Wednesday, August 19, 2009

இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதன் மூலம் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்த முடியும்இன்று உலக மனித நேய தினம்

அருண் ஆரோக்கியநாதர்

“மனித மலத்தில் நீந்தும் இடம்பெயர்ந்த மக்கள்” என்ற தலைப்புச்செய்தியை வாரஇறுதி ஆங்கிலப்பத்திரிகையில் பார்த்ததுமே மனித நேயம் உள்ளவர்களுக்கு இதயத்தில் நிச்சயமாக வலியெடுத்திருக்கும் எம்சக மக்களின் அவலவாழ்விற்கு என்றுதான் முற்றுப்புள்ளிவரும் என்ற அங்கலாய்ப்பு ஆட்கொண்டிருக்கும்.

மனிதநேயத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகெங்கிலும் விசேடவிதமாக இலங்கையிலும் உணரப்படும் நிலையிலே உலக மனிதநேய தினம் இன்று முதன்முறையாக கொண்டாடப்படுகின்றது .
.
மனித நேயதினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் மாறாக மனித நேயதினம் அனுசரிக்கப்படுகின்றது என எழுதினால் தானே சரியாக இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளே எழுந்துகொண்டாலும் எதற்கெதற்காகவோ தகுதியில்லாதவற்றுக்காக விழாவெடுத்துக்கொண்டாடும் உலகில் மிகவும் தேவையாக இருக்கின்ற மனிதநேயத்தை கொண்டாடுவது பொருத்தமே எனக்கண்டேன் .

மனித நேயம் என்ற வார்த்தையை அண்மைக்காலத்தில் நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றோம் பல்வேறுதரப்பினரால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் பகரப்பட்ட இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்னவாகவிருக்கும் என்ற ஆர்வம் பலரைப்போன்று எனக்குள்ளும் இருந்தகொண்டிருக்கவே இணையத்தளதேடலில் அந்த வார்த்தைக்கான வரைவிலக்கணத்தை தேடிப்பார்த்தேன்.


மனித நேயம் என்பதற்கு எண்ணற்ற வரைவிலக்கணங்கள் அதிலே தரப்பட்டிருந்தன அனைத்து மனிதர்களுக்கும் இரக்கத்தன்மை நல்லெண்ணம் அனுதாபம் போன்ற உயரியமனித குணாம்சங்கள் பாகுபாடின்றி உலகில் எப்பகுதியிலும் வியாபித்துக்கிடக்கவேண்டியதொன்றே மனித நேயம் என்றும் மனித நேயம் என்பது வரலாற்றில் வளர்ச்சி கண்டுவருகின்றதொன்று எனவும் ஒரு வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்படுகின்றது.

மனிதநேயர் எனப்படுவோர் மனித நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தம்மை அர்ப்பணிப்போர் என மற்றுமொரு வரைவிலக்கம் இருக்க இன்னுமொரு வரைவிலக்கணமோ மனித வாழ்வியல் மேம்பாடு மற்றும் மனிதர்களின் துன்பங்களைக் குறைத்தல் ஆகிய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களே மனித நேயர்கள் என சுட்டிக்காட்டுகின்றது எனினும் “மனிதத்தின் மீது இதயத்தில் அக்கறை கொண்டதன்மையே மனித நேயம் எனவும் மனிதத்தின் மீது இதயத்தில்அக்கறைகொண்டோரே மனித நேயர் என்றும் தரப்பட்டிருந்த எளிமையான வரைவிலக்கணமே என் இதயத்தில் தங்கியது

மனித நேயத்திற்கு உலகளவில் ஓர்தினத்தை ஒதுக்கி அதனைக்கொண்டாட வேண்டிய அவசியம் நீண்டகாலமாக உணரப்பட்டுவந்த போதிலும் கடந்தாண்டிலேயே அது கைகூடியது ஒவ்வொருவருடமும் ஓகஸ்ட் மாதம் 19ம்திகதியை உலக மனித நேயதினமாக கடைப்பிடிப்பதென்ற வரலாற்றுமுக்கியத்துவமிகு தீர்மானம் கடந்தாண்டு(2008) டிசம்பர் 11ம்திகதி சுவீடனால் முன்வைக்கப்பட்ட “ஐக்கியநாடுகள் சபையின் அவசர மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைத்தல் நடவடிக்கைகளை பலப்படுத்தல்” பற்றிய கூட்டுப்பிரேரணையை பிரேரணையை ஐக்கியநாடுகள் பொதுச்சபை ஏற்றுக்கொண்டதன் மூலமே இவ்வருடமுதல் சாத்தியமாகியுள்ளது அந்தவகையில் இந்தவருடமே முதன்முறையாக உலக மனித நேய தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உலக மனிதநேயதினமான இன்றையதினத்தில் மனிதநேயநோக்கத்திற்காகவும் அதன்வளர்ச்சிக்காகவும் பணியாற்றுபவர்களை கௌரவிப்பது மட்டுமன்றி தமது கடமைகளை முன்னெடுக்கையில் உயிரிழந்த மனிதாபிமான பணியாளர்கள் ஐநா மற்றும் அதனுடன் தொடர்புடையபணியாளர்கள் அனைவரையும் கௌரவிக்கின்ற உயரிய நோக்கம் உள்ளமை போற்றப்படவேண்டியதொன்றேயாகும் .தன்சகமனிதனின் நல்வாழ்விற்காக உயிரையே கொடுப்பதென்பது எத்தகைய உன்னதமான செயல் என்பதை நன்மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் .

இந்த வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்மானமானது அனைத்து அங்கத்துவநாடுகளையும் ஐநா கட்டமைப்பையும் சர்வதேச ஸ்தாபனங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களையும் வருடாந்தம் உரிய முறையில் உலக மனிதநேயதினத்தை கடைப்பிடிக்குமாறு அழைப்புவிடுக்கின்றது .

மனிதநேயதிற்காக உலக கலெண்டரில் ஒருநாள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளமையானது ஒரு மனிதநேய உலகிற்கும் மனிதநேய ஆர்வலர்களுக்கும் பிரதானமான வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளதுடன் ஆயுதமோதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்த பெரும்பேறாகவும் என சேர்ஜியோ வியரா டி மெல்லோ மன்றம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது

அமெரிக்க ஈராக் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நாட்களில் ஈராக்கிற்கான தனது விசேட பிரதிநிதியாக அப்போதைய ஐநா பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த ஐநா பணியாளரே சேர்ஜியோ வியரா டி மெல்லோ ஐநாவின் ஈராக்கிற்கான தலைமைப்பணிமனையின் மீது குண்டுநிரப்பிய வாகனம் மோதியமைகாரணமாக 2003ம் ஆண்டு ஒகஸ்ற் 19ம்திகதி சேர்ஜியோவும் அவரது மனிதநேய பணியாளர்கள் 21பேரும் கொல்லப்பட்டிருந்தனர் .இந்த மரணத்தினால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருந்த சேர்ஜியோவின் குடும்பத்தினர் மேற்கொண்ட முன்முயற்சிகளின் பயனாகவும் ஐநா எடுத்துக்கொண்ட விரிவான நடவடிக்கைகளின் பலனாகவுமே ஒகஸ்ற் 19ம்திகதியை உலக மனித நேயதினமாக அங்கீகரிக்கும் சரித்திரமுக்கியத்துவமிக்க மைல்கல் சாத்தியமாகியுள்ளது.
உலகின் மிகவும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் உதவிகள்மிகவும் அத்தியாவசியமாக தேவைப்பட்டவர்களுக்காக உதவிகளைச்செய்ய முனைந்தவேளையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 700ற்கு மேற்பட்ட மனித நேயப்பணியாளர்கள் தமது இன்னுயிர்களை தியாகம்செய்யநேரிட்டுள்ளதாக மனிதநேயநடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கியநாடுகள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது .

இலங்கையிலும் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த பல மனித நேயப்பணியாளர்கள் தமது விலைமதிப்பற்ற உயிர்களைத்தியாகம் செய்துள்ளனர் தாம் மட்டும் வாழ்ந்துவிட்டால் போதும் என்ற மனநிலை மேலோங்கிவரும் உலகில் மிகவும் அவசியமான நெருக்கடியான சூழலிலும் தமது உயிரைப்பற்றி கவலைகொள்ளாமல் மக்களுடன் மக்களாக நின்று மூதூரில் மரித்துப்போன ஏசிஎவ் பணியாளர்கள் 17பேரினதும் நினைவுகள் என்றென்றுமே மக்களின் மனங்களிலிருந்து நீங்கிவிடாது அதேபோன்றே இன்னும் பலரது உன்னத தியாகங்களும் வாழும் காலமெல்லாம் நெஞ்சத்தில் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை . போர் நிறைவிற்கு வந்த பின்னரும் தொடருகின்ற இன்றையநெருக்கடி மிக்க சூழலில் பணியாற்றுகின்ற மனித நேயப்பணியாளர்களையும் இன்றையதினத்தில் நாம் எம்நினைவுகளில் ஏந்தி உரிய கௌரவத்தை வழங்குவதே மிகவும்பொருத்தமானது வாழும் போது மனிதரைத் தூற்றுமட்டும் தூற்றிவிட்டு மரணத்தை தழுவியபின்னர் அதே மனிதரைப்புகழும் இந்த சமூகக்கட்டமைப்பில் இருந்து நாம் விடுபட்டு வாழும் போதே கௌரவத்திற்கு பாத்திரமானவர்களை கௌரவிக்கும் உயரிய குணத்தை நாம் எம் உள்ளங்களில் நிறைத்துவிடவேண்டும் .

உலகம் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான சவால்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக “இடப்பெயர்வு” தொடர்ந்துமே காணப்படுவதாக ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார் . ஐநா மதிப்பீட்டுத் தரவுகளின் படி உலகின் ஒட்டுமொத்த சனத்தொகையான 6.7 பில்லியன் மக்களில் ஏறக்குறைய ஒரு வீதமானவர்கள் தத்தமது சொந்த நாடுகளுக்குள்ளேயே இடப்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆயுதமோதல்கள் வன்முறைகள் அபிவிருத்திநடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனர்தங்கள் காரணமாக இடப்பெயர்விற்கு உள்ளானவர்கள் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இனப்பிரச்சனைகாரணமாக இலங்கையில் இருந்து மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்களைவிடுத்து இலங்கையில் சுமார் ஆறுலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் இருப்பதாக ஐநா தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் அதிகம் பேசப்படுவதாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் உள்ளவர்கள் இருந்தபோதிலும் புத்தளத்தில் ஏறத்தாழ இருதசாப்த காலமாக வாழ்கின்ற ஒருலட்சம் வரையான முஸ்லிம் மக்களும் இந்த இடம்பெயர்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களேயாவர் பாதுகாப்புதேடி தமதுசொந்த நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றவர்களையே அகதிகள் என்று அழைக்கின்றோம் .


இந்த அகதிகளின் நிலைமையை விடவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஐநா சுட்டிக்காட்டுகின்றது அகதிகளைப்போன்று சர்வதேச அகதிகள் சட்டத்தின் கீழ் உள்நாட்டில் இடம்பெயர்விற்கு உள்ளானவர்கள் பாதுகாக்கப்படுவதில்லை அந்த வகையில் அகதிகளிலும் பார்க்க சில சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளானவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது சொந்த நாடுகளிலேயே விசாரணைகளுக்கு உள்ளாக நேர்வதுடன் துஷ்பிரயோகத்திற்கும் பாராபட்சத்திற்கும் புறக்கணிப்புக்களுக்கும் உள்ளாக வேண்டியநிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐநா அதன் இணையத்தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது இதற்கு இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் வாழவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக எதிhக்கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பிடும் சுமார் மூன்றுலட்சம் வன்னிமக்களின் நிலையே சான்றுபகர்கின்றது

அண்மையில் நடந்து முடிந்த மூன்று நிகழ்வுகள் இந்த மக்களின் மீதான பார்வையை மீண்டுமாக இலங்கை வாழ்மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்து உணர்த்திநிற்கின்றது
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத்தேர்தல்இ மடுமாதா ஆவணித்திருவிழா மற்றும் வவுனியாவில் மழைவீழ்ச்சி ஆகியனவே அந்த மூன்று நிகழ்வுகளாகும் .


வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள முகாம்களில் தமது மூன்றுலட்சம் உறவுகள் தொடர்ந்துமே விருப்பிற்கு மாறாக வைக்கப்பட்டுள்ளநிலையில் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பது இலகுவான காரியமாக அமைந்துவிடாது என்பதையே தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தேர்தல் தொடர்பான தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் .
இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினரை விடுவிப்பதற்கு இன்னுமொரு தேர்தல் வரை காத்திராது விரைவில் அவர்களை விடுதலை செய்ய காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார் மடுத்திருவிழா திருப்பலியில் தமது பிரசங்கங்களில் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் யாழ் ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் ஆகியோரும் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர் .

முகாம்களில் உள்ள மக்கள் சிறைக்கைதிகளைப்போன்று தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறிய யாழ் ஆயரின் கருத்துக்கள் மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பேராயர் மல்கம் ரஞ்சித்தினது கருத்துக்களும் நிச்சயமாக செவிமடுக்கப்படவேண்டியவை வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்த மழைவீழ்ச்சி ஏற்கனவே சொல்லோணா வேதனைகளுக்கு மத்தியில் வாழும் மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கவே வழிகோலிவிட்டுள்ளது .
இந்த மக்களை விடுவிக்க வழிசெய்யவேண்டும் என எதிர்கட்சித்தலைவர் விடுத்து கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச்செயலாளரோ முகாம்களில் பொதுமக்களின் போர்வையில் மறைந்துவாழும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இதுவெனக்குறிப்பிட்டதுடன் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து உடனடியாக மக்களை விடுதலை செய்துவிடமுடியாது எனக்கூறியுள்ளார் .

முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனையை அரசாங்கம் பாதுகாப்பு கோணத்திலேயே தொடர்ந்தும் நோக்கிவருவதாகவும் வெறுமனே பாதுகாப்பு கோணத்தில் மட்டுமே பார்க்காது மனித நேய கோணத்திலும் பார்க்க வேண்டும் என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா குறிப்பிடுகின்றார் . தமது சொந்த வீடுகளில் தோட்டந்துறவுகளுடன் வாழ்ந்த வன்னிமக்களில் ஒருபகுதியினர் அண்மையில் பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்டவெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர் என்பதற்கு மேலாக மலங்கலந்த தண்ணீருக்குள் அகப்பட்டுக்கொள்ள நேர்ந்ததாக வார இறுதி ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன் இது மனித கௌரவத்தையே கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துவிட்டுள்ளது மழையால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மழைவற்றியதும் தற்காலிகத்தீர்வைக் கண்டுவிடமுடியும் ஆனால் இந்த மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு அவர்களை இயன்றவிரைவில் மீளக்குடியேற்றுவதே இந்த மனிதாபிமானப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும் என அண்மையில் வன்னி கலாசார மன்றம் என்ற அமைப்பின் தலைவர் புதியாகம சந்திரரத்ன தேரர் சுட்டிக்காட்டியிருந்ததையும் மீள பதிவுசெய்தல் இத்தருணத்தில் பொருத்தமாகவிருக்கும் .

மனிதநேய தலையீடு என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை விரைவாக மீளக்கட்டியெழுப்புவதுடன் அவர்களது கௌரவத்தை துரிதமாக நிலைநிறுவத்துவதன் மூலமாகவே வெற்றியளிக்கும் என மனித நேய ஒன்றியங்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜீவன் தியாகராஜா கூறிய கூற்றை எம்சிந்தனைக்கு நிறுத்தி எமக்கு முன் பெரும் மனிதநேயப்பிரச்சனையாக பரிணாமித்து நிற்கின்ற வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு அனைத்துதரப்பினரும் முன்வருவதன் மூலமாகவே உண்மையான மனித நேயத்தை வெளிகாட்டிடமுடியும்.

4 comments:

 1. வாழ்த்துக்கள் அருண் !

  பதிவுலகில் காலடி எடுத்து வைத்த உங்களை பதிவர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன் .

  ReplyDelete
 2. It was so gud.... anna
  மனித நேயம் கருதி இன்னுயிர் தியாகம் செய்த உறவுகளை தலைவணங்கவும்
  பிறந்த மண்ணிலே அகதிகளாய் இல்லலுறும் உறவுகள்
  மேல் அரசுக்கு மனித நேயம் படற வேண்டி வேண்டிடவும் வாய்பழித்த
  உங்கள் பதிவடிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  ReplyDelete
 3. "நெஞ்சு பொறுக்குது இல்லையடி.... இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.... வஞ்சகரேயடி அவர் வாய்ச்சொல்லில் வீரரடி.."

  உங்கள் எழுத்துப்பணி மூலம் ஓர் விடிவு பிறக்க வேண்டும்... மனித நேயம் மிளிர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்....

  செயல் வீச்சும் தேவை அண்ணா....
  முன் வந்து பணி செய்ய நான் தயார் !

  ReplyDelete