Wednesday, August 25, 2010

விடியலைத் தேடி வெளிநாடு செல்லும் வீட்டுப்பணிப்பெண்களின் வாழ்க்கை இன்னும் இருளில் ......

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26533


உடலில் 23 ஆணிகளுடன் சவுதியிலிருந்து நாடுதிரும்பிய பணிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்கவை மேற்கோள் காட்டி ஆங்கில இணையத்தளமொன்றில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த செய்தி பலருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் .
ஆனால் கடந்த வாரம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கெடுத்த செய்தியாளர்களுக்கு அதைவிடவும் அதிர்ச்சியான செய்தியை கேட்கக்கூடியதாக இருந்தது .


இலங்கை போன்ற ஆசியநாடுகளிலே கலாசாரத்தை பேணிப்பாதுகாக்கின்ற பெண்கள் எல்லாவற்றிலும் மேலானதாக தமது மானத்;தை போற்றுகின்ற நிலையில் அந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய நிலந்தி  என்ற பெண்ணோ 'கெட்டுப்போன பொருட்களைக் குறித்து யாருமே அலட்டிக் கொள்வதில்லை சொர்க்புரிக்கு போவதாக தான் ஆசைகாட்டி அனுப்புகிறாங்க ஆனால் அங்கு போனதும் தான் அது நரகம் என்று தெரியுது ' என்று ஊடகவியலாளர்கள் முன்பாக வெளிப்படையாக பேசியபோது அங்கிருந்தவர்கள் ஒருகணம் அதிர்ந்துபோயினர் .

சவுதி அரேபியாவில் சொல்லோணா இன்னல்களை அனுபவித்து அண்மையில் நாடுதிரும்பியிருந்த பணிப்பெண்ணான இவர் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கொடுமைகளை மானம் காக்க வேண்டும் என தனக்குள்ளே மறைத்துக்கொள்ளாமல் தன்னைப்போல் வேதனைகளுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்துள்ள ஏனைய பெண்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற பிறர்நல சிந்தையுடன் துணிகரமாக பேசியதை பாராட்டியே ஆகவேண்டும்

தமது குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும் சீதனம் தேடவேண்டும் கல்விக்கு உதவவேண்டும் வறுமை நிலையைப் போக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக புதிதாக திருமணமான பெண்கள் பிள்ளைகளுள்ள தாய்மார்கள் திருமணமாகாத பெண்கள் திருமணமாகி கணவர்மாரை இழந்தவர்கள் கணவர்களால் கைவிடப்பட்டவர்கள் என வருடாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர் .மத்திய வங்கியின் 2009ம் ஆண்டு .அறிக்கையின் பிரகாரம் 18லட்சம் இலங்கையர்கள் தொழிலின் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் 2009ல் இவர்களால் 3330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணி கிடைத்துள்ளது. குறித்த ஆண்டில் 247இ 119பேர் தொழிலுக்காக வெளிநாடுகள் சென்றிருந்தனர் இதில் 90வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தனர் ; இதில் பெரும்பான்மையானவர்கள் பணிப்பெண்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்த சென்ற பணிப்பெண்களின் எண்ணிக்கை 113இ777  என்பதுடன் இதில் சவுதி அரேபியாவிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 77இ827 ஆகும்

சுமார் நான்கரை லட்சம் இலங்கைப் பணிப்பெண்களுள்ள சவுதி அரேபியாவில் உள்ள அனைத்துப்பணிப்பெண்களின் நிலையும் கவலைக் கிடமாக உள்ளதான தோற்றப்பாடே கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்ட பெண்களின் கண்ணீர் கதைகள் உணர்த்தி நின்றன

ஓலய்யா முகாம் உண்மையென்ன ???பணிப்பெண்களாக செல்லுகின்ற இல்லங்களில் பாலியல்ரீதியான துன்புறுத்தல் உடல்ரீதியான சித்திரவதைகள் உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்காமல் ஏமாற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த இல்லங்களில் இருந்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் வெளியேறி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் அடைக்கலம் புகுகின்றவர்கள் அங்கிருந்து 'ஒலய்யா' முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் இந்த ஒலய்யா முகாம் பற்றி அங்கிருந்து திரும்பிய பஸீனா என்பவர் கூறுகையில்


'அந்த ஓலேய்யா முகாம் முன்னர் ஆடைத்தொழிற்சாலையாக இருந்ததாம் அங்கு வேலைசெய்தவர்கள் சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக உரிமையாளர் அவர்களை படுகொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாக கூறுகின்றனர் வெட்டிப்போடுறது பேய்பிடித்து ஆடுறது எல்லாம் இருக்கு பிணப்பெட்டி எல்லாம் அங்கதான் இருக்கு அதனாலதான் அதிகமானவர்கள் நோயில் விழுகின்றாங்க அங்க பனடோலுக்கு கூட வழியில்ல யாரும் பனடோல் ஒன்றுகூட தரமாட்டாங்க மருந்து கொடுக்க வருவாங்க அவங்க கொடுக்கிற மருந்திற்கு சிலருக்கு மூளையெல்லாம் ஒருமாதிரியாகும் அப்படியொரு மருந்து கொடுப்பாங்க நோயென்றா நம்பமாட்டாங்க ஒலேய்யா முகாமிற்கு கிழமைக்கு ஒருநாள் நேரத்திற்கு வருவாங்க அந்த மருந்து எடுக்கின்றதற்கு மிகவும் கஸ்டப்படவேண்டும் அந்த மருந்த எடுத்தா அவங்க முன்னுக்கே குடிக்கவேண்டும் சிலவங்களுக்கு சாப்பாடில்லாம குடிக்க முடியாது கத்துவாங்க கஸ்டத்திலதான் அங்கு வாழ்ந்தனான் நீங்க போய்பார்த்த தான் நாங்க சொல்கின்றத நீங்க நம்புவீங்க .சாப்பாடு பச்சைக் கோழி இரத்தம் சொட்டச்சொட்ட இருக்கும் அதை பொரித்து தருவாங்க மீன் பச்சையா இருக்கும் பட்டினி இருந்து சாகிறதைவிட அதை வீசாம தின்பாங்க. இலங்கையைச் சேர்ந்தவர்கள் 350பேர் ஒருபக்கம் இருக்கின்றனர் மொத்தமாக பார்க்க போனால் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் இந்தியா மொத்தமா 5000 கூட அங்க இருக்கும் அவ்வளவு பெரிய முகாம் .மலசல கூடம் அப்படியே நிறைந்திருக்கும் வரிசையில் நின்று தான் குளிக்க வேண்டும் .நாங்கள் இருக்கும் மாடியில்; தண்ணீரை நிப்பாட்டிட்டாங்க கீழ இருந்து நாங்க இருக்கிற இரண்டாம் மாடிக்கு தண்ணீரைக் கொண்டு போக வேண்டும். யாரும் கீழ இறங்க மாட்டாங்க தனியப் போனால் விடிய எழும்பமாட்டாங்க அவங்க பேய்பிடித்து அந்த இடத்திலேயே விழுந்திடுவார்கள்; அங்க சவுதி ஆட்கள் தான் இருக்கின்றனர் இலங்கையை சேர்ந்த யாரும் இல்ல யாரும் வரமாட்டாங்க' திடீரென புயல் அடித்து ஓய்ந்தமாதிரி அந்தப்பெண்மணி தனது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்துவிட்டார் .

இந்த ஓலய்யா முகாமிற்கு அனுப்பாமல் சவுதி இல்லங்களிலிருந்து தப்பியோடி வருகின்ற பணிப்பெண்களை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சொந்தமான பாதுகாப்பு இல்லத்திலேயே வைத்துப் பராமரிப்பதற்கு ஏன் முடியாது என மத்திய கிழக்கில் துன்பங்களுக்குள்ளாகும் வீட்டுப்பணிப்பெண்கள் சார்பாக குரல் கொடுக்கும் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கேள்வியெழுப்புகின்றார். வீட்டு உரிமையாளராலும் அவரது நண்பர்களாலும் உடல்ரீதியான மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வீட்டுப்பணிப்பெண்கள் ஒலய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்ற போது வீட்டு உரிமையாளர் கோருகின்ற பட்சத்தில் மீண்டும் அவருடனேயே பாதிக்கப்பட்ட பணிப்பெண் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது இதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் துன்புறத்தல்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது என ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டுகின்றார் .  (இவர் தான் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்தவர் )

இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்; பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி ரணவக்கவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ' இவர்கள் கூறுவதெல்லாம் முற்றுமுழுதாக பொய்யான விடயங்கள் .சவுதியிலுள்ள இல்லங்களில் இருந்து பணிப்பெண்கள் தப்பியோடி அங்குள்ள இலங்கைத்தூதுவரலாயத்தை வந்தடையும் போது நாம் அங்குள்ள பாதுகாப்பு இல்லத்தில் வைத்து சில வாரகாலங்கள் பராமரிக்கின்றோம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றோம் .ஆனபோதிலும் பணிப்பெண்கள் தப்பி வரும் போது அவர்கள் தம்வசமுள்ள கடவுச்சீட்டை விட்டுவரவேண்டியுள்ளது இதன்காரணமாக அவர்கள் நாடுதிரும்புவதற்கு தேவையான தற்காலிமாக வெளிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே ஒலய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் ஒலய்யா என்பது சித்திரவதை முகாமல்ல மாறாக அது தற்காலிய வெளிச்செல்லும் அனுமதிப்பத்திரத்தை பெறும் வரையில் தங்கியிருப்பதற்கான இடைத்தங்கல் நிலையமே' எனத் தெரிவித்தார்

ஓலய்யா முகாமில் தற்போது 350 இலங்கைப்பணிப்பெண்கள் உரிய வசதிகளின்றியும் மீண்டும் துன்புறுத்தலுக்கு உட்படலாம் என்ற அச்சத்துடனும் உள்ளனர் இவர்களை துரிதமாக மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் உரிய தரப்பினர் போதிய அக்கறை காண்பிக்கவில்லை என அண்மையில் நாடுதிரும்பிய வீட்டுப்பணிப்பெண்கள் சுமத்ததும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்துவெளியிட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க 'தற்போது சவுதி அரேபியாவில் நோன்புக்காலமென்பதால் விமான டிக்கற்றுக்களை பெற்றுக்கொள்வது கஷ்டமாக உள்ளது ஆனால் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாம் 386 பணிப்பெண்களை மீளழைத்துவந்துள்ளோம்.வழமையாக அங்கிருந்து வருகின்ற விமானங்களில் ஆசனங்கள் இல்லாத காரணத்தால் மிஹின் லங்காவிற்கு சொந்தமான இரண்டு விமானங்களை விசேடமாக அனுப்பி அவர்களை அழைத்துவந்தோம் இதற்காக எமது பணியகம் 8.37மில்லியன் ருபாவை செலவிட்டுள்ளது' எனச் சுட்டிக்காட்டினார்

வருடாந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் 15 தொடக்கம் 20வீதமானவர்கள் துன்புறுத்தல்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாதல் சம்பளம் வழங்கப்படாமை இன்னமும பல காரணங்களின் நிமித்தமாக தமது ஒப்பந்தகாலம் நிறைவடையும் முன்பாகவே நாடுதிரும்பம் நிலை ஏற்படுகின்றது

2003ம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருந்த ஆய்வொன்றில் வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் நான்கில் ஒருவர் துஷ்பிரயோகம் அன்றேல் சம்பளம் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகின்றது எனத்தெரிவிக்கப்படுகின்றது

எனினும் இந்த நிலையில் தொழிலாளர்களது உரிமைகளைக் குறித்தோ அவர்கள் எதிர்கொள்கின்ற துன்பங்கள் குறித்தோ மத்திய கிழக்கு நாடுகளிடம் கடுந்தொனியில் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது
பாரிய வேலையில்லா பிரச்சனை நிலவுகின்ற இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு வெளிநாடுகளில் தொழில்புரிகின்றவர்களே அதிக சதவீதமான வெளிநாட்டுச் செலாவணியை சம்பாதித்துக்கொடுக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகளை உரியவகையில் உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் எமது நாட்டிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை அனுப்பமாட்டோம் என அழுத்திக்கூறுகின்ற நிலைமை யாதார்த்த ரீதியில் காணப்படவில்லை என்பதே உண்மையானது
பிலின்பைன்ஸ் இந்தோனோசியா பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் குறைந்த ஊதியத்துடனே மத்திய கிழக்கிற்கு படையெடுக்கின்றநிலையில் உரிமைகள் குறித்து உரக்கப் பேசினால் இலங்கையருக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடலாம் என் அச்சமும் இதற்கு காரணமாக இருக்கின்றது
புஷ்பா பஸீனா போன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பகிரங்கமாக குரல்;கொடுப்பது இலங்கையைப் போன்ற நாடுகளில் மிகவும் அரிதானவிடயம் இப்படியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக குறிப்பிட்டால் ஏனையோரை விடவும் தமது குடும்பத்திலுள்ளவர்களிடமிருந்தும் சமூகத்தில் இருந்தும் ஓரங்கட்டப்படலாம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகலாம் என்ற நியாயமான அச்சமும் இதற்கு காரணமாகும்.

இதன்காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இன்னல்களை வேதனைகளை வெளியில் சொல்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் சகித்து வாழவேண்டும் என்ற கீழைத்தேய சிந்தனையின் பிரகாரம் தமது குடும்பத்தவர்களின் மானம் மரியாதை எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அமைதியாகவே இருந்துவிடகின்றனர்
வீட்டுப்பணிப்பெண்களை மத்திய கிழக்கிலுள்ளவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை மிருகங்கள் போன்றே நடத்துகின்றனர் அவர்களுக்கு மனித கௌரவம் என்பது அங்கு கிடையாது என செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியது ஒரு வேளை உண்மை நிலையைக்கு மாறானதாக இருந்தாலும் சவுதியரேபியாவில் இருந்து இன்னல்களை அனுபவித்து திரும்பிய பஷீனா கூறிய விடயம் யதார்த்தமானதாக காணப்பட்டது

'இந்த மாதிரி ஊர்களுக்கு யாரையும் அனுப்பாதிங்க எல்லா அராபியும் கெட்டவங்க என்று சொல்லவில்லை அவர்களில் நல்லவங்களும் இருக்கின்றாங்க கெட்டவங்களும் இருக்கின்றாங்க ஆனாலும்அந்தமாதிரி ஊர்களுக்கு போகாமா இங்கயே ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கின்றதென்றா மிகவும் நல்லது'

No comments:

Post a Comment