Monday, August 4, 2014

மாற்றமா?

ஆசிரியர் தலையங்கம் -04-08-2014


இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்குட்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரை இந்திய அரசு தரப்பிலிருந்தும் தமிழ் நாட்டு அரசியல் தளத்திலிருந்தும் வந்த கடும் எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் அடுத்து பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலிருந்து அவசரமாக நீக்கப்பட்டதுடன், இந்தச் செயலுக்காக என்றுமில்லாதவாறு விழுந்தடித்துக்கொண்டு மன்னிப்புக் கோரப்பட்டுள்ள விவகாரமானது இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் முக்கியதொரு விடயமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


கொடூர ஆயுத மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போதும் இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் இன்னமும் அடையப்படவில்லை. அதற்கான அர்த்தபூர்வமான அடிப்படை நடவடிக்கைகளே எடுக்கப்படவில்லை என அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற மற்றும் அரசின் குறைகளை எடுத்துரைக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சிவில் சமூக அமைப்புக்கள் மீதும் நல்லெண்ணம் கொண்ட தனிப்பட்டோர் மீதும் அவப்பழிகளை சுமத்தியும் எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அசிங்கப்படுத்தியும் இலங்கையின் அரச சார்பு ஊடகங்களில் ஆக்கங்களும் விவரணங்களும் பிரசுரிக்கப்படுகின்றமையும் ஒளி ஒலி பரப்பப்படுகின்றமையும் வழமையானதொருவிடயமாகிவிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டினால் அன்றேல் இது தொடர்பில் விளக்கம் கோரினால் தவறு சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ இல்லையோ நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மென்மேலும் அசிங்கப்படுத்தப்படும் ஏதுநிலையே இதுவரையில் நிலவிவந்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தனது ஆவணப்படங்கள் மூலம்  உலகின் கவனத்தை ஈர்த்து நீதித் தேடலுக்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டவரான சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேயும் அவரது குழுவினருக்கும் எதிராக இலங்கையின் அரச ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆக்கங்கள் வெளியிடப்பட்டதையும் பொதுநல வாயப் மாநாடு தொடர்பாக கடந்த நவம்பரில் சனல் 4 குழுவினர் இங்கு வந்தபோது அவர்களது குழுவினர் பல தடவைகள் நேரிலே அவமானப்படுத்தப்பட்டமையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இதுபோன்று இன்னும் பல வெளிநாட்டு  மற்று உள்நாட்டு ஊடகவிலயாளர்களுக்கு எதிராகவும் மிகவும் கீழ்த்தரமான வகையில் ஆக்கங்கள் அரச  ஆதரவு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்ற  அரச சார்ப்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள், சிவில் சமூக அங்கத்தவர்களும் அரச சார்பு ஊடகங்களில் அவமானப்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.



தாம் செய்வதெல்லாம் சரி மற்றவர்கள் எதைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் நாட்டுக்கு எதிராகத் துரோகம் செய்கின்றனர், விடுதலைப்புலிகளின் அடிவருடிகளாச் செயற்படுகின்றவனர் என வறட்டுத் தனமான வாதத்தை முன்வைத்து விறாப்புடன் நடந்து வந்த இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளும் செயற்பாட்டின்  ஒரு கட்டமாகவா அன்றேல் எதிர்பார்த்திராத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான தற்காலிக நடவடிக்கையாகவா இவ்வாறான ஒரு பகிரங்க மன்னிப்பை இந்தக் கட்டுரைவிடயத்தில் கோரியிருக்கின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment