2015ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 17ம் திகதி முதல் 2019ம் ஆண்டு மார்ச் 02ம்திகதி வரை இருந்த இலங்கையின் 15வது பாராளுமன்றத்தில் 12 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். எனினும் கடந்த ஒகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 8 பெண்கள் மாத்திரமே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட 59 பெண்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவளுக்கும் ஒரு வாக்கு என்ற பிரசாரத்தை முன்னெடுத்து பாராளுமன்றத்தில் முன்பைக் காட்டிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பலருக்கும் இம்முறை தேர்தல் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
எனினும் தேசிய மக்கள் சக்தியில் இருந்து கலாநிதி. ஹரிணி அமரசூரிய பொதுஜன பெரமுனவில் இருந்து சீதா அரம்பேபொல மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து டயானா கமகே ஆகியோர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து தற்போது பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து கடந்த பாராளுமன்றத்தில் இருந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
மொத்தம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் கடந்த பாராளுமன்றத்தைப் போன்றே இம்முறையும் 12 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளநிலையில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 5.3 % சதவீதமாக காணப்படுகின்றது. இலங்கையின் வரலாற்றில் அதிகபட்சமாக பெண் பிரதிநிதித்துவம் 6.5% ஆகவே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண
1) பவித்திரா வன்னியாராச்சி (இரத்தினபுரி மாவட்டம்)
2) முதித்தா சொய்ஸா (இரத்தினபுரி மாவட்டம்)
3) ரஜிகா விக்கிரமசிங்க (கேகாலை மாவட்டம்)
4) சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே (கம்பஹா மாவட்டம்)
5) கோகிலா குணவர்த்தன (கம்பஹா மாவட்டம்)
6) கீதா குமாரசிங்க (காலி மாவட்டம்)
7) சீதா அரம்பேபொல (தேசிய பட்டியல் )
8) மஞ்சுளா திஸாநாயக்க (தேசிய பட்டியல் )
ஐக்கிய மக்கள் சக்தி
9) தலதா அத்துக்கொரள (இரத்தினபுரி மாவட்டம்)
10) ரோஹிணி கவிரத்ன ( மாத்தளை மாவட்டம்)
11) டயானா கமகே (தேசிய பட்டியல் )
தேசிய மக்கள் சக்தி
12. கலாநிதி. ஹரிணி அமரசூரிய
193 உலக நாடுகளின் பாராளுமன்றங்களை ஆராய்ந்ததில் இலங்கை பெண் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் 182வது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment