Sunday, August 29, 2010

அமெரிக்க பகிரங்க போட்டிகளில் வெற்றிபெறப்போவது யார்?

                                                                அருண் ஆரோக்கியநாதர்


ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் (US OPEN) இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன .

கடந்த சில வருடங்கள் போன்று ஒரு வீரரோ வீராங்கனையோ தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையை இவ்வருடத்தில் காணமுடியவில்லை என்பதால் ஓகஸ்ற் 30 முதல் செப்டம்பர் 12ம்திகதிவரை நடைபெறும் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் யார் யார் சம்பியன் பட்டத்தை வெல்வர் என்பதை அனுமானிப்பது கடினமானதாக இருக்கின்றது

இருப்பினும் இவ்வருடத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்      போட்டிகள் பிரஞ்சு டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டன் போட்டிகளின் பெறுபேறுகளைப் பார்க்கின்ற போது ஆடவர் பிரிவில் ரவாயேல் நடாலுக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாகவுள்ளதாக தோன்றுகின்றது

பிரஞ்சு மற்றும் விம்பிள்டன் பட்டங்களை அடுத்தடுத்து வென்றெடுத்துள்ள ஸ்பெயின் வீரர் ரவாயேல் நடால் இவ்வாண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துள்ளதால் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் சாதிப்பதற்கு வாய்ப்புள்ளது

தரவரிசையில் முதலிடத்திலுள்ள நடால் பிரஞ்சு பட்டத்தை 5தடவைகளும் விம்பிள்டன் பட்டத்தை 2தடவைகளும் அவுஸ்திரேலிய பட்டத்தை ஒருதடவையும் வென்றுள்ள நிலையில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இன்னும் சம்பியன் பட்டம் வெல்லாத ஒரே போட்டிகளாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் அமைந்துள்ளதாலும் இம்முறை அதனை வென்றெடுப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்
.
கடந்தாண்டு இறுதிப்போட்டியில் ஆர்ஜன்டின வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்டோவிடம் அதிர்ச்சிகரமான தோல்வியைத்தழுவியிருந்த சுவிற்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் அண்மைக்காலமாக கிராண்ட்ஸ்லாம் பெரும்போட்டிகளில் கணிக்கப்படவதைப்போன்று அமெரிக்க போட்டிகளிலும் வெற்றிபெறக்கூடிய வீரர்கள் வரிசையில் நடாலுக்கு அடுத்த நிலையில் உள்ளார்

இதுவரை ஆடவர் தரப்பில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள ரொஜர் பெடரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காண்பித்த தொடர்ச்சியான அதி உன்னத ஆற்றல் வெளிப்பாடுகளை கடந்த சிலமாதங்களாக காண்பிக்கவில்லை என்பதே பெரும்பாலான டென்னிஸ் ரசிகர்களது குறையாக இருக்கின்றது
.
அமெரிக்க வீரர் பீற் சாம்பிரஸ் (14தடவைகள் ) வசமிருந்த அதிக கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தமைக்கான சாதனையை முறியடித்தமை காரணமாக ஏற்பட்ட போதும் போதும் என்ற உணர்வோ திருப்திநிலையோ பெடரர் வசமிருந்த வெற்றி பெறவேண்டும் என்ற பேரவாவை அன்றேல் இறுதிவரை போராடும் குணத்தை மங்கச்செய்துவிட்டதென குறைப்படுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்

இவ்வாண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளில் பெடரர் சம்பியன் பட்டம் வென்றபோதிலும் ஏனைய கிராண்ட்ஸ்லாம்களில் பெரிதாக சோபிக்க வில்லை என்பதுடன் நடப்பாண்டில் பங்கேற்றுள்ள 9 சம்பியன்ஷீப் போட்டிகளில் இம்மாத சின்சினாட்டியில் நடைபெற்ற போட்டிகளில் மாத்திரமே சம்பியன் பட்டம் வென்றிருந்தார்

எது எப்படி இருந்தாலும் டென்னிஸ் வரலாற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரராக தற்போதே அழைக்கப்படுகின்ற ரொஜர் பெடரர் ஏற்கனவே 5தடவைகள் சம்பியன் பட்டம் சூடிய அமெரிக்க பகிரங்க போட்டிகளில் 6வது தடவையும் சம்பியனானலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அமெரிக்க பகிரங்க போட்டிகளுக்கு தயார் செய்யும் காலப்பகுதியில் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களில் பிரித்தானிய வீரர் அன்டி மரே சேர்பிய வீரர் நொவாக் டொச்கோவிக் ஆர்ஜன்டின வீரர் டேவிட் நல்பாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற ரொஜர்ஸ் கிண்ண போட்டியில் நடால் பெடரர் ஆகியோரை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற பிரித்தானிய வீரர் அன்டி மரே என்றுமில்லாத வகையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பத்திற்கு முன்பாக அதிகபட்ட தயார்நிலையில் ஆற்றல்களின் உச்சத்தில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றிராத அன்டி மரேக்கு இம்முறை அதிக வாய்ப்பு உள்ளதனையே அவரது அண்மைக்கால ஆற்றல் வெளிப்பாடுகள் பறைசாற்றிநிற்கின்றன
டேவிட் நல்பாண்டியன் காயம் காரணமாக இவ்வாண்டில் அனேகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை

.இருந்தபோதிலும் வொஷிங்டன் நகரில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற லெக் மெஸான் கிளஷிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனது வெற்றிகரமான மீள்வருகையை உறுதிசெய்தார் .

 இந்த வகையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய வீரர்கள் வரிசை அவரையும் விட்டுப்பார்க்க முடியாது

உலகளவில் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலுள்ள சேர்பிய வீரர் டொச்கோவிக் 2008ம் ஆண்டில் அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டம் வென்றபின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கட்டத்தை தாண்டியிராத போதிலும் கவனிக்கப்படவேண்டிய வீரர்களிலொருவர் என்பதில் ஐயமில்லை

ரவாயேல் நடால் இரொஜர் பெடரர் இஅன்டி மரேஇ டேவிட் நல்பாண்டியன் இ நொவாக் டொச்கோவிக் ஆகியோர் ஆடவர் தரப்பில் சம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பைக் கொண்டிருந்தபோதிலும் கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்ற வீரரை எளிதில் மறந்துவிடமுடியாது

யாருமே எதிர்பார்க்காதநிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த ஆர்ஜன்டின வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்டோ காயம் காரணமாக நடப்பாண்டில் அனேக போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருடைய வாய்ப்புக்கள் தொடர்பாக அதிகமாக டென்னிஸ் விற்பன்னர்கள் எதிர்வுகூறவில்லை .

 என்னைப்பொறுத்தவரையில் கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரும் போட்டிகளில் ஏற்கனவே வெற்றிபெற்ற அனுபவம் அதில் சாதிப்பதற்கு பெரும் சாதகமான விடயமாக இருப்பதால் கடந்தாண்டு வென்றவரை நாம் இலகுவில் தட்டிக்கழித்துவிடவோ மறந்துவிடவோ முடியாது

கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் முதன் முறையாக முதற்பத்து வீரர்கள் தரவரிசையில் அமெரிக்க வீரர்கள் இல்லாது போனாலும் அன்டி ரொடிக் தனது நாளில் அபாயகரமான வீரராக கருதப்படுபவர் ஏற்கனவே சம்பயின் பட்டம் வென்ற அனுபவமும் அவருக்கு அணிசேர்ப்பதால் மீண்டும் தன்னை நிருபித்துக்காட்ட முயற்சிக்கக்கூடும்

இதனைத்தவிர சுவீடன் வீரர் ரொபின் சொடர்லிங் ரஸ்ய வீரர் நிக்கலோய் டெவிடென்கோ செக்குடியரசு வீரர் தோமஸ் பேடிச் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்ஸோ பிரான்ஸ் வீரர் ஜோ வில்விரட் ஸொன்கா ஆகியோரும் தூரத்து வெற்றிவாய்ப்புக் கொண்டவர்களாக உள்ளனர் .

செரீனாவின் விலகலால் சோபையிழந்துள்ள மகளிர் பிரிவு

மகளிர் பிரிவில் முதலிடம் வகிப்பவரான செர்Pனா வில்லியம்ஸ் பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை மகளிர் பிரிவின் நட்சத்திர அந்தஸ்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது

மகளிர் தரப்படுத்தல் முறைமை ஆரம்பித்து 35வருடகாலமாகிவிட்ட நிலையில் முதலிடத்தில் உள்ள வீராங்கனையொருவர் அமெரிக்க போட்டிகளில் பங்கேற்கத்தவறுவது இதுவே முதன்முறையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

தற்போது டென்னிஸ் விளையாடிவரும் வீராங்கனைகளில் 13கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்றவீராங்கனையாக திகழ்கின்ற நிலையில் அவரது இழப்பை ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது என்பது நிச்சயமாகும். 2003 மற்றும் 2007ல் சம்பியன்பட்டம் வென்ற பெல்ஜிய வீராங்கனை ஜுஸ்தின் ஹெனினும் காயம் காரணமாக விலகிக்கொண்டுள்ளமை மேலும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டுள்ளது


இவ்வாண்டில் நடைபெற்றுள்ள மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலும் விம்பிள்டன் போட்டிகளிலும் சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜுஸ்தின் ஹெனின் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் சம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக எந்த வீராங்கனையையும் குறிப்பிட்டுக்கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


 இம்முறை பிரஞ்சு பகிரங்க சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த இத்தாலிய வீராங்கனை பிரான்செஸ்கா ஷியாவோன் ஏனைய போட்டிகளில் அதேவிதமான ஆற்றல்வெளிப்பாடுகளைக் காண்பித்திருக்கவில்லை என்பதால் அவரது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படவில்லை

கடந்தாண்டு யாருமே எதிர்பாராதவகையில் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெல்ஜிய வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் வெற்றிவாய்ப்புக்கள் தொடர்பாக உயர்வான நம்பிக்கைகள் காணப்பட்டன .
ஆனாலும் கடந்தவாரம் கனடாவில் இடம்பெற்ற ரொஜர்ஸ் கிண்ண போட்டிகளில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம்காரணமாக உபாதைக்குள்ளாகி தோல்வியைத்தழுவியமை தற்போது அவரது வெற்றிவாய்ப்புக்கள் தொடர்பில் மட்டுமன்றி பங்கேற்பிலுமே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது

மகளிர் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை வகிக்கும் வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளுக்கு தயார்படுத்தலாக நடக்கும் போட்டிகளில் இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பங்கெடுக்காத போதிலும் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார் ஆனால் அவர் பூரண உடற்திடநிலையுடன் பங்கேற்பது குறித்த கேள்விகள் காணப்படுகின்றன

வீனஸ் வில்லியஸ் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் விளையாடுவாரேயானால் அவரது வெற்றிவாய்ப்புக்கள் உயர்வாகவே அமையும் என்பதற்கு அவரது கடந்த கால பெறுபேறுகள் சான்றுபகர்கின்றன

இரு தடவை அமெரிக்க பகிரங்க சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தமை உட்பட வீனஸ் இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்த அனுபவமும் அவருக்கு பெரும் போட்டிகளில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்

இவர்களைத்தவிர ரஷ்ய வீராங்கனைகளான எலேனா டிமென்ரீயேவா இ ஸ்வெட்லானா குஷ்னெற்சோவா இடினாரா ஸபீனா ஆகியோரும் சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடியவர்களாக கருதப்படுகின்றனர்

தரப்படுத்தலில் மூன்றாது இடத்திலுள்ள டென்மார்க் வீராங்கனை கரலின் வொஸ்னியாஸ்கியும் ஏழாவது இடத்திலுள்ள அவுஸ்திரேலிய வீராங்கனை ஸாம் ஸ்டோஸரும் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க வகையில்  திறமைகளை வெளிப்படுத்திவருவதால் அவர்கள் மீதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும்

சேர்பிய வீராங்கனைகளான ஜெலினா ஜனுகோவிச் மற்றும் அனா இவானோவிச் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காண்பித்த சம்பியன் பட்டம் வெல்லும் ஆற்றலை அண்மைக்காலமாக இழந்துவருவதை அவர்களது பெறுபேறுகள் காண்பித்துநிற்கின்றன

உலகளவில் அதிகம் அறியப்பட்ட ரஷ்ய வீராங்கனையும் அழகுப்பதுமையுமான மரியா ஷரபோவா மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் வென்றவர் என்பதை மறந்து விட்டதுபோன்றே தற்போது அவரது பெறுபேறுகள் உணர்த்துகின்றன . டென்னிஸ் ஆற்றல் வெளிப்பாடுகளிலும் விளம்பர மொடலிங் துறையிலேயே அவர் அதிக நாட்டம் காட்டுகின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது

முன்னணி வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் தொடர்ச்சியாக மகளிர் தரப்பில் ஆற்றல்வெளிப்பாடுகள் நடப்பாண்டில் காண்பிக்கப்படாமையை பார்க்கும் போது இவ்வாண்டில் அதிகமாக அறியப்படாத ஒரு வீராங்கனை சம்பியன் பட்டம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகின்றது
                                                                                                             KESARI SPORTS/ 25 AUG 10       

No comments:

Post a Comment