Friday, February 26, 2021

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?



 கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, 'புலம்பெயர் புத்திமான்கள்' நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். 

ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் விரோதிகள் எனப் பலவாறு நிந்தித்தார்கள். 

கடந்த வாரம், 'ஜெனீவாவில் தமிழர்களுக்கு நன்மை விளையாது' என்று, ஐ.நாவில் பணியாற்றியவர்களே சொல்லி விட்டார்கள். இவர்களின் மொழியில், 'மணிகட்டின மாடு' சொல்லிவிட்டது. இனி என்ன?   

உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மனித  உரிமைகளுக்கும் சர்வதேச நீதிக்குமான நிலையம், சமாதானத்துக்கும் நீதிக்குமான இலங்கை செயற்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து ஒழுங்குசெய்த 'இலங்கை: நீதி,சட்டம் ஒழுங்கு, ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்' என்ற தலைப்பில் அமைந்த கருத்தாடல் நிகழ்வில், இலங்கை தொடர்பில் பணியாற்றிய உயர்நிலை ஐ.நா அதிகாரிகள், சில முக்கியமான செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். இச்செய்திகள் மிக முக்கியமானவை.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றியோரில் ஒருவர், ஐ.நாவின் முன்னாள் துணைச் செயலாளர் நாயகமாக இருந்த சார்ள்ஸ் பெற்றி. ஐ.நா செயலாளர் நாயகம், ஜூன் 2010ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழுவை நியமித்தார். அக்குழு, தனது அறிக்கையை ஏப்ரல் 2011இல், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. 



அவ்வறிக்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, 'இலங்கை விடயத்தில் ஐ.நா தவறிழைத்தது' என்பதாகும். நிபுணர் குழு, தனது அறிக்கையில், 'மக்களைப் பாதுகாப்பதை, தனது பிரதான கடமையாகக் கொண்ட ஐ.நா, அந்தக் கடமையில் இருந்து தவறியது. இலங்கை விடயத்தில், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கத் தவறி,தவறிழைத்துவிட்டது' என்று குறிப்பிட்டது. 

இதையடுத்து, இலங்கையில் ஐ.நா நடந்துகொண்ட விதம் தொடர்பில், உள்ளக மீளாய்வு ஒன்றைச் செய்வதற்கான குழுவை, ஐ.நா செயலாளர் நாயகம் உருவாக்கினார். அக்குழுவின் தலைவராக இருந்தவரே சார்ள்ஸ் பெற்றி. ஒன்பது மாதகாலப் பணியின் பின்னர், அவ்வறிக்கை,  2012 நவம்பர் மாதம், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 128 பக்கங்கள் நீள்கிற அறிக்கை, 'பெற்றி அறிக்கை' எனப் பொதுவாக அறியப்பட்டது.

ஐ.நாவின் அமைப்பு ரீதியான செயற்பாட்டடை விமர்சிக்கும் உள்ளக மீளாய்வு அறிக்கையாக இது இருந்தும், ஐ.நா சபையின் அறிக்கை என்ற அடிப்படையில், அதில் சொல்லப்பட்ட விடயங்களுக்குள்ள பெறுமதியை மறுக்க இயலாது. 

அவ்வறிக்கை, 'இலங்கையில் ஓர் இனப் படுகொலை, அரங்கேறாது தடுப்பதற்கு வழிகள் இருந்தும், ஐ.நா அசமந்தப் போக்குடன் செயற்பட்டது' எனக் கோடிட்டுக் காட்டுகிறது. 

அதேவேளை, போர் முடிந்த பின்னர், மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் துன்பப்படுகையில், ஐ.நா வாளாவிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இன்றும் பொதுவெளியில், கிடைக்கின்ற  அறிக்கையில் சில பகுதிகள், கறுப்பு மையால் நீக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகள், ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனையும் அவரது பிரதான அலுவலர் விஜய் நம்பியாரையும் குற்றம் சாட்டுகின்றன.நடந்தேறிய மனிதப் படுகொலைக்கான இரத்தம் தோய்ந்த கரங்களுடையோராக இவ்விருவரையும் சுட்டுகின்றன. இதை, ஐ.நா பணியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். ஐ.நா பற்றிய மாயைகளைக் களையஇ இன்றும் வாசிக்கப் பயனுள்ள அறிக்கையையே சார்ள்ஸ் பெற்றி தந்திருக்கிறார். 

கடந்த வாரம், சார்ள்ஸ் பெற்றி என்ன சொன்னார் என்கிற விடயத்துக்கு வருவோம். கலந்துரையாடலின் போது, தனது தொடக்கவுரையை அவர் பின்வருமாறு நிறைவு செய்தார். 

'உலகளாவிய ரீதியில்,மனித உரிமை மீறல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுப்பதில் ஓர் அமைப்பாக, ஐக்கிய நாடுகள் சபை இன்று செயலிழந்துள்ளது. இதன் அர்த்தம், ஐ.நாவிடம் இதற்கான வழிமுறைகளோ கருவிகளோ இல்லை என்பதல்ல. மாறாக, அதற்கான தைரியமும் விருப்பமும் அதனிடம் இல்லை. அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி, ஐ.நாவின் சாசனத்தை நிறைவேற்றும் வகையில், ஐ.நா செயலாற்ற வேண்டும். இதை, ஐ.நா செய்யுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், உடனடியாகவும் குறுகிய கால நோக்கிலும் நீதியையும் தேவையையும் எதிர்பார்த்து இருப்போருக்குஇ நான் சொல்வது ஒன்றுதான்; ஐ.நாவை நம்பி இராதீர்கள். ஐ.நா, தனது சாசனத்தின் படி நடந்துகொள்ளும் என்று எதிர்பாராமல் இருப்பது நல்லது. அது பலத்த ஏமாற்றங்களையும் தேவையற்ற துன்பங்களையும் தவிர்க்க உதவும்'. 


இச்சொற்கள், மிகவும் சாதாரணமான ஒருவர் உதிர்த்தவையல்ல. 20 ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நாவில் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள். ருவாண்டா, மியான்மார், ஆப்கானிஸ்தான், கொங்கோ என பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளில் எல்லாம், ஐ.நாவின் அலுவலராகப் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள் ஆகும். 

சார்ள்ஸ் பெற்றியைத் தொடர்ந்து கருத்துரைத்த, ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிறீப்,  'பெற்றியின் கருத்துகளையே, நான் எதிரொலிக்கிறேன்' எனச் சொன்னார். தனது உரையின் நிறைவில் இரண்டு விடயங்களை அவர் அடிக்கோடிட்டார். 

'இலங்கையின் எதிர்காலம், இலங்கையர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இலங்கை மக்களே, தங்களுக்கான உரிமைகளை வெல்வதற்கும் தக்கவைப்பதற்கும் பங்களிக்க வேண்டும். அதேவேளை, மனித உரிமைகள் என்பதை, வெறுமனே ஒரு சமூகத்தின் நலன்களுக்கு மட்டுமே உரியதாகச் சுருக்கிவிடாதீர்கள். அது தவறானது. அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் கருத்தாக, மனித உரிமைகளை மாற்றுங்கள். இது அனைத்து இலங்கையருக்கும் ஆனது என்பதை நினைவில் கொள்ளுங்கள்'.      

இருவரது கருத்துகளும் மிக முக்கியமானவை. கடந்த ஒரு தசாப்த காலமாகக் கிளுகிளுப்பான, பரபரப்பான, உணர்ச்சிவசமான களமாக ஜெனீவா, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்களிடையே இருந்துவந்துள்ளது. 

இந்தக்களம் குறித்த நேர்மையானதும் வெளிப்படையானதுமான கருத்துகளை ஏற்கஇ எம்மில் பலர் தயார் இல்லை. ஏனெனில், போரின் நிறைவு முதல், 'தமிழ் மக்களுக்கான தீர்வு, ஜெனீவாவிலிருந்தே கிடைக்கும்' என்றுதான் பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

கடந்த பத்தாண்டு கால, ஈழத்தமிழ் அரசியல் போக்கைத் திரும்பிப் பார்த்தால்இ சில விடயங்களைப் புரிந்து கொள்ளவியலும். 

முதலில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்றும் இனி, தமிழ் மக்களின் உரிமைகளை, ஐ.நா உறுதிப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது. 

இந்தியா எவ்வாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அவ்வாறே வடமாகாண சபையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும் என்று சிலரும், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அகற்றிய அமெரிக்கா, இன்னோர் அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம்இ தமிழருக்கான தீர்வு சாத்தியமாகும் என்று, வேறு சிலரும் சொன்னார்கள். 

வடமாகாண சபையையும் கண்டோம்; மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் அகற்றப்பட்டுஇ நல்லாட்சி அரசாங்கத்தையும் கண்டோம். இன்று, தொடங்கிய இடத்தில் மீண்டும் வந்து நிற்கிறோம். தமிழ் மக்கள், தங்கள் மீதில்லாமல், பிற அனைத்தின் மீதும் நம்பிக்கை வைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது

இனியாவது நாம், அந்நியக் கனவுகளில் இருந்து அகல வேண்டும். எமக்கான போராட்ட வெளிகளை, நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் போராட்டத்தின் மையமாக்க வேண்டும். குறுகிய கட்சி அரசியலையும் வாக்கு அரசியலையும் விடுத்துஇ ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். 

ஜெனீவாவை வைத்து அரசியல் செய்பவர்களது உடனடிப் பிரச்சினை ஜெனீவாவில் என்ன நடக்கும் என்பதல்ல; மாறாக ஜெனீவாவுக்குப் பிறகு எங்கு கையேந்துவது என்பதுதான்.

கலந்துரையாடலின் நிறைவுக் கருத்தாக, சார்ள்ஸ் பெற்றி உதிர்த்த சொற்கள் மனங்கொள்ளத்தக்கவை: 

'இலங்கை மக்களுக்கான எனது அறிவுரை யாதெனில், ஐ.நாவை நம்பி இராதீர்கள்; நீங்கள் ஏமாந்துபோகக் கூடும். உங்கள் எதிர்ப்பாற்றலில் நம்பிக்கை வையுங்கள். ஐ.நாவை மையப்படுத்தி, உங்கள் மூலோபாயங்களை வகுக்காதீர்கள்' என்பதாக அமைந்துள்ளது.  

தமிழ் மக்களின் உரிமைக்கும் நீதிக்குமான நெடிய போராட்டத்தின் முக்கியமான ஒரு புள்ளியில் நிற்கிறோம். எம்முன்னே, இரண்டு தெரிவுகள் உள்ளன. தமிழ் மக்களுக்கு, அன்று முதல் இன்று வரை மறுக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும், சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கும் மறுக்கப்படுபவற்றையும் பரந்த நோக்கில் கண்டு, இன்றைய சூழலில் அனைத்து மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதற்கேற்ற அரசியல் கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் மக்களை  அணிதிரட்டப் போகிறோமா? அல்லதுஇ இன்னொரு சக்தியை 'ஆபத்பாண்டவர்' என்று நம்பிக் கையேந்தப் போகிறோமா?

ஆக்கம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

"முன்னாள் ஆளுநரின் மகனுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மையினரது நிலையை சிந்தித்துப்பாருங்கள்-"

 


முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்னவின் புதல்வர் மிகார குணரட்ண,  பேலியகொடை பொலிஸ் நிலையத்தில்  தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் உத்தரவிட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான இந்தத்தாக்குதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை இட்டுவருகின்றனர். 



குறிப்பாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ,தனது டுவிட்டரில் ' முன்னாள் ஆளுநரின் மகன் கொடூரமான முறையில் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகுமிடத்து வலுவற்றவர்கள் மற்றும் சிறுபான்மையினரது கதியை சிந்தித்துப்பாருங்கள்.  ஒரு சில பழங்கள் மட்டும் அழுகியிருக்கவில்லை மரமே அடியிலிருந்து அழுகிக்கிடக்கின்றது. இந்த நிறுவனமே செயலற்றுக்கிடக்கின்றது, வன்முறை நிறைந்ததாகவும் சட்டத்தின் ஆட்சிக்கு எவ்வித மதிப்பற்றதும், உரிய முறைமைகளைப் பின்பற்றாததாக காணப்படுகின்றது' என அவர் தெரிவித்துள்ளார். 





இந்தத் தாக்குதல் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்றி மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திக்கொன்ற பாதகி : மனதை உருக்கும் பிபிசி செய்தி

 

                               பணிப்பெண்

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.


சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த அந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.


பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

                                         கொலைகாரப் பாதகி


இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.


காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.


உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில்,காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.


கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.


காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.


பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.


தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.


குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை



தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.


பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.


வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.


தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.


குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.


14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.


பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.


கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன்இ படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.


இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.


இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.


இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.


இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.


2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.


பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.


பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.


பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.


பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.


ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உறங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.


அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.


ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.


பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.


இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.


எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.


பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா? அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா ?என்று மருத்துவர் கேட்ட போது பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும் மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.


முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.


போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.


பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.


ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.


நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.



அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.


தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.


கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.


நன்றி :பிபிசி

Wednesday, February 24, 2021

நீதியை நிலைநாட்டும் நோக்கம் இலங்கைக்கு அறவே இல்லை:சர்வதேச பொறுப்புக்கூறலே தற்போதைய தேவை!

 இறுதிப்போரில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டும் எவ்வித நோக்கமும் இலங்கைக்கு இல்லை என தெளிவாகியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் ஃபிஷர் சர்வதேச பொறுப்புக்கூறலே தற்போதைய தேவை என வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் நேற்றையதினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆற்றிய உரையைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் ஃபிஷர் தன து டுவிட்டரில், "இலங்கை வெளிவிவகார அமைச்சர்  மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் சர்வதேச குற்றங்களை மறுத்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளார்.  மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையையை ' பிரசார நடவடிக்கை' என நிராகரித்துள்ளார்.     இதனை செவிமடுத்த  பின்னர்  நீதியை நிலைநாட்டும் எந்தவித நோக்கமும் இலங்கைக்கு உள்ளதென்பதனை எவரும் நம்பமாட்டார்கள். சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கையே தற்போது தேவையானது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tuesday, February 23, 2021

வெறுமனே பிரச்சாரம் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை

 


கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வின் உயர் மட்டப் பிரிவு

2021 பெப்ரவரி 22, ஜெனீவா

 

தலைவர் அவர்களே,

உயர் ஸ்தானிகர் அவர்களே,

மரியாதைக்குரிய தூதுவர்களே,

கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,

 

1.      இன்று நான் உங்கள் மத்தியில் உரையாற்றும்போது, முன்னோடியில்லாத வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

 

2.      இலங்கையை இன அடிப்படையில் பிரித்து ஒரு தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாத பிரச்சாரத்திற்குப் பின்னர், உலகின் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிலிருந்து ஒற்றையாட்சி அரசு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, இலங்கையின் வீர ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக நடுநிலையாக்கின.

 

3.      இலங்கையில் பணியாற்றிய ஜனாதிபதி மற்றும் இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் தனது பயங்கரவாதத்தை விரிவுபடுத்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆகிய இரண்டு உலகத் தலைவர்களைக் கொலை செய்த உலகின் ஒரே பயங்கரவாத அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்.

                       

4.      பயங்கரவாதத்தின் முடிவானது, அனைத்து உரிமைகளிலும் மிகவும் மதிக்கத்தக்க உரிமையான, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.

 

5.      ஆயினும்கூட, இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற தீர்மானத்தைக் கொண்டுவருவதில் இலங்கைக்கு எதிராக மேலாதிக்க சக்திகள் ஒன்றிணைந்ததுடன், அது இன்றும் கூட இலங்கையின் தரப்பில் இருக்கும் நட்பு நாடுகளின் ஆதரவால் தோற்கடிக்கப்பட்டது. இந்த சபைக்கு முற்றிலுமான அரசியல் நோக்கங்கள் குறித்து மேலும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு நிகழ்விலும், நடைமுறை முறைகேடுகளையும், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தை எவ்வாறு அமைக்கும் என்பதையும் இலங்கை முன்வைத்தது.

 

6.      2015ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியேற்ற அரசாங்கம், மனித உரிமைகள் அரங்கில் முன்னோடியில்லாத வகையில், எமது சொந்த நாட்டிற்கு எதிரான தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையாளர்களாக இணைந்தது. அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத மற்றும் வழங்க முடியாத பல கடமைகளை நிறைவேற்றியது. இது 2019இல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களைப் புதுப்பிக்கும் நிலைக்கு தேசிய பாதுகாப்பை இட்டுச் சென்றதுடன், இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 

7.      இலங்கை மக்கள் இந்தத் தீர்மானத்தை நிராகரித்தமையானது, 2019 நவம்பரில் அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிய ஆணையின் மூலம் தெளிவாக வெளிப்பட்டது. இந்த ஆணையின் அடிப்படையில் இந்த சபையின் 43வது அமர்வில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக அறிவித்தேன். இந்த சபை உட்பட ஐ.நா. அமைப்புடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் நான் வெளிப்படுத்தினேன்.

 

8.      மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கை மேற்கொண்டுள்ள இந்த தன்னார்வக் கடமைகளை இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் செயற்படுத்துவதிலான தற்போதுள்ள வழிமுறைகளின் தொடர்ச்சி, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விஷேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல், காணிகளைத் திருப்புவதிலான முன்னேற்றம்இ வாழ்வாதாரத்தைக் குறைத்தல் மற்றும் அதற்கான புதிய வழிகளை உருவாக்குதல் போன்ற முன்னேற்றங்கள் குறித்து 2020 டிசம்பரிலும், எமது கருத்துக்களுக்கான விரிவான புதுப்பிப்புக்களை 2021 ஜனவரியிலும் வழங்கியுள்ளோம்.

 

9.      கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களை இலங்கை எதிர்த்துப் போராடியபோதிலும், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், நாங்கள் ஆகஸ்ட் 2020 இல் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடாத்தி, ஆசியாவின் மிகப் பழமையான நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் ஒன்றான எமது நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

10.    மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பு மனப்பான்மை இருந்தபோதிலும், இலங்கைக்கு எதிராக செயற்படும் கூறுகள் இந்த அமர்வின் போது இலங்கைக்கு எதிராக மற்றொரு நாடு சார்ந்த தீர்மானத்தை முன்வைக்க உத்தேசித்துள்ளன என்பதுடன், இது மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையின் இந்த நிராகரிக்கப்பட்ட அறிக்கை முக்கியமாக உள்நாட்டு விடயங்களின் பல சிக்கல்கள் மற்றும் இறையாண்மை கொண்ட சுய மரியாதை மிக்க நாட்டின் விடயங்களை உள்ளடக்கிய வகையில், நியாயமற்ற முறையில் அதன் நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையை வழங்கியுள்ளது.

 

11.    இந்த சபையின் அவசரமான கவனத்தை ஈர்க்கும் ஒரு சூழ்நிலையை இலங்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா என்பது குறித்து தமது சொந்தத் தீர்ப்பை வழங்குவதற்காக இந்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர் அரசுகளுக்கு நான் விட்டு விடுகிறேன், அல்லது இந்தப் பிரச்சாரம் அடிப்படையில் ஒரு அரசியல் நடவடிக்கையாக இருக்குமாயின், இந்த சபை நிறுவப்பட்ட மதிப்புக்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது. குறிப்பாக சில நாடுகளால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வழக்குத் தொடுப்பதில் இருந்தும் தமது வீரர்களைப் பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றப்படும் நேரத்தில், தமது நோக்கங்களின் போலி மற்றும் பாசாங்குத்தனமான தன்மையை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே கணிசமான மன உறுதியை இழக்கச் செய்கின்றது.

 

12.    செவிப்புலன், ஒருதலைப்பட்ச நடவடிக்கை அல்லது ஒரு கோண சந்தேகத்திற்குரிய ஆதாரங்களால் செல்லாமல், சபை செதில்களைக் கூட வைத்திருக்க வேண்டும். அதன் வழிகாட்டும் கொள்கைகளை பின்பற்றுதல் வேண்டும். இந்த சபையுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு இருந்தபோதிலும், இதுபோன்ற வெளிப்புறமாக இயக்கப்படும் விடயங்களை வலியுறுத்துவது பல சவால்களை ஏற்படுத்தும்.

 

13.    இந்த சபை அறிந்திருப்பதைப் போன்று, கடந்த நூறு ஆண்டுகளில் இது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான நேரமாவதுடன், கோவிட்-19 தொற்றுநோயைக் கடப்பதற்கும், நொறுங்கிய பொருளாதாரங்களைப் புதுப்பிப்பதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகளில் நாம் ஒன்றுபட வேண்டும். இந்த சபை உறுப்பினர்களிடம் அதன் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பை கவனத்தில் கொண்டு, இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் நிராகரிப்பதன் மூலம் எமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த சபையின் வளங்களும் நேரமும் இலங்கையில் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தேவையற்றது என நாங்கள் நம்புவதுடன், அது உலகளாவிய தெற்கின் இறையாண்மை நாடுகளுக்கு குறை ஊக்கமளிக்கும் செய்தியைக் கொண்டு செல்கின்றது.

 

14.    இந்த சபைக்குள்ளான பிளவுகளிலிருந்து எழும் கோபம் மற்றும் வேதனையை விட, முன்னோடியில்லாத தொற்றுநோயை எதிர்கொள்வதன் மூலம், காலத்தின் தேவை ஒற்றுமையாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, இந்தத் தீர்மானத்தை சபை நிராகரித்து, மூட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

 

15.    புத்த பகவானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி நிறைவு செய்கின்றேன்.

 

'சியலு சத்வயோ நிதுக் வெத்வாஇ நீரோகி வெத்வாஇ சுவபத் வெத்வா'.

 

எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கட்டும்இ

எல்லா உயிரினங்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்இ

எல்லா உயிரினங்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.






Monday, February 22, 2021

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜெனிவா கூட்டத்தொடர் இன்றையதினம் ஆரம்பம்

 


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று  (22) ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இலங்கையில் Covid – 19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்தும் கொள்கை, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயங்களில் முதன்மையான விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலட்டினால் இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்று ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையவழியில் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் வௌிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.

குறித்த குழுவில் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, வலய ஒத்துழைப்பிற்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்: ஐ.நா.வின் ஆரம்ப வரைபு கடும் ஏமாற்றமளிக்கிறது: - சி.வி.விக்னேஸ்வரன்

 


 ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள ஆரம்ப வரைபு(Zero Draft) கடும் ஏமாற்றமளிக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வரைபையிட்டுஇ பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


இவ்வார கேள்வி பதிலில், ஜெனீவா தூதுக் குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட 'சீரோ' வரைபு குறித்து ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் தெரிவிக்கையில், 'குறித்த முதல் வரைபானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர்ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.


குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக்கூட குறைவாக இருக்கின்றது. அந்தத் தீர்மானமும் அதனுடைய குறைபாடுகளால்தான் தோல்வியடைந்தது.


தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது இவ்வாறான ஒரு வரைபு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது. தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே, ஆறு வருடங்கள் சென்றுவிட்டன. இலங்கை அரசாங்கம், தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.


இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும் கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைபைத் தயாரித்தமை மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இதுகண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள்.


இவ்வாறான வரைபானது போர்க் குற்றங்களையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும் இனப் படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும். மனித உரிமைகள் சம்பந்தமாகவும் அடிப்படை நன்னடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும்.


பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ,  வடக்கு மசிடோனியா ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.


அதேநேரம், இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காண்கிறோம்.


புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும் நலவுரித்துக்களையும் அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். தமிழ் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ தெரியவில்லை.


இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா. பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.