Friday, February 26, 2021

"முன்னாள் ஆளுநரின் மகனுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மையினரது நிலையை சிந்தித்துப்பாருங்கள்-"

 


முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்னவின் புதல்வர் மிகார குணரட்ண,  பேலியகொடை பொலிஸ் நிலையத்தில்  தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் உத்தரவிட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான இந்தத்தாக்குதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை இட்டுவருகின்றனர். 



குறிப்பாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ,தனது டுவிட்டரில் ' முன்னாள் ஆளுநரின் மகன் கொடூரமான முறையில் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகுமிடத்து வலுவற்றவர்கள் மற்றும் சிறுபான்மையினரது கதியை சிந்தித்துப்பாருங்கள்.  ஒரு சில பழங்கள் மட்டும் அழுகியிருக்கவில்லை மரமே அடியிலிருந்து அழுகிக்கிடக்கின்றது. இந்த நிறுவனமே செயலற்றுக்கிடக்கின்றது, வன்முறை நிறைந்ததாகவும் சட்டத்தின் ஆட்சிக்கு எவ்வித மதிப்பற்றதும், உரிய முறைமைகளைப் பின்பற்றாததாக காணப்படுகின்றது' என அவர் தெரிவித்துள்ளார். 





இந்தத் தாக்குதல் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்றி மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment