Monday, August 17, 2020

ஆட்சியாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியைக் கொடுத்த மின்சாரத் தடை! எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கான முன்னெச்சரிக்கை



மக்களது அபிமானத்தையும் ஆதரவையும் பதவியில் இருக்கின்ற அரசாங்கம் தக்கவைப்பதென்பது எவ்வளவு சவாலான விடயம் என்பதை உணர்த்துவதாக இன்றைய தினம் சுமார் 8 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்ட போது வெளிப்பட்ட உள்ளக்குமறல்கள் அமைந்துள்ளன.  

இன்று மதியம் 12.30 மணியளவில் நாடுமுழுவதும் தடைப்பட்ட மின்சாரம் படிப்படியாக  நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியபோது சுமார் 8.30 மணி இருக்கும். 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 8 மணி நேரத்திற்கு மேலாக நாடுதழுவிய மின்சார தடை ஏற்பட்டதன் பின்னர் இவ்வாறான நாடுதழுவிய தடை ஏற்படும் முதலாவது சந்தர்ப்பமாக இன்று ஏற்பட்ட தடை பதிவாகியுள்ளது  

அதுக்குள் மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்தும் நகைச்சுவையாக கேலிபண்ணியும் தரக்குறைவாக வார்த்தைகளை  வெளிப்படுத்தியும் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததைக் காணமுடிந்தது. 

ராஜபக்ஸக்கள் மீது குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய மீது அபரிமீதமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் வைத்தே பெருமளவான மக்கள் இம்முறை வாக்களித்தார்கள். வினைத்திறன் மிக்கவர் என்பதும் இந்த நம்பிக்கைக்கு  காரணமாகும். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்று ஐந்து நாட்களில் இப்படியான முழுமையான மின்சார தடை நாடு முழுவதும் ஏற்பட்டமை சற்றும் எதிர்பாராது என்பதோடு எச்சரிக்கை மணியாகவும் ஒலித்திருக்கும். 



முற்று முழுதாக இன்றைய மின்சாரத் தடைக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறாக மாத்திரமே இருக்கக்கூடும் .அரசாங்கத்திற்கும் இதற்கும் எவ்விதமான காரணமும் இல்லாதிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் மக்கள் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்களைப்பார்க்கையில் எவ்வளவு விரைவாக மக்கள் அதிருப்தியுறுகின்றனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

 மைத்திரி-ரணில் ஆட்சியின் போது ஏற்பட்ட அனைத்து தவறுகளுக்கும் அந்த அரசாங்கமே பொறுப்பு என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்ஸக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுணவினர் விமர்சனங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து ஏற்படுத்திய வடிவம் அவர்கள் மீதே திரும்ப வாய்ப்புள்ளது என்பதற்கான ஒரு ஆரம்ப அடையாளச் சமிக்ஞையாக கருத முடியும். 


புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சி பீடம் ஏறிய பின்னர் முதல் ஆறுமாத காலத்திற்கு அதன் தேனிலவுக் காலம் என்பார்கள். இந்தக்காலப்பகுதியில் மக்களின் அபிமானமும் ஆதரவும் அபரிமீதமாக அரசாங்கத்தின் மீது இருக்கும் என்பதே இப்படிக் கூறுவதற்கான காரணம் .அந்த எண்ணப்பாடும் தற்போது மாறிவருகின்றது என்பதற்கு இன்றைய தினம் மின்சாரம் தடைப்பட்ட போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன. 

அதிகாரத்திற்கு வருவதற்காக அள்ளிவழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றத்தவறினால் மக்களின் நலன்சார் விடயங்களில் வினைத்திறனுடன் செயற்படாது போனால் ஆட்சியில் இருப்பவர்கள் ராஜபக்ஸகளேயானலும்  கடுமையான  அதிருப்திக்கு முகங்கொடுக்க நேரிடுவது மட்டுமன்றி விமர்சனங்களுக்கும் வெறுப்புக்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை இன்றைய மின்சாரத்தடை பிரதிபலிப்புக்கள் எடுத்துணர்த்துகின்றதென்றால் மிகையாகாது. 

சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் கருத்துக்களை வைத்து மாத்திரமே ஒரு விடயதானம் பற்றி முடிவிற்கு வந்துவிடமுடியாது. ஆனால் பலம்பொருந்தியவர்களாக தோற்றம் காட்டுகின்ற ராஜபக்ஷக்கள் ஆட்சியிலே அச்சமின்றி கருத்துக்களை வெளிப்படுத்துகின்றவர்களின் எண்ண வெளிப்பாடுகளை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொண்டால் கடுமையான சவால்களை இவ்வரசாங்கம் எதிர்நோக்கவேண்டியேற்படும் என்பது திண்ணம். 

No comments:

Post a Comment