Wednesday, August 14, 2019

கோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா?


அருண் ஆரோக்கியநாதர்

பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவது பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக இருக்குமா ? அன்றேல் முட்கள் நிறைந்த கடினப்பாதையாக இருக்குமா ? என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சரியமில்லை. 

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ஒரு அளவுகோலாக வைத்து எதிர்வரும் தேர்தலை நோக்கினால்  ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால்  பல விடயங்கள் ஒன்றுகூடிவரவேண்டியது அவசியமாகும்.



2015ம் ஆண்டு தேர்தலின் போது இலங்கையின் பெரும்பான்மையினராக விளங்கும் பௌத்த சிங்கள (70% ) மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற போதும் மஹிந்த ராஜபக்ஸவினரால் தேர்தலை வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில்  சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ஸவால்  5,768,090 (47.58%)வாக்குகளையே பெறமுடிந்தது.

ஏப்ரல் மாதத்தில்  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து  சிங்கள பௌத்த தேசியவாதம் நாட்டில் அலையாக உருவெடுத்த நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை ராஜபக்ஸ தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சிங்களவர்கள் மத்தியில் அதிகமாக இன்னமும் இருக்கின்ற நிலையில்  சிங்கள மக்களில் 80 சதவீதமானவர்கள்  கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்குமிடத்து அவர் வெற்றிபெறுவதைத் தடுத்துவிடமுடியாது. ஆனால் சிங்கள மக்களிலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற உண்மையையும் பொய்மையையும் பிரித்தறியும் அறிவுடைய கணிசமானவர்கள் உள்ளனர்.  இந்த நிலையில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெள்ளைவான் கோத்தபாயவிற்கு வாக்களித்திட முன்வருவது சாத்தியமில்லை.

எதிர்வரும் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து அவர்களின் தேசிய உணர்வை என்பதிலும் துவேச உணர்வை  தூண்டிவிடும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இதன் மூலம் சிங்கள மக்களில் பெருமளவானோரின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்கலாம் . அது நடந்தால் கோத்தபாய சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றிபெற்றுவிடலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றுமாதங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையிலும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. 

சிறுபான்மையினரிடையே குறிப்பாக தமிழ் மக்களிடையே கோத்தபாய என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் அவர்களை ஆட்கொள்வது இயல்பானது. இதற்கு அவரது காலத்தில் அரங்கேறிய வெள்ளைவான் கடத்தல் படுகொலைகள் இறுதிப்போர் கொடூரங்களை நினைத்தாலே போதுமானது. அவ்வாறானவரை தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை.

  ராஜபக்ஸவினரோடு இணைந்துநிற்கின்ற சில தமிழ் கட்சிகளுக்காக சில ஆயிரம் வாக்குகள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும். ஆனால் அது இறுதிவெற்றிக்குத் தேவையான ஆதரவாக பரிணமிக்க வாய்ப்பில்லை. மற்றைய முக்கிய வாக்குவங்கியான முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து அரங்கேறிய அடாவடி நடவடிக்கைகளும் வெறுப்புப்பிரசாரங்களும் அவர்கள் மத்தியில் இன்னமும்  வேதனைநிறைந்ததாகவும் விரக்தியைத்தருவதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர்களது வாக்குகளும் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெறும் நோக்குடன் கோத்தபாய முஸ்லிம் கட்சிகள் சிலவுடன் உடன்படிக்கைக்கு செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.


அதேபோன்று  வடமாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சர் உட்பட சிலரை வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் திட்டத்தை ராஜபக்ஸதரப்பினர் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்களின் எண்ணம் ஈடேறினாலும் அது சில ஆயிரம் வாக்குகளையே சிதறடிக்கக்கூடும் . 

இப்படிப் பார்க்கையில் கோத்தபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி கனவு நிறைவேறுவதற்கு இன்னமும் பல தடைகளைத் தாண்டியாகவேண்டியுள்ளது. 

ஒரு வீரனுக்கு அழகு இறுதிவரை போராடிப்பார்ப்பது. கோழைதான் உண்மையாக தோற்றுப்போகுமுன்பே தோல்விப்பயத்தில் தோல்வியை ஒப்புக்கொள்பவன்.  கோத்தபாய ராஜபக்ஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுண அறிவித்த பின்னரே ஏதோ அவர் ஜனாதிபதியாக தெரிவாகிவிட்டதாக  அனேகமான ஊடகங்களும் அடிவருடி அரசியல்வாதிகளும் காவடியெடுத்து ஆலவட்டம் வீசுகின்றதைக் காணமுடிகின்றது.

 2015ம் ஆண்டில்  நாட்டின் அரச இயந்திரம் பாதுகாப்பு படைகள் ஊடகங்கள் என அனைத்து முக்கிய விடயங்களும் கைவசம் இருந்தபோதும்  ராஜபக்ஸ தரப்பினர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட  மக்களின் ஆதரவோடு தோற்கடிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 52 நாட்களுக்கு அரங்கேறிய  அரசியல் சதி  நடவடிக்கையும் ஜனநாயகத்தின் மீது அசையா நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்ட வரலாறுகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. உண்மையாவே ஜனநாயகப்பற்றுணர்வோடு செயற்படும் இடத்து எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயகத்திற்கு ஆதரவான  சக்திகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முற்றுமாய் அற்றுப் போய்விடவில்லை என்பது திண்ணம்.

No comments:

Post a Comment