Thursday, August 12, 2010

காலங்களை வென்ற சாதனையாளன் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்



with the Little Master 
சோவியற் ஒன்றியம் உலக வல்லரசுகளிலொன்றாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது பேர்லின் சுவர் ஜேர்மனியை ஊடறுத்து பிரித்துக்கொண்டிருக்கின்றது .ஹொங்கொங் பிரித்தானியரது ஆளுகையின் கீழ் இருக்கின்றது சதாம் உசைன் ஈராக்கின் ஜனாதிபதியாக அதிகாரம் புரிகின்றார்.  இந்தக்காலப்பகுதியில் தனது டெஸ்ற் கிரிக்கட் பிரவேசத்தை மேற்கொண்ட வீரர் இன்னமுமே விளையாடிக்கொண்டிருக்கின்றார் ஆனால் மேற்குறிப்பிட்ட எதுவுமே இன்று உலகில் இல்லாமற் போய்விட்டது .


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் காலங்களை வென்ற ஒரு மகத்தான சாதனையாளன் என்பதற்கு இதனை விடவும் சான்றுகள் தேவையென்றால் அதனையும் முன்வைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் .


1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற முதலாவது போட்டியே சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதலாவது டெஸ்ற் போட்டி . அந்தப்போட்டியின் பின்னர் இந்தியப் பிரதமர்களாக வி.பி சிங் ,சந்திர சேகர் ,பி வி நரசிம்மராவ் ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,தேவ கௌடா,இந்தர் குமார் குஜ்ரால் தற்போது மன்மோகன் சிங் என ஏழு பிரதமர்களை இந்தியா கண்டுவிட்டது ஆனால் நூறுகோடியைக் கடந்து விட்ட இந்திய நாட்டினதும் மேலும் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களதும் அபிமான வீரராக தாம் அறிமுகமானது முதலாக தனது ஆற்றலை டெண்டுல்கர் பறைசாற்றிவருகின்றார்


சாதனைக்குபின் சாதனையாக தொடர்ந்து கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்வில் இலங்கை அணிக்கெதிராக கடந்தவாரம் பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ற் போட்டி மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது


டெஸ்ற் கிரிக்கட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனைக்கும் டெண்டுல்கரே உரித்துடையவர் என்பது இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டது அவுஸ்திரேலிய அணிக்காக 18வருடங்கள் விளையாடிய அவ்வணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ 168போட்டிகளில் விளையாடி ஏற்படுத்தியிருந்த சாதனையே 169வது போட்டியில் பங்கேற்று டெண்டுல்கர் தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது


இவ்வருடப்பிற்பகுதியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக டெஸ்ற் தொடரில் பங்கேற்குமிடத்து அது டெஸ்ற் கிரிக்கட் வாழ்வில் டெண்டுல்கரின் 21வது வருடப்பூர்த்தியாக அமைந்துவிடும் என்றால் பிரமித்துப்பார்க்கவே முடியும்


நடப்பு டெஸ்ற் தொடரில் இலங்கை அணியுடனான இரண்டாவது போட்டியில் சுரேஷ் ரெய்னா தனது டெஸ்ற் பிரவேசத்தை மேற்கொண்டிருந்தார் ஆனால் ரெய்னா மூன்று வயதுக்குழந்தையாக இருந்தபோது விளையாட ஆரம்பித்தவர் இன்று அதே ரெய்னா டெஸ்ற் அறிமுகத்தை மேற்கொள்ளும் போதும் இளைஞருக்குரிய உற்சாகத்துடன் ஓய்வுபெறுவது எப்போது என்ற கேள்விக்கிடமின்றி விளையாடிக்கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்துகின்றல்வா!


1970ம் ஆண்டிற்கு பின் வந்த காலப்பகுதியை கிரிக்கட் விளையாட்டின் நவீன காலம் என்று அழைக்கின்றனர் இதற்கு பின்னரே சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி அறிமுகம் உட்பட பாரம்பரிய டெஸ்ற் கிரிக்கட்டின் முகம் மாறி கிரிக்கட் விளையாட்டில் புதிய பரிமாணங்கள் உள்வாங்கப்பட்டன அப்படியான நவீன கிரிக்கட் காலப்பகுதியில் அதிக காலமாக விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் திகழ்வதற்கு ஒரு சிறுவனுக்குரிய ஆர்வப்பிடிப்புடன் தொடர்ச்சியாக விளையாடிவருவது முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது


இதுவரை 169 டெஸ்ற் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 13837 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ற் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரென்ற பெருமை மிகு சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்வதுடன் 48 சதங்களையும் குவித்து அதிலும் முதலிடத்தை வகித்துநிற்கின்றார்


டெண்டுல்கர் இதுவரை விளையாடிய டெஸ்ற் போட்டிகளின் எண்ணிக்கையை வைத்துப்பார்க்கையில் மொத்தமாக 845 நாட்கள் அதாவது 2வருடங்களும் 115நாட்களும் விளையாட்டரங்கிலேயே டெஸ்ற் கிரிக்கட்டிற்காக செலவிட்டிருக்கின்றார்


இதுமட்டுமா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரையில் டெண்டுல்கர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 442 இலங்கை அணியில் இருந்து தற்போதையநிலையில் ஏறத்தாழ ஒதுக்கப்பட்டுவிட்ட சனத் ஜயசூரிய 444 போட்டிகளில் பங்கேற்று ஏற்படுத்திய சாதனையை முறியடிப்பதற்கு இன்னமும் மூன்று போட்டிகளே அவருக்கு அவசியமாக இருக்கின்றது


இதுவரை விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டிகளை எடுத்துப்பார்க்கையில் டெண்டுல்கர் ஒரு வருடமும் 77நாட்களும் களத்தில் விளையாடியிருக்கின்றார்


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் இதுவரையில் எந்தவொரு வீரராலும் எளிதில் நெருங்கமுடியாத படிக்கு 17598 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதிக பட்சமாக 46 சதங்களையும் அடித்துள்ளார்


இதனைத் தவிர முதற்தரப்போட்டிகள் உத்தியோகப்பற்றற்ற ஒருநாள் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த டுவன்டி டுவன்டி போட்டிகள் என டெண்டுல்கர் பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கையையும் எடுத்துள்ள ஓட்டங்களையும் பார்த்தால் பிரமிப்பு பன்மடங்காகிக் கொண்டே போகின்றன


சாதனைகளாக அடுக்கிக்கொண்டே போகும் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்க்கையை எடுத்து நோக்குகையில் அவர் பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கைக்காகவோ அன்றேல் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கைகாகவோ அன்றி நுட்பத்திறன் லாவகம் அசத்தல் ஆதர்ஷயம் அதிரடி அனைத்துமே கலந்த மேதாவிலாசத்துடுப்பாட்டத்திற்காகவே சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களால் ஆராதிக்கப்படுகின்றார் என்றால் மிகையல்லவே



துடுப்பாட்ட வீரர்களிற்கெல்லாம் சிகரமாக நோக்கப்படும் டொன் பிரட்மனே தாம் வாழும் காலத்தில் தன் நிகழ்காலப்பதிப்பாக பாராட்டிய வீரர் சச்சின் டெண்டுகல்கர் என்கின்றபோது அவரின் மகத்துவம் துலாம்பரமாகின்றது

இதுவரை சாதித்த சாதனைகளை பார்க்கின்றபோது எமக்கெல்லாம் மலைப்பாக இருப்பது உண்மைதான் ஆனால் எவ்வித சலனமும் இன்றி இளைஞனுக்குரிய துடிப்புடன் விளையாடும் டெண்டுல்கரைப்பார்க்கின்றபோது அடுத்த வரும் சில போட்டிகளையும் தாண்டி அடுத்துவரும் சில வருடங்களும் அவரது சாதனைப்பயணம் தொடர்வது நிச்சயம் என்றே கூறத்தோன்றுகின்றது

அப்படி விளையாடுமிடத்து டெஸ்ற் போட்டிகளில் 50 சதங்களைக்குவித்த முதல் வீரர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50சதங்களைக் குவித்த முதல் வீரர் சர்வதேச கிரிக்கட்போட்டிகளில் 100 சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் போன்ற அபூர்வ சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்பது அனைவருக்கும் வெளிச்சம் .

டெண்டுல்கர் தனது கிரிக்கட் காலத்தில் முதல் நிலை டெஸ்ற் கிரிக்கட் வீரராக திகழ்ந்திருக்கின்றார் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் முதல் நிலையில் நீண்டகாலம் நீடித்திருக்கின்றார் அவரது காலத்தில் இந்திய அணி டெஸ்ற் தரவரிசையில முதலிடத்தை பெற்றிருக்கின்றது ஆனாலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் உலகக்கிண்ணத்தை வென்றெடுக்கவில்லை என்பதே பெரும் குறைகளிலொன்றாக இருக்கின்றது என சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன்

அடுத்தவருடம் உபகண்டத்தில் நடைபெறும் உலகக்கிண்ணப்போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்று அதனையும் நிவர்த்திசெய்யும் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது

யார் என்ன சொன்னாலும் இதுவரை டெண்டுல்கர் சாதித்த சாதனைகளும் காண்பித்த எடுத்துக்காட்டும் மனிதமுள்ள காலம் வரை போற்றிப்புகழப்பட்டுக் கொண்டேயிருக்கும் .....

                                                       Kesari Sports -11/08/2010

No comments:

Post a Comment