Wednesday, December 16, 2020

எம்.சி.சி. உடன்படிக்கை விடயத்தில் பொறுமையிழந்தது அமெரிக்கா ? 8983 கோடி ரூபா நிதி மானியம் வாபஸ்!

 எம்.சி.சி. என அறியப்படும் மில்லேனியம் சலேன்ஞ் கோபரேஸன் பணிப்பாளர் சபை இலங்கைகான 8983 கோடி ரூபா (480 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான மானியத்தை திரும்ப விலக்கிக்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பினரின் தகவல்களை அடியொற்றி நியூஸ் இன் ஏசியா இணையத்தளம் செய்தி பிரசுரித்துள்ளது.




எம்.சி.சி. உடன்படிக்கையின் கீழ் 5வருட காலப்பகுதிக்கே இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. 

மூன்றுவருடகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எம்.சி.சி மானியத்தை வழங்க உடன்பாடு எட்டப்பட்டபோதும் கடும் போக்கு தேசியவாதத்தரப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதில் தாமதம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

நியுஸ் இன் ஏசியா இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள போதும்  இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. 



எம்.சி.சி உடன்படிக்கையானது நிலம் மற்றும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட இரண்டு திட்டங்களை முன்னெடுப்பதனை முன்னிலைப்படுத்தியிருந்தது. எனினும் இந்த உடன்படிக்கை இலங்கையில் கடும் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டதுடன் கடும் போக்கு தேசிய வாதிகள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தனர். 

விவசாயத்திற்கான நிலத்தை விற்பதற்குரிய நிலமாக மாற்றும் நோக்கைக் கொண்டது  இந்த எம்.சி.சி. மானியம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்படி தற்போதுள்ள முறைமையின் கீழ் இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமாகவுள்ள 80 சதவீதமான நிலப்பகுதி விவசாயத்திற்காக குத்தகை முறையில் பகிர்ந்தளிக்கப்படும் முறைமை தகர்க்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டது


No comments:

Post a Comment