Thursday, December 16, 2010

தாயக மண்ணில் இருதசாப்தங்களுக்கு பின்னர் ஆஷஸ் தொடர் தோல்வியை எதிர்நோக்கும் அவுஸ்திரேலியா

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்றுவருகின்ற ஆஷஸ் டெஸ்ற் கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி நாளைய தினம் பேர்த் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வாரம் அடலைட்டில் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ற் போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 71 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளின் முடிவுகளுக்கு அமைவாக 1ற்கு 0 பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னணி வகிக்கின்றது .

24 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி இனிங்ஸ் வி;த்தியாசத்தில் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது முதலாவது டெஸ்ற் போட்டியின் போது இரட்டைச்சதமடித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் அலிஸ்டர் குக் இரண்டாவது போட்டியிலும் 149 ஓட்டங்க்ளைப் பெற்று அணிக்கு சிறப்பான அத்திவாரத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்

.பிறிஸ்பேர்ன் கபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காது 235 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அம்மைதானத்தில் அதுவரையில் அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்ட டொன் பிரட்மனின் ஓட்ட எண்ணிக்கையை முறியடித்திருந்த அலிஸ்டர் குக் இரண்டாவது போட்டியில் பெற்ற சதத்தின் மூலம் பிரட்மனின் மற்றுமொரு சாதனையை சமன்செய்திருந்தார் .

26வயதிற்கு முன்பாக 15 சதங்களைப் பெற்ற டொன் பிரட்மனின் சாதனையையே அலிஸ்டர் குக் சமன்செய்திருந்தார். 26வயதிற்குள் அதிக டெஸ்ற்  சதங்களைப் பெற்றவர் என்ற சாதனை தற்போது சச்சின் டெண்டுல்கர் வசமுள்ளது .டெண்டுல்கர் 26வயதிற்குள் 19சதங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது


அடிலைட்டில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ற் கிரிக்கட் போட்டியின் திருப்புமுனையான ஆட்டமாக கெவின் பீற்றர்ஸனின் துடுப்பாட்டமே அமைந்தது .மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பீற்றர்ஸன் விமர்சகர்களின் ஐயப்பாடுகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் அற்புதமாக விளையாடி 227 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணி மிக வலுவான மொத்த ஓட்டத்தை பெறுவதற்கு வழிவகுத்தார்

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் அதாவது 18 மாதங்களுக்கு பின்னர் டெஸ்ற் போட்டிகளி;ல் கெவின் பீற்றர்ஸன் குவித்த முதலாவது சதமாக இது அமைந்ததுடன் டெஸ்ற் கிரிக்கட் வாழ்வில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் 30வயதுடைய பீற்றர்ஸன் டெஸ்ற் கிரிக்கட் அரங்கில் அறிமுகமாகிய ஐந்துவருடகாலத்தில் பெற்ற 17வது சதமாகவும் அமைந்தது

இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் தோல்வியைவிடவும் அது தோல்வியைத்தழுவிய விதம் பல்வேறு கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் வழிகோலியுள்ளது

முதலாவது போட்டியில் பந்துவீச்சில் பிரகாசிக்கத்தவறிய நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக அவுஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்த மிச்சேல் ஜோன்ஸனை அணியில் இருந்து நீக்கும் கடும் முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அவுஸ்திNலிய அணி இரண்டாவது போட்டியில் அடைந்த அவமானகரமான தோல்விக்குப் பின்னர்கடுமையான அதிரடி முடிவுகளை எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது

பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் தன்னை மீளாய்விற்குட்படுத்த வேண்டிய நிலைமை அவ்வணிக்கு தோன்றியுள்ளது .

கடந்த தசாப்தகாலத்தில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக திகழ்ந்த அணித்தலைவர் ரிக்கி பொன்டிங்கின் துடுப்பாட்டம் ஒருகாலத்தில் சச்சின் டெண்டுல்கர் பிரயன் லாராவுடன் ஒப்பிட வைத்த அந்த அசாத்திய மேதாவிலாசத் தன்மையை இழந்துள்ளமை மட்டுமன்றி சாதாரண வீரருக்குரித்தான ஓட்டக்குவிப்பையும் இழந்துள்ளமை அவ்வணிக்கு பெரும் பின்னடைவைக்கொடுத்துள்ளதென்றே கூறவேண்டும்

 இரண்டாவது டெஸ்ற் போட்டியையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 2001ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக ரிக்கி பொன்டிங் முதல் இருபது வீரர்கள் வரிசசையில் கூட இடம்பெறாமை அவரது துடுப்ப்hட்ட வீழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றது

ஆரம்பத்துடுப்பாட்டவீரராக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரகாசித்துவந்த சைமன் கடிச் காயமுற்றுள்ளமையும் தொடரின் ஏனைய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் அவ்வணியின் நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது .

மார்க்கஸ் நோர்த்தின் துடுப்பாட்டம் நோர்த்தில் இருந்து சவுத்திற்கு போய்விட்டதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிறேக் சப்பல் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார் அந்தவகையில் மார்க்கஸ் நோர்த்தின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிப்பதாகவுள்ளது

மூன்றாவது டெஸ்ற் போட்டிக்கான அணியில் சைமன் கடிச்சின் இடம் கைமாறப்போவது உறுதியாகிவிட்டாலும் மார்க்கஸ் நோர்த்துடைய இடமும் நிச்சயமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போதுள்ள வீரர்களைப் பார்க்கையில் ஷேன் வொட்ஸன் ரிக்கி பொன்டிங் மைக்கல் கிளார்க் மைக்கல் ஹஸி பிரட் ஹடின் ஆகியோரின் சாதனைகள் நிருபிக்கப்பட்டதொன்றாக காணப்படுவதால் அவர்கள் தமக்கேயுரியதான உயரிய துடுப்பாட்ட ஆற்றலைக் கண்டுகொள்ளும் நிலையில்  துடுப்பாட்டத்தை அவுஸ்திரேலியா சரிசெய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது .

ஆனால் பந்துவீச்சே அவ்வணிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது கடந்த 30வருடகாலத்தில் தாம் கண்ணுற்ற மிக மோசமான பந்துவீச்சாக தற்போதுள்ள பந்துவீச்சாளர்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் காணப்படுவதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எந்தளவிற்கு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பதற்கும் அந்நாட்டு ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றதென்பதற்கும் ஆதாரமாக அவுஸ்திரேலிய ரசிகர்கள் ஓய்வுபெற்ற நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோர்னை மீண்டும் அணிக்கு திரும்புமாறு கோரியுள்ளனர் .

இதற்காக www.bringbackwarne.com என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கட் ரசிகர்கள் இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளதுடன் வோர்னிற்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் .

இது எந்தளவிற்கு அவுஸ்திரேலிய நிலைமை மோசமாகியுள்ளதென்பதற்கு ஒரு அறிகுறியாக நோக்கப்படுகின்றது

மறுபுறத்தில் இங்கிலாந்து அணி நாளுக்கு நாள் பலம்பெற்றுவருவதை அதன் ஆற்றல் வெளிப்பாடுகள் உணர்த்திநிற்கின்றன .தற்போதைய அணியின் துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஏறத்தாழ ஆற்றலின் உச்சத்தில் காணப்படுவதுடன் அவுஸ்திரேலியா குறித்து கடந்தகாலத்தில் கொண்டிருந்த அச்சமுடக்கநிலையை களைந்து சுதந்திரமாக அடித்தாடுவதைக் காணமுடிகின்றது


அணித்தலைவர் அன்ட்று ஸ்ரோஸ் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் அலிஸ்டர் குக் ஜொனத்தன் ட்ரோட் கெவின் பீற்றர்ஸன் போல் கொலிங்வுட் இயன் பெல் மட் ப்றயர் என அவ்வணியின் துடுப்பாட்டவரிசையைக் காணும் போதே எதிரணிக்கு அச்சநிலை ஏற்படும் வகையில் ஆற்றல்கள் பிரமிக்கவைப்பதாய் மாறிவருகின்றன

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஜேம்ஸ் அன்டர்ஸன் கிரஹாம் ஸ்வான் ஆகியோரின் சிறப்பான ஆற்றல் வெளிப்பாடுகளாலும் ஏனைய வீரர்களின் பக்கத்துணையாலும் வலுவானதாக காணப்படுகின்றது .முக்கிய பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் ப்ரோட் உபாதைகாரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும் மேலதீக வீரர்கள் திறமைசாலிகளாக இருப்பதால் அவரின் வெற்றிடத்தை இங்கிலாந்து அணியால் இலகுவில் நிவர்த்தித்துவிடமுடியும்

ஆக மொத்தத்தில் பாரிய மாற்றங்கள் இடைப்பட்ட காலத்தில் ஏற்படாதவிடத்து கடந்த 1986-87ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் டெஸ்ற் தொடரை இங்கிலாந்து அணி வென்றெடுப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய நிலையில் பிரகாசமாகத் தெரிகின்றன

போரிய அழிவிற்கு பின்னர் அன்றேல் தோல்விக்குப் பின்னர் மீண்டெழுவதற்கு உதாரணமாக சாம்பலில் இருந்து மீள உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையை கோடிட்டுக்காண்பிப்பர். அவுஸ்திரேலிய அணி தற்போதைய ஆஷஷ் தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் சாம்பலில் இருந்து மீள உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுமா அன்றேல் வீழ்ச்சி மேல் வீழ்ச்சிகாணுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

1 comment: