Friday, August 29, 2014

ஊவா தேர்தல் அவலம்


 
 
 
 
 
இலங்கையில் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகள் அரங்கேறுவதொன்றும் புதிய விடயமல்ல என்றாலும் ஊவாவில் இருந்து கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு மனவேதனையைத் தருவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதறடிப்பதாக அமைந்துள்ளன.

மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னமும் சில வாரங்களே உள்ளநிலையில் மொனராகலை மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான 18 பிரசார அலுவலகங்கள் 24மணிநேர காலப்பகுதிக்குள் அடித்துநொருக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி எதிரணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டும் எதிரணியின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான “கபே’ அமைப்பு விடுத்துள்ள கடுந்தொனியிலான அறிக்கையில் இருபத்திநான்கு மணிநேர காலப்பகுதியில் 18 தேர்தல் பிரசார அலுவலகங்கள் மீது ஆயுதம் தரித்த குழுக்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை காரணமாக மொனராகலை மாவட்டத்தில் எதிரணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமது உயிருக்கு அஞ்சுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பிபிலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே மிகவும் மோசமான தேர்தல் வன்முறைச்சம்ப வங்களில் சில கடந்த 24ஆம்திகதி அதிகாலை தொடக் கம் அடுத்துவந்த ஆறுமணி நேரத்திற்கு தொடர்ச்சியான முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நினைத்த தெதனையும் செய்யலாம் தண்டனை வழங்கப்படமாட்டாது என்ற ரீதியில் தாக்குதல்களை நடத்தியோர் காடைத்தனத்தை அரங்கேற்றியிருப்பதனையும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமையையும் “கபே’ கண்காணிப்பாளர்கள் தமது அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலா ளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நேற் றையதினம் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்துள் ளன.
திங்களன்று படல்கும்புர பிரதேசத்தில் வெடித்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர் பொலிஸார் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். வன்முறைக்கும்பலொன்று அப்பிரதேசத்திலேயே தரித்துநின்றபடியால் தாக்குதலில் காயமுற்றோரை மருத்துவமனைகளுக்குக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை என்பதையும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தரொருவரே இவ் வாறு கூறியிருப்பது யார் இந்தத் தாக்குதல்களை உண்மையில் நடத்தினார்கள் என்பதைத் சாதாரண மக்களாலும் விளங்கிக்கொள்ள வழிகோலியிருக்கின்றது.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு தான்தோன் றித்தனமாக செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை கடுமையாகச் சாடியுள்ளதுடன் அதிகாரிகளின் கையாலாகாதத் தன்மையே மோசமடையும் சூழலுக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.
வடமாகாண தேர்தலைத் தொடர்ந்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் அறிக்கையில் 2010ஆம் ஆண்டில் அரசியல்சாசனத்துக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட 18வது திருத்தமானது நம்பகத்தன்மைமிக்கதும் போட்டித்தன்மையுடனானதுமான தேர்தலை நடத்துவதற்கான அரசியல்சாசன மற்றும் சட்டகட்டமைப்பினை மலினப்படுத்திவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கான நிபந்தனைகளையும் இல்லாமற் செய்துவிட்டதாக குறிப்பிட் டிருந்தது.

திங்களன்று வரையில் தேர்தல்வன்முறைகள் தொடர்பான 74முறைப்பாடுகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. வன்முறைகள் மூலம் எதிரணியின் செயற்பாடுகளை முடக்கி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என்று செயற்படுகின்ற தரப்பினர் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றமையால் தேர்தல் நெருங்க நெருங்க முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதென்பதைக் கணிக்க மேதைகள் தேவையில்லை.

No comments:

Post a Comment