Wednesday, August 25, 2010

மக்களை மையமாகக் கொண்ட நல்லிணக்கமே இறுதியில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும்


http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27229

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பணிமனை வளாகத்தில் கடந்தவெள்ளிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வைபவத்தில் போடப்பட்ட பாதாகையிலும் வழங்கப்பட்ட குறிப்புக்களிலும் 'சமாதானம் = எதிர்காலம்' என்ற சமன்பாட்டை பார்த்தும் இலங்கையின் எதிர்காலமானது சமாதானத்திலேயே தங்கியிருக்கின்றதென்பதை உணர்வுள்ளவர்கள் விளங்கிக்கொண்டிருப்பர்.

இதனை வலியுறுத்துவதாக அதே தினத்தில் கரடியனாறில் இடம்பெற்ற பேரனர்த்தம் அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்த இவ்வனர்த்தமானது மீண்டுமாக யுத்தத்தின் கோரவடுக்களை மனக்கண் முன்;நிறுத்துவதாக அமைந்திருந்தது.

கரடியனாறு அனர்த்தம் குறித்து கிழக்குமாகாண சபை உறுப்பினரொருவர் விடுத்த அறிக்கையொன்றில் இச்சம்பவம் இக்கிராமத்தையும் பிரதேசத்தையும் ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒரு கணம் திகைப்படைய வைத்துள்ளது. கரடியனாறில் இடம்பெற்ற சம்பவம் போன்ற மேலும் ஒரு சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் தடுப்போம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் சாராம்சம் மக்கள் மத்தியிலே இந்த அனர்த்தம் ஏற்படுத்திவிட்டுள்ள அதிர்ச்சியலைகளைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றது

கரடியனாறு சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை பார்த்தபோது மூன்றுதசாப்த காலப் போரையடு;த்து பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பயணிக்கின்ற இலங்கையின் மீட்சி கண்டுவருகின்ற சுற்றுலாத்துறை அடங்கலான ஏனைய துறைகளில் பதாகமான தாக்கங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயப்பாடுகள் தோன்றின.

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்த அளவிற்கு வந்து சேரவில்லை என ஏற்கனவே கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த வருடத்தை விடவும் இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் குறைவான முதலீடுகளே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவு பெற்றுவிட்டபோதும் ஏன் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என வினவப்பட்டபோது ஒரு நாட்டைப்பற்றி முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நல்லெண்ண உணர்வே அவர்களை முதலீடுசெய்ய தூண்டுகின்றது படிப்படியாகத்தான் அந்த உணர்வு கட்டியெழுப்பப்படுகின்றது அதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் ஆனால் அந்த சூழ்நிலை இதுவரையில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை என சமீபத்தில் எமக்களித்த நேர்காணலில் பொருளாதார அறிஞர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களின் நிம்மதியான வாழ்வு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி உட்பட வளமான எதிர்காலம் நின்று நிலைக்கக்கூடிய நிரந்தர சமாதானத்திலேயே தங்கியிருக்கின்றது.

நிரந்தரமான சமாதானத்தை நாட்டில் உருவாக்கவேண்டுமானால் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது

அதில் முக்கிய படியாக அன்றேல் அதற்கு முதல் அடியாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தத்தம் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 25000 பேர்வரையில் எஞ்சியிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த இவர்கள் துரிதமாக மீளக்குடியமர்த்த்தப்படவேண்டியது அவசியமாகும்

இவர்களைத்தவிர உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற மக்கள் வடக்கு கிழக்கை வாழ்விடமாக கொண்டிருந்த சிங்கள மக்கள் என அனைவரும் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படவேண்டும்

முகாம் வாழ்க்கையில் மக்கள் நீடிப்பது நல்லதல்ல குறிப்பாக சிறுவர்களைப் பொறுத்தவரையில் இது அறவே நல்லதல்ல என அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேடபிரதிநிதி ராதிகா குமாரசுவாமி மனித உரிமைகள் பேரவைக்காக தயாரித்திருந்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருந்தார் 'யுத்தத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவே இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்த முகாம்களுக்குச் செல்கின்றனர் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகின்றனர் ஆனால் சிறுவர்களைப் பொறுத்தவரையில் இந்த முகாம்கள் பெரும்பாலும் எந்தவிதமான பாதுகாப்புமற்றவையாகவே காணப்படுகின்றன' என சுட்டிக்காட்டியிருந்தார் .

இவ்வாறு அபாயங்களும் அச்சங்களும் அசௌரியங்களும் நிறைந்த முகாம் வாழ்விற்கு இயன்றவரை விரைவாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை .

மக்கள் தத்தம் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் நிற்காமல் அவர்களது வாழ்வாதாரத்தை மீள நிலைநிறுத்தி இயல்புவாழ்க்கையை உறுதிசெய்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அனைவரதும் அபிலாஷையாகவுள்ளது


மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர் மக்களின் வாழ்க்கையையும் முன்னாள் மோதல் பிரதேசத்தில் வாழ்கின்ற அனைத்துமக்களின் வாழ்க்கையையும் எளிதாக முன்னெடுக்ககூடிய வகையில் உடனடியான நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என கடந்தவாரத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது  யோசனை சமர்பித்திருந்தனர் .

இதில் பொலிஸில் தம் சொந்த மொழியில் ஒருவர் தம் முறைப்பாடுகளை பதிவுசெய்வது உட்பட பொதுமக்கள் அரச திணைக்களங்களில் தமது சொந்த மொழியிலேயே கருமங்களை ஆற்றுவதற்கு வழிவகைகளைச் செய்தல் போன்ற பரிந்துரைகளை ஆணைக்குழுவினர் வழங்கியிருந்தனர்

இவையாவும் நிர்வாக நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் பற்றியதாகவே அமைந்திருந்தன

இவையெல்லாம் இடைக்கால நடவடிக்கைகளாக கருதப்படினும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை காந்தி நிலையத்தினர் கடந்த வாரம் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்

'நல்லிணக்கமானது கட்டங்கட்டமான செயற்பாடாக அமையவேண்டும். நடைமுறைச்சாத்தியமாக எண்ணப்படுகின்ற முன்னேற்றச்செயற்பாடாக இருக்கவேண்டும் .(நல்லிணக்கம் ) சில தலைவர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளப்படுகின்ற இணக்கப்பாடு காரணமாகவோ அன்றேல் ஒரு ஆவணத்தில் வைக்கப்பட்ட சில கையொப்பங்கள் காரணமாகவே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக அமைந்துவிடக்கூடாது யாரேனும் அது தொடர்பில் தீவிர கரிசனையுடையவர்களாக இருப்பின் அது தூர நோக்குடையதாக அமைவதுடன் இந்த நடவடிக்கைளில் நடுநாயகமாக ஒருநாட்டின் குடிமக்கள் இருந்தாகவேண்டும் ' என காந்தி நிலையம் வலியுறுத்தியிருந்தது



மக்களை மையமாகக் கொண்ட நல்லிணக்கமே இறுதியில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது


கரடினாறு சம்பவம் தற்செயலாக இடம்பெற்ற ஒரு நிகழ்வுமாத்திரமே என எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் இலங்கையில் பெரிதாக எந்தவொரு நாசகார நிகழ்வுகளும் இடம்பெறவில்லை அமைதியாகத்தானே உள்ளது. மக்கள் வந்துபோகின்றனர் வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறுகின்றன. இது தானே சமாதானம் என ஒருசாரார்; எண்ணக்கூடும்.

ஆனால் சமாதானம் என்பது இதுவல்ல என்பதற்கு சில சான்றோர்கள் கூறிய கூற்றுக்களை இங்கே உங்கள் சிந்தனைக்கு முன்வைக்கின்றேன்

'சமாதானமென்பது வெறுமனே யுத்தமில்லாத நிலைமையல்ல'-இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

'சுதந்திரத்தில் இருந்து உங்களால் சமாதானத்தை பிரிக்க முடியாது ஏனென்றால் சுதந்திரம் இல்லாத வரையில் எவருமே சமாதானமாக இருக்க முடியாது'அமெரிக்க முஸ்லிம் மதபோதகரும் மனித உரிமை ஆர்வலருமான மல்கம் எக்ஸ் (எல் ஹாஜி மலிக் எல் ஷபாஷ் எனவும் இவர் அறியப்பட்டிருந்தார்)

'நீதியில்லாத சமாதானம் சர்வாதிகார அடக்குமுறையாகும்' புகழ்பெற்ற அமெரிக்க முன்னாள் பத்திரிகையாசிரியர் வில்லியம் அலன் வைட்

'நீதிகிடைத்துவிட்டதென்பதைக் காண்பிப்பதற்காக சமாதானம் ஏற்படுத்தப்படக்கூடாது மாறாக சமாதானத்தை உருவாக்குவதற்காக நீதியை நிலைநாட்டவேண்டும்' இறையியலாளர் கிறிஸ்தவ மத போதகர் மார்டீன் லூதர்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27229

This Article was published on Virakesari Daily -21/09/2010


No comments:

Post a Comment