Thursday, August 12, 2010

சோகத்தில் இத்தாலி கோபத்தில் பிரான்ஸ்

எது நடக்கக்கூடாதென்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டதென்று சில  நேரங்களில் சிலர் கூறக்கேட்டிருக்கின்றோம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளின் முதற்சுற்றுடனேயே இத்தாலி பிரான்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டு இரசிகர்கள் மட்டுன்றி விளையாட்டுலகுமே இப்படித்தான் கருத்துக்களை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்றது

குழு 'ர்' ல் நடைபெற்ற முதற்சுற்றுப்போட்டியொன்றில் நடப்பு ஐரோப்பியக்கிண்ண சம்பியன்களான ஸ்பெயின் அணி சுவிஸ்சர்லாந்து அணியிடம் அடைந்த தோல்வியே தென் ஆபிரிக்க உலகக்கிண்ண போட்டிகளில் இதுவரை நிகழ்ந்த பெரும் அதிர்ச்சியென ஊடகங்கள் ஆரம்பத்தில் கூறிவந்தன.

ஆனால் என்னைப்பொறுத்தவரையில் கடந்த 2006 உலகக்கிண்ணப்போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணியும் முதற்சுற்றுடன் வெளியேற்றப்பட்டமையே இம்முறை நிகழ்ந்த பெரும் அதிர்ச்சி எனக்குறிப்பிடுவேன்

வளையாட்டு என்றுவந்து விட்டால் தோல்விகள் அதில் ஒருபாகம் தான் ஆனாலும் தமது பூரண ஆற்றல்களை காண்பித்து விளையாடித்தோற்றால் அதனை ரசிகர்களும் தாங்கிக்கொள்வர். ஆனபோதிலும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்ட விதத்தை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை

மாபெரும் கால்பந்தாட்டப்பாரம்பரியத்தை கொண்டதும் சிறப்பான கால்பந்து விளையாட்டு திறன்களுக்கு  உரித்துடையதுமான தம் நாடுகளது அணிகளா இவ்வாறு விளையாடின என நம்பமுடியாமல் ரசிகர்கள் மாத்திரமன்றி கால்பந்தாட்ட விற்பன்னர்களு;ம் திணறிநிற்கின்றனர்

இத்தாலி நாட்டில் கால்பந்தாட்டம் என்பது வெறுமனே விளையாட்டு மாத்திரமல்ல அது அங்கே ஒரு வாழ்க்கை முறை என்றே சொல்லும் அளவிற்கு வெகுவாக பிரபலமானது சாதாரணமாகவே அனைத்து இத்தாலியர்களும் கால்பந்து விளையாட்டைப்பற்றிய பூரண அறிவைக்கொண்டுள்ளனர் என சொல்லப்படும் நிலையில் தமது அணி முதற்சுற்றோடு வெளியேற்றப்பட்டமையை அவர்கள் தமக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சோகமாகவே அமைந்துவிட்டுள்ளது

தென் ஆபிரிக்காவில் தமது அணிக்கேற்பட்ட நிலைக்கு முற்றாக பொறுப்பேற்ற இத்தாலி பயிற்றுவிப்பாளர் மார்சலோ லிப்பி தாம் தனது அணியை உரிய வகையில் பயிற்சியளிக்கவில்லை எனக் காரணம் கூறியுள்ளார் இருந்தபோதிலும் இத்தாலி வரலாற்றில் அவர் பெயர் என்றும் நினைவிருக்கும் என்பதையும் உணர்ந்தவராகவே அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் இத்தாலிய அணி நான்காவது முறையாக உலகக்கிண்ணத்தை வென்றெடுத்தபோதும் மார்சலோ லிப்பியே பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது

மறுபக்கத்தில் பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் ரேய்மண்ட் டொமினிக் நிலைமையே மிகவும் துர்ப்பாக்கியமானது பிரான்ஸ் அணி இம்முறை உலகக்கிண்ணத்தில் அடைந்ததோல்விகளுக்கு மேலாக கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒன்று என்ற ஸ்தானத்தில் இருந்து அவ்வணியின் ஒற்றுமை ஒழுக்கம் எல்லாம் ஒன்றாக பெரும் வீழ்ச்சிப்பாதையில் செல்வதை ஆணித்தரமாக எடுத்தியம்பிய காலப்பகுதியிலே பிரான்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக திகழ்ந்தவரென்ற அவப்பெயரையே டொமினிக் பெற்றுள்ளார்

12ஆண்டுகளுக்கு முன்னர் தாயக மண்ணில் உலகச்சம்பியனாகிய பிரான்ஸ் அணி 2000ம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தையும் வென்று கால்பந்தாட்ட உலகின் ஆதக்கசக்திகளில் ஒன்று என்பதை நிருபித்தது தொடர்ந்து கடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரைவந்து தமது முன்னைய சாதனைகள் ஒருநாள் கூத்துக்களல்ல அவை தம்முள் புரையோடிக்கிடக்கும் உண்மையான ஆற்றல்களின் வெளிப்பாடு என மீண்டும் நிலைநிறுத்தியது

இம்முறை முதற்சுற்றுபோட்டிகளில் பிரான்ஸ் அணி வெளியேற்றப்பட்ட விதத்திலும் அந்த அணியின் வீரர்கள் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது கோபத்தில் ஆழ்;த்தியது எனக்கூறினால் மிகையல்ல
அணியை விடவும் தனிப்பட்ட வீரர்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் இதன்மூலம் புலப்பட்டது

பயிற்சியாளருடன் வாக்குவாதப்பட்டமைக்காக நிக்கலஸ் அனல்கா என்ற வீரர் அணியிலிருந்து திருப்பியனுப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த அணியே பயிற்சிகளில் ஈடுபடமறுத்தமை இதனை தெளிவாக உணர்த்திநிற்கின்றது;

கறுப்பின வீரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பிரான்ஸ் அணி அதன் வெள்ளையின முகாமைத்துவத்திற்கோ வெள்ளையர்களது ஆதிக்கம்நிறைந்த ஊடகங்களையோ மதித்துநடப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க தென்ஆபிரிக்காவில் போட்டிகளின் பின்னர் வெள்ளையினப் பெரும்பான்மை கொண்ட பிரான்ஸ் ரசிகர்களை வாழ்த்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன

98ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றபோது பல்லினவீரர்கள் நிறைந்த அணிபெற்ற வெற்றியானது பிரான்ஸ் சமூக ஒற்றுமையின் அடையாளமாக புகழ்ந்து பேசப்பட்டநிலையில் இம்முறை தோல்விகளையடுத்து கறுப்பின வீரர்கள் ஆதிக்கம் தொடர்பான இனவாதபேச்சுக்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன

எது எப்படியானாலும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கால்பந்தாட்ட ஆற்றலின் உச்சத்தை தொட்ட பிரான்ஸ்  அணி தற்போது வீழ்ச்சிப்பாதையின் கீழ்மட்டத்தை தொட்டுநிற்பதையே இம்முறை தென்ஆபிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன
--ஆரோ அருண்
                                        Kesari Sports-23/06/2010

No comments:

Post a Comment