கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலையடுத்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க நிலை (lock down) யானை-மனித மோதல் காரணமாக யானைகள் கொல்லப்படுவதை குறைத்துள்ளதாக யானைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் முடக்கநிலை நடைமுறைக்கு வந்த மார்ச் மாதம் முதல் முடக்கநிலை முடிவிற்கு கொண்டு வரப்பட்ட ஜுன் மாத காலப்பகுதிவரை யானைகள் கொல்லப்படுவது 40 % சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக யானைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் வனஜீவராசிகள் திணைக்களக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமுமான சுமித் பிலபிட்டிய தெரிவிக்கின்றார்.
நேற்றையதினம் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டநிலையில் அல்ஜஸீரா செய்திச்சேவை வெளியிட்டிருந்த செய்தித்தொகுப்பிலேயே இந்தவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டில் முப்பெப்போதுமில்லா வகையில் மனிதர்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக 405 யானைகள் கொல்லப்பட்டிருந்தன. 2018ம் ஆண்டு 360 யானைகள் கொல்லப்பட்டிருந்தன. மறுமுனையில் 2019 ஆண்டில் 121 மனிதர்கள் யானைகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டிருந்த அதேவேளை 2018ல் 96 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.
யானைகள் தொடர்பான முன்னணி சர்வதேச நிபுணர்களில் ஒருவரான ஜயந்த ஜயரத்னவின் கூற்றின் படி ஊரடங்கு காரணமாக யானை-மனித மோதல்கள் குறைவடைந்துள்ளது உண்மை எனினும் அது தற்காலிகமானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விளைநிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பதுடன் மீண்டும் கொலைகள் அரங்கேறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஆண்டுதோறும் சராசரியாக 220 யானைகள் கொல்லப்பட்டுள்ள போதும் அந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுமித் பிலபிட்டிய கவலை வெளியிட்டுள்ளார்.
ஆசிய யானைகள் அழிவடையும் இனம் என்ற வகையாறாவிற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறாக அதிக எண்ணிக்கையான யானைகள் இறப்பது நல்லதல்ல என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 1900ம் ஆண்டுகளின் முற்பகுதியில் 12000 ஆக இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை காணப்பட்டதாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 6000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யானைகள் பற்றி இதுவரை அறிந்திராத சுவையான பல தகவல்களை அறிந்துகொள்ள யானை ஆராச்சியாளர் கலாநிதி. எஸ். விஜயமோகனுடன் நடத்திய இந்த நேர்காணலைப் பாருங்கள் .
No comments:
Post a Comment