருகை தந்துள்ளேன். இதுவரை ஒரு வருடம் இங்கிலாந்திலும், 20 வருடங்கள் ஜேர்மனியிலும் வசித்திருக்கின்றேன். இறுதியாக சுனாமிக்குப் பின் 2005ஆம் ஆண்டு வருகை தந்திருந்தேன். அதற்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்னும் வந்திருந்தேன்.கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது வருகை தந்துள்ளேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபின்பு நிலைமை மிகவும் கஷ்டமாக இருந்தது.பழைய அரசின் கீழ் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தோம்.
அதாவது, தமிழர்கள் வாழமுடியாத ஒரு நிலை இருந்தது. தனிநபர்களை அமைப்புகளைத் தடைசெய்திருந்தார்கள். நானும் அந்தப்பட்டியலில் இருந்தேன். நான் வர எத்தனிக்கவும் இல்லை.ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த அரசு மாற்றத்துக்கு உட்பட்டிருந்தவேளை நாங்களும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கினோம். அதன்படி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு என்னை அழைத்தார். இரண்டாவது முறை ஜேர்மனிக்கு பேர்லின் நகருக்கு வந்திருந்த வேளையும் அழைத்திருந்தார். அவரைப்போன்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நான் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றார்கள். தங்களுக்கு விருப்பம் என்றார்கள்.அப்போது நான் ஊடகங்களுக்கு சொன்னேன், இவ்வாறு அழைப்பு வந்திருக்கிறது உண்மைதான். இப்போது தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ரியான நேரம் வரும்போது செல்வேன் என்று. இப்போது அண்மையிலே எங்களுடைய இரண்டு வருடங்களிலே சில சில முயற்சிகளை எங்களுக்காக செய்திருக்கிறார்கள். எல்லாம் நிறைவாக முடிந்தது என்று அல்ல. ஆனால், சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சர்வதேச உறவுகளைச் சரியாகச் செய்தார்கள்.பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்தினார்கள். ஆனால் எங்களுக்கு முக்கியமானது தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும். அதாவது, நாங்கள் போரில் பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். எங்களுக்கான தீர்வு வரும்வரை நாங்கள் நாடு திரும்பமாட்டோம் என்று கூறியிருந்தோம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் முயற்சி மிகவும் கடினமானது. அதாவது, ஒரு நாட் டின் யாப்பைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இலகுவான காரியமல்ல. இரண்டு தரப்பினருக்கும் இது கஷ்டத்தைக் கொடுக்கின்றது. அது மாத்திரமின்றி, இரு தரப்பினருக்குமிடையில் புரிந்துணர்வு குறைவு. காலங்காலமாக அவர்கள் கூறிவந்த பொய்கள் குவிந்திருக்கின்றன.
இவைகளை உண்மையாக மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல.அவர்களுக்கு துணையாக இருந்த பௌத்த மதகுருக்களும் பௌத்த தலைவர்களும் இது தங்களுடைய நாடு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இப்படித்தான் நான் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றேன்.அவ்வாறான விடயங்களை களைந்து மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பது கஷ்டம். எங்களுடைய போராட்டத்திலே நான் பிடித்த வழி என்னவென்றால் உண்மை, நீதி, நேர்மை, பொறுப்புகூறுதல். என்பனவாகும்.
நாங்கள் போரிலே பெருந்தொகை யான மக்களை இழந்தவர்கள் என்றாலும் இலங்கையில் வாழத்துடிக்கின்ற மக்களுக்கு வாழ வழிவகைகளைச் செய்யவேண்டும். என்பதற்காக நாங்கள் ஒரு நல்லிணக்க செயற்பாட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வெளிநாடுகளிலே உலக தமிழர் பேரவையின் தலைவராக பல நாடுகளுக்கும் நான் சென்று கடந்த 7ஆண்டுகளாக கடினமாக வேலை செய்திருக்கின்றேன். அத்தோடு ஜெனிவாவில் 25 ஆண்டுகளைப் பூர்த்திசெய்துவிட்டேன். இப்போது நாங்கள் இலங்கை அரசை ஒரு சர்வதேச வலைக்குள் போட்டிருக்கின்றோம். எங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலை இருக்கின்றது.இது எங்களுடைய சரித்திரத்திலே போர் வரலாற்றிலே ஒரு முக்கியமான கட்டமாக அமைந்திருக்கின்றது. எனக்கும் ஒரு முக்கிய கட்டம் முடிந்தது. அதாவது, சர்வதேசத்தின் உதவியை சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. ஏனெனில், 27 நாடுகள் புலிகளைத் தடைசெய்தன . 20 நாடுகள் ராஜபக்ஷவுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து போரை ஊக்குவித்தன.
இப்போதுதான் சர்வதேச நாடுகள் தமிழர்களை மனிதர்களாக, உரிமையுள்ளவர்களாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. அவர்கள் விட்ட பிழை நிறைய இருக்கின்றது. ஏன் ஐக்கிய நாடுகள் சபை கூட நிறைய பிழைகளை விட்டிருக்கின்றது. அதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். இப்போது அந்த நாடுகள் எங்களுடைய பிரச்சினைகளை உணர்ந்தவையாக உள்ளன.
சர்வதேச மனித உரிமை ஆணையாளர் ஹசைனை நான் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் உலகத் தமிழர்பேரவை மாநாட்டில் சந்தித்திருந்தேன்.இவ்வாறு நாங்கள் செய்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசு பொறுப்புக்கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகின்றது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்வது மிகவும் கடினம். சிங்களவர்களும் பௌத்த பிக்குகளும் காலாகாலமாய் போதித்து வந்த போதனைகளுக்கு இது ஒரு பெரிய பிடியாக இருக் கிறது. தமிழர்களைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அத்தகைய முயற்சிகளை மெதுவான முறையிலேயே எடுத்து வருகின்றது. ஆனால், அதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏனெனில், தமிழர்களாகிய நாங்கள் சிங்களவர் களின் காலில் விழுவதல்ல. ஆனால், ஒரு யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக எங்களுக்கு வேண்டிய தீர்வான சுயகௌரவத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஒரு பாகமாகவே இந்த யாப்பு திருத்தம் மேற்கொள்ளப் படுகின்றது.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தமட்டில் ஒரு நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகிறது. சிங்களத் தலைமைகள் தமிழர்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்று. ஆனால், ஒருநாளும் அவ்வாறான ஒரு இயல்பை வளர்த்துகொள்ளாதீர்கள். இது முற்றிலும் தவறு. எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் போராட முடியாது. எனவே, நம்பிக்கை உடையவர்களாக எமது முயற்சிகளை இதய சுத்தியுடன் செயற்படுத்துங்கள். சர்வதேசம் எங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
அவர்கள்தான் எங்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தியிருந்தார்கள். இன்று அவர்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய சக்தியை அமுக்கத்தை நாங்கள் இலங்கை அரசின் மீது திணிக்கவேண்டும். எனவே, எங்களுடைய கையில் இருக்கின்ற மிக முக்கியமான சக்தி சர்வதேசத்தின் கண்காணிப்பாகும். அதை நாங்கள் சரியான முறையில் பாவிக்க வேண்டும். அதேவேளை, இரண்டு பக்கமும் யோசிக்க வேண்டும். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தேர்தலை வைத்துக்கொண்டு நாடு இரண்டாகப் பிரிக்கப்படப்போகின்றது என அவர்களைக் குழப்புகிறார்கள்.
அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். அதில் தெளிவானது என்னவென்றால், சமஷ்டி என்ற சொல்லை முதன் முறையாக இலங்கையில் பாவித்தது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவாம். இது 1927ஆம்ஆண்டு நடந்துள்ளது. அவர் மலையக சிங்களவர்கள் கண்டிய சிங்களவர்கள் என்று பிரிப்பதற்காகத்தான் இதனை அறிமுகப்படுத்தியிருந்தார்.
ஆனால், அப்போது எவரும் இது தொடர்பாக எதையுமே தெரிவிக்கவில்லை. ஆனால், 1949 ஆம் ஆண்டு தமிழிலே செல்வநாயகம் சமஷ்டி ஆட்சி என்று தொடங்கி தமிழரசுக் கட்சியாக ஆரம்பமான பின் எல்லோருக்கும் அவ்வார்த்தை பிடிக்கவில்லை. ஆனால், உண்மையில் சமஷ்டியில் எந்த பிரிதலும் வரப்போவதில்லை.
உண்மையிலேயே சமஷ்டி ஆட்சி அதிகாரப்பகிர்வு என்று பேசிக்கொண்டு போகும்போது 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலே சிங்களவர்களுக்குப் புரிந்துவிட்டது இவர்கள் அதாவது, தமிழர்கள் நாட்டைப் பிரிக்கத்தான் போகிறார்கள் என்று ஊறிவிட்டது. சமஷ்டி என்ற வார்த்தைக்கு இதுவரையில் சிங்களத்தில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் சமஷ்டி என்று கூறும்போது அதன் நன்மை, நோக்கம் என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால், சிங்களவர்கள் அவ்வாறு யோசிப்பது கூட இல்லை. அதனால் நான் அந்த பல்கலைக்கழக விழாவுக்கு வருகை தந்திருந்த சிங்கள மாணவர்களுக்கு சொன்னேன், தயவு செய்து இனியாவது சமஷ்டி என்றால் என்னவென்று உங்களுடைய மக்களுக்குத் தெளிவுப்படுத்துங்கள் என்று.
மனிதர்களாக சமத்துவத்துடன் அனைவருடனும் வாழவேண்டிய ஓர் அமைப்புத்தான் சமஷ்டி.அது உலகம் முழுவதும் இருக்கிறது.அதைத் தொடக்கிவைத்தவரும் பண்டாரநாயக்கதான். ஆகையினால் நல்ல கருத்துகளை எடுங்கள். எனவே பிழை யாக கருத்துகளை பரப்புவதை நிறுத்தவேண்டும்.இவ்வாறான ஒரு நேரத்தில்தான் புத்திஜீவிகள் சரியான ஒரு விளக்கத்தைக் கொடுத்து அந்தநிலையில் இருக்கின்ற மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறான ஒரு அடிப்படையில்தான் நான், இறைவன், மதங்கள் எங்களுடைய நாட்டின் பிரச்சினைகள் என்ற தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு பேச்சை நடத்தியிருந்தேன். மதங்களைப் பற்றிப் பேச அதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச எனக்கு சக்தியிருக்கிறது.

கேள்வி: அருட்தந்தை அவர்களே நீங்கள் இப்படிக் கூறுகின்றபோதிலும் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்திருந்த கருத்தை நான் இங்கே முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.இலங்கையைப் பொறுத்தவரையிலே பொறுப்புக் கூறல் விடயத்திலே எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் நீங்கள் இப்போது கூறியிருக்கும் விடயம் என்னவென்றால் அரசை முழுமையாக நம்பாமல் இருக்கமுடியாது. ஆனால் இப்போது ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் கால அவகாசம் கொடுத்தும் பல மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில் தென்பகுதியில் இடம்பெறும் அரசியல் சவால்களை வைத்துக்கொண்டும் அரசு எந்தவகையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் எப்படி இந்த அரசை நம்ப முடியும்? எமது கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும் அநீதிகளாக இருக்கும்போது நாம் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும்?.
பதில்: உண்மைதான்; கஷ்டம்தான். எங்களுடைய நீண்டகால அனுபவம் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றது. இவர்களை நம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்து கிழித்தெறிந்திருக்கிறார்கள். அது உண்மை. நான் மறுக்கவும் இல்லை;மறைக்கவும் இல்லை.இவ்வாறான தகவல்களை நான் என்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றேன். அநீதி எங்கள் வாழ்வில் நீண்டகாலமாக தொடர்கின்றது.எங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. அதன் அடிப்படையில் எங்களுடைய தமிழ் மக்கள் வேறு எவரையும் நம்பமுடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தீர்வு கிடைப்பதற்கு ஓரளவேனும் நம்பிக்கையிருந்தால்தான் முன்னோக்கிச் செல்லலாம். விரக்தியில் ஆரம்பித்தோம் என்றால் ஒன்றுமே நடைபெறாது.அவர்கள் எமக்கு நிறைய விடயங்களை செய்துகொடுக்கவேண்டும்.
வெளிநாட்டவர்கள் அவதானிப்பது போல அவர்கள் ஆமை வேகத் திலேயே தான் செல்கிறார்கள். முக்கியமான விடயங்களைப் பின்தள்ளிக் கொண்டு போகிறார்கள். காரணம் அவர்கள் சிங்கள மக்களின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடந்துகொள் கிறார்கள். கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன. அதனை நான் நேரடியாக அரசதலைவர் சிறிசேன விடம் தெரியப்படுத்தியிருக்கின்றேன். நான் தமிழ் மக்களுக்காக தான் பேசிக்கொண்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் சிங்கள மக்களின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டுதான் எல்லாம் செய்கிறீர்கள்.எனவே, இது கடினமான ஒரு விடயம்தான்.அவர்களும் இன்றுவரை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
வெளிநாட்டினர் அதை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தவேண்டும். தொடர்ந்து இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அது நீடிக்கவேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் பொறுப்புக்கூறவேண்டும். எவ்வாறு பொறுப்புக்கூற போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பார்ப்போம் எவ்வாறு கூறுகிறார்கள் என்று.
தமிழ் மக்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான். ஆமாம் நாங்கள் உண்மையில் ஏமாற்றப்பட்டமை உண்மைதான். இம்முறை எங்களுக்கு தனித்துவமான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனைத் தவறவிட்டால் அது எங்களுக்கு இனி கிடைக்காது. நாங்கள் அதிகமாக கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், அடுத்தது என்ன? என்பதுதான். எனவே நாம் இந்தச் சந்தர்ப்பத்துக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நிச்சயமாக கட்டாயமாக கொடுக்கவேண்டும். சிலநேரம் தோல்வியில் கூட முடியலாம். ஆனால், நாங்கள் விலகிக்கொண்டால் அதற்குப் பிறகு சர்வதேசம் எங்களுக்கு ஒன்றுமே செய்யாது. அதற்குப் பிறகு எமக்காக பேச எவரும் இல்லாமல் போவார்கள்.
எனவேதான் நாம் சர்வதேசத்துடன் சேர்ந்து கொடுக்கக் கூடிய ஒத்துழைப்பை மெல்ல மெல்லக் கொடுக்கின்றோம். அதனையிட்டு விமர்சனம் செய்யும்போது குழப்பிக் கொள்ளக்கூடாது. தேவையில்லாத விமர்சனங்களைச் செய்துகொண்டு அதனைத் தூக்கியெறிந்துவிடக்கூடாது.அதனால் யாதார்த்தமாக நம்பிக்கை இழக்காது நாங்கள் நின்று பேசவேண்டும். உலகமும் அதற்கு ஒரு சாட்சியாக இருக்கின்றது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே, நீங்கள் வழங்குவது விமர்சனத்துடன் கூடிய தமிழர்களுக்கான ஆதரவு. ஆனால், இந்த அரசானது சமிக்ஞைகளாக, அடையாளங்களாக ஒரு சில விடயங்களைச் செய்திருக்கின்றது. ஆனால், காத்திரமான முக்கியமான விடயங்களிலே பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கஎளிலே அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக, இந்த அரசயாப்பிலே சமஷ்டி இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையிலே அது தொடர்பான கருத்துகள் வெளிவரும் நிலையிலே தென்பகுதியில் இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது ஜனாதிபதி, பிரதமர் அனைவருமே கூறுகிறார்கள். இது ஒற்றையாட்சி என்று.இவ்வாறு ஒரு சிறிய எதிர்ப்பு வந்தால் கூட அப்படியே சரணாகதி அடைகின்ற நிலையில் எதிர்ப்பைப் பதிவுசெய்கிறார்கள்.இப்படியிருக்கும் நிலையிலேயே கடந்த காலத்தில் இல்லாத உறுதிப்பாடு இன்றைய நிலையிலே இருப்பதாக நீங்கள் உணர் கிறீர்களா?
பதில்: கடந்த காலத்தில் இல்லாத அவ்வாறான உறுதியான நிலைப்பாடு இப்போது இருப்பதாக நான் கூறமாட்டேன். இல்லை வரவும் முடியாது.முயற்சி எடுக்கின்றார்கள் என்றுதான் சொன்னேன். எங்களுடைய பக்கத்தை நாங்கள் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும். நாங்கள்தான் குழப்பிவிட்டோம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்று தான் நான் சொல்கின்றேன். ஐக்கிய நாடுகள் அவர்களுக்கு பிறப்பித்திருக்கும் பிடி மிகவும் வலிமையானது.
அதிலிருந்து வெளிவருவதற்காக அவர்கள் பல்வேறான வியாக்கியானங்களைச் செய்கிறார்கள்.அதைப் பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது. எம் பக்கத்தில் நாம் ஒற்றுமையாக நிற்போம். நீங்கள் தெரிவுசெய்த தலைவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்றுதான் நான் சொல்வேன். அதிலும் குறிப்பாக, புலம்பெயர்ந்த மக்கள் இவ்வாறான விரக்தி நிலைக்குச் சென்றுவிடக் கூடாது.
புலம்பெயர்ந்தவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டில் இருப்பவர்கள்தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் எப்படியாவது போராடியேனும் ஒரு தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என்பது தான்.எனவே தரமான விமர்சனங்களை முன்வையுங்கள். தேவையற்ற விவாதங்கள், விமர்சனங்கள் தேவையற்றவை. எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை. எனவே, அதற்கேற்ற வகையில் ஒரு சரியான தீர்வை நோக்கிச் செல்வோம்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே, இந்த புலம்பெயர் தமிழர்கள் அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு செய்த பங்களிப்பை எப்படி கூறுவதென்றால் இந்த யுத்தத்திலே மிலேச்சைத்தனமான முறையிலே புலிகளைத் தோற்கடித்த அரசு, தமிழ் மக்களையே ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துவிட்டது என்று அந்த ஒரு நினைப்பிலே மிதந்துகொண்டிருந்தபோது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து, இந்த அரசுக்கு மேலே சர்வதேசத்தின் பார்வையை திருப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள். அப்படி புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் உங்களுடைய அமைப்பு போன்றவற்றின் தடை நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில அமைப்புகளின் தடை நீக்கப்படவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையிலே இந்த அரசு எதையாவது செய்தாவது சர்வதேச அழுத்தத்தில் இருந்து வெளிவர முயன்றுகொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இங்கே வருகை தந்தது இந்த அரசுக்கு ஒரு முட்டுக்கட்டை கொடுப்பதுபோல அல்லது உதவிக்கரம் நீட்டுவதுபோல அமைந்துவிடாதா?
பதில்: இல்லை. ஒருபோதும் இல்லை. எங்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியபோது நான் சொன்னது மற்றவர்களின் பெயரும் உடனடியாக நீக்கப்படவேண்டும். இதைப் பற்றி அண்மையிலும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான் இங்கு வந்துபோவது புலம்பெயர் மக்களுக்கும் ஒரு ஆறுதலைக் கொடுக்கட்டும். நான் 36 வருடங்களாக மலையகத்தின் நுவரெலியாவின் தோட்டபுற மக்களின் கல்விக்கு ஒரு அமைப்பை இயக்கி வருகிறேன். "சென் பீட்டர்ஸ் வுமன்' என்ற அமைப்பு 36 ஆண்டுகளாக பெண்களுக்காக செயற்பட்டு வருகின்றது. அதைத்தவிர, வவுனியாவிலும் வாழ் பெண்களுக்காகவும் 6 வருடங்களாக ஓர் அமைப்பை நடத்தி வருகின்றேன்.என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டுதான் இருக்கின்றேன். புலம்பெயர்ந்த மக்களும் செய்கிறார்கள். இன்னும் அதிகமாக இத்தகைய உதவிகளைச் செய்யவேண்டும்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே நீங்கள் குருத்துவ பணியில் பல ஆண்டுகள் இருந்து உங்களது 80 வயதைத் தாண்டிவிட்டீர்கள்.இப்போது இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?எமது போராட்டம் தொடர்பிலே நீங்கள் உங்கள் அடிமனதில் இருந்து சொல்ல விளைகின்ற செய்தி என்ன?
பதில்: புலம்பெயர் மக்களின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் நான் நன்றாக அவதானித்து வந்துள்ளேன்.எனக்கு ஜேர்மனியுடன் 50ஆண்டுகள் தொடர்பு. அங்கு பல பல்கலைக்கழகங்களில் படிப்பித்திருக்கின்றேன்.ஆகையினால் 1983ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்த மக்கள் எல்லோரையும் நான் நன்கு அறிவேன். இன்றைய சந்ததிகளைப் பொறுத்தமட்டில் இரண்டாம் மூன்றாம் சந்ததியும் வந்துவிட்டது.
இப்போது எல்லோரும் வசதி வாய்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய பிள்ளைகளை சரி நம் மக்களுக்கு சேவை செய்ய அனுப்பிவைக்க முடியும். அண்மையில் எமது குளோபல் தமிழ் போரம் அமைப்பின் ஊடாக 18 மருத்துவர்களை லண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வரவழைத்து எம்முடைய தோழமையை காட்டுவதற்காக தென்பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்ய வைத்தோம். அவர்கள் இரண்டு வாரம் இங்கு சேவையாற்றியிருந்தார்கள்.
ஊடகங்களிலும் அது வெளிவந்திருந்தது.இது ஓர் அடையாளமாகும். ஆகவே உறவை வளர்க்கவேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது மக்களைக் குழப்பும் செய்திகளைப் பரப்பக்கூடாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் காரணமாக இருபுறமும் குழப்பம்தான் ஏற்படும்.இந்த மண்ணைக் காக்க நம்மக்களைக் காக்க ஒரு தீர்வுக்காகப் பாடுபடுவோம்.போரிலே பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கிறோம். இப்போது ஒரு தீர்வுக்காக எப்படியாவது போராடுவோம்.
கேள்வி: விடுதலைப் புலிகளின் கொள்கைகள் சமகாலத்துக்கு எந்த வகையில் பொருத்தமாக அமைந்திருக்கின்றன?புலம்பெயர் மக்கள் இன்னமும் அதிலே பற்றுறுதியோடு இருப்பது எமது எதிர்காலத்துக்கு நல்லதாக அமையுமா?.
பதில்: போர் முடிந்த பின்பு வந்தவர்கள் ஒரு மாதிரியாக வேறு வகையான வாழ்வைக் கண்டுவிட்டார்கள்.வெட்கக்கேடான ஒரு விடயத்தை இப்போது கூறுகின்றேன்.போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களுக்காக உயிரைத் தியாகம்செய்த இளைஞர்களைப் பார்த்து தமிழ்மக்கள் கைகளைத் தட்டினார்கள். ஆனால் இன்றைக்கு அதே தமிழினம் போர் முடிந்த பின்பு அவர்களுக்கு வாழ்வளிக்காமல் தள்ளி வைக்கின்றது. வாழ வழியில்லாமல் இருப்பவர்களுக்கு நாங்கள் ஏதாவது செய்யவேண்டும். எவராக இருந்தாலும் சரி நமக்காக வாழ்ந்தவர்களுக்காக நாம் எதையாவது செய்யவேண்டியது அவசியமாகும்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே தற்போதுள்ள தமிழ் தலைமை இருக்குமானால் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த உரிமைகள்கூட கிடைக்காது என்ற பொருளில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.இப்போதிருக்கின்ற தமிழ்த் தலைமை மீது உங்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருக்கின்றது?அவர்கள் ஓர் உண்மையான இதய சுத்தியுடன் செயற்படுகிறார்கள் என்று நினைக்கின்றீர்களா?
பதில்: ஜனநாயகத்தில் அவ்வாறான குறைகள் இருக்கத்தான் செய்யும்.நான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு என்னை விற்றவன் அல்லன்; ஒத்துழைப்பு கொடுக்கின்றேன்; அவர்களுடைய முயற்சிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பும் வழங்குவேன்.
கேள்வி: நீங்கள் ஜனநாயகத்தைப் பற்றிக் குறிப்பிட்டதில் அதில் சாதக,பாதக விடயங்கள் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோன்று நமது தமிழ் தரப்பு தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது ஒரு சாராருக்கு அதிருப்தி இருக்கின்றது. இந்த நிலைமையிலே தமிழருக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக உங்களுடைய பார்வை எப்படி இருக்கின்றது?
பதில்: உள்நாட்டு அரசியலைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை.உள்நாட்டு அரசியலில் இறங்கவும் மாட்டேன்.என்னுடைய பார்வையில் இப்போது இருக்கின்ற தலைமைத்துவம் இவர்கள்தான். மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அந்த மக்க ளால் தெரிவுசெய்யப்படாதவர்களும் தோல்வியுற்றவர்களுமே மாற்றுத் தலைமை வேண்டுமென கதைக்கின்றார்கள்.அதற்கு என்ன செய்ய முடியும்? மற்றொரு வகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்குத் தேவையானவற்றை செய்வதில்லை. அது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். நான் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வருகின்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தின் முன்னேற்றம் அவ்வளவு தூரம் திருப்தி அளிப்பதாய் இல்லை. நான் மற்றவர்களைக் குறைகூற விரும்பவில்லை. இப்போதிருக்கின்ற தலைமைத்துவம் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றது என்பது உண்மை.

கேள்வி: அருட்தந்தை அவர்களே..... நீங்கள் ஒரு மாத காலப்பகுதியை வடக்கிலே செலவிட்டிருக்கின்றீர்கள். அங்கு காணிப் பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் தொடர்பாகப் போராடுவதைப் பார்த்திருப்பீர்கள்.இவற்றைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றியவை என்ன?
பதில்: நான் உள்நாட்டுக்கு வந்து மட்டுமல்ல, வெளிநாட்டில் இருந்தபடியும் அவதானித்துக்கொண்டிருந்தேன்.மிகவும் வருத்தப்படக்கூடிய விடயம் அவர்களுடைய காணி கொடுக்கப்படாதது மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை வழங்காமை என்பனவாகும். இது பெரிதும் மனவருத்தத்திற்குரியது.
ஆனால், இந்தக் குறுகிய காலத்துக்குள் நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை. ஆனால் அவர்கள் கேட்பதற்கு ஆவனசெய்ய வேண்டும்.போராட்டங்கள் தேவை. ஆனால் சிலர் தங்களுடைய நோக்கத்துக்காக போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டக்கூடாது. அது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இப்போது கலாசார சீரழிவுகளும் பரவி வருவதை அவதானிக்க முடிகின்றது.
தொடக்கத்தில் நாங்கள் இராணுவத்தைத்தான் குறை கூறியிருந்தோம். ஆனால், இன்று ஏதேதோ ஒழுக்கக்கேடுகள் பதிவாகின்றன.இவற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமானது. போர் நடைபெற்ற காலத்திலே ஒரு ஆள்தான் பிரபாகரன். ஆனால், போர் முடிந்த பிறகு எல்லோரும் பிரபாகரன்களாகி விட்டார்கள். இப்போது இருக்கின்ற அமைப்புகள் பந்தயம் ஒடுவதுபோல் ஓடாமல் கால்பந்தாட்டம் ஒடுவது போல ஓடவேண்டும் என்றார்.
எங்களுடன் இணைந்துகொண்டு இவ்வாறான தகவல்களை வழங்கிய அருட்தந்தை அவர்களுக்கு எமது நன்றிகள்.
நேர்காணல்-அருண் ஆரோக்கியநாதர்

No comments:

Post a Comment