Thursday, December 17, 2020

கொரோனாக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆறுதல் தருமா?

 




கொரோனா தொற்றுநோயானது சீனாவில் உருவாகி உலகளாவிய ரீதியில் பரவலடைந்து பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல தொடர் ஆராய்ச்சிகளின் பலனாக இதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து நாம் சற்று ஆறுதல் கொள்ளலாமா என கேட்டால் உடனடியாக இல்லை என தான் கூறமுடியும்.

இதற்கு முன் சில உலகளாவிய தொற்றுக்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தடுப்பூசிகளால் தான் என்பது மறக்கமுடியாத உண்மை. ஆனால் சின்னம்மை ஒன்றினைத் தவிர உலகளாவிய ரீதியில் முன்றாக தடுப்பூசியின் மூலம் உலகிலிருந்து ஒழிக்கப்பட்ட தொற்றுநோய்கள் எவையுமில்லை. இந்த சின்னம்மை முற்றாக ஒழிக்கப்பட ஏழத்தாழ 100 ஆண்டுகள் எடுத்தது என்பது மற்றய தகவல்.



இந்த தடுப்பூசியின் மூலம் எவ்வாறு பயன்கிடைக்கும் என்பதனை விளங்கிக்கொள்ள தடுப்பூசிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதும் எமது உடல்  வைரஸ் உடலுக்குள் வந்துவிட்டதாக கருதி எமது உடலில் நோய் எதிர்பு சக்தியினை வழங்க பிறபொருளெரிரியினை உருவாக்கிக் கொள்ளும். பின்னர் உண்மையிலேயே வைரஸ் எமது உடலுக்கு வரும் பொழுது ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிறபெருளெதிரி வைரசுடன் போராடி அழித்துவிடும். இதனால் நோய் ஏற்படாது தவிர்க்கப்படும் அல்லது நோயின் வீரியம் குறைக்கப்படும். இது ஒரு தனிநபராக கிடைக்கும் நன்மையாகும்.

 சமுதாயமாக கிடைக்கும் நன்மையாதெனில் பெருபாலானவர்கள் தடுப்பூசியினை பெற்றார்களாயின் தடுப்பூசி பெறாதவர் ஒருவருக்கு தொற்று  ஏற்படினும்  தடுப்பூசி பெற்றவர்கள் இடையே இருந்து ஒரு அணையாக செயற்படுவதால் சமூகத்தில் பரவலடைவது தடுக்கப்படும் (Herd Immunity). 



கொரோனா தடுப்பூசியினால் இவ்விரு பயன்களை பெறுவதில் பல சவால்கள் உள்ளன.

1.ஒருவரில் வினைத்திறனான பிறபொருளெதிரியினை உற்பத்தியாக்க தடுப்பூசியானது உரிய தரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இடம் முதல் தடுப்பூசி வழங்கும் இடம் வரை பேண வேண்டும். இதற்கு முக்கியமானது குளிர் சங்கிலி (Cold chain) பேணுதலாகும். இந்த தடுப்பூசிகளைப் பொறுத்தவரை எமது சூழல் வெப்பநிலையை விட மிகக் குறைந்த வெப்பநிலையில் பேண வேண்டும். இது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரை சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.

2. சமூகத்தில் பரவலடையாமல் தடுக்க (Herd Immunity) பெற குறிப்பிட்ட வீதமானவர்கள் தடுப்பூசியினைப் பெற வேண்டும். உலகளாவிய ரீதியில் மற்றய நாடுகளுடன் போட்டியிட்டு தடுப்பூசிகளை நாம் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

3.வைரஸ் தொடர்ச்சியாக மாற்றமடையாமல் இருக்குமா என்பதும் கேள்விக்குறியே. மாற்றம் மடையுமாயின் தடுப்பூசி ஏற்றல் பலனற்றதாகிவிடும்.

4. இதனால் கிடைக்கும் நிர்ப்பீடனம் எவ்வளவு காலமிருக்கும் என்பதும் இன்றுவரை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது.

 5. தடுப்பூசி வழங்கலைத் தொடர்ந்து நாடுகளிடையேயான போக்குவரத்துகள் ஆரம்பமாகும் தடுப்பூசிகள் வழங்காத நாடுகளிலிருந்து மீள அறிமுகமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வளவு சிக்கல்களும் உள்ளதால் தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பாக நாம் உடனடியாக ஆறுதல் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஆகவே அனாவசியமாக நடமாடாமல் கைகழுவுதல்இ முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்வதே நம்பிக்கை தரும் வழிகளாக இன்றுவரை உள்ளன.

பாதுகாப்பாக இருப்போம் எம்மையும் மற்றவரையும் பாதுகாப்போம்.


                                                ஆக்கம்: டொக்டர்.கோ.றஜீவ்


No comments:

Post a Comment