நாம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைக் கடந்துபோகின்றோம். எத்தனையோ சம்பவங்களை மறந்துபோகின்றோம். ஆனால் சில மனிதர்களும் சம்பவங்களும் எம் நெஞ்சத்து நினைவலைகளை விட்டு பிரிந்துவிடுவதில்லை.
அப்படியான விரல்விட்டெண்ணக்கூடிய மனிதர்களில் ஒருவராக யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் 9ம் ஆண்டுவரை நான் படித்த காலப்பகுதியில் அதிபராக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோஸப் அடிகளாரைக் குறிப்பிடலாம். அவர் யுத்ததின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தையும் எளிதில் மறந்துவிடமுடியாது.
வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.
ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர் பகுதியில் தமது நிழல் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களுள் ஒன்றான 'தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை'யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்குப் பெயர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அதுகுறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டுமிருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.
இயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும், நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின்னர் தனது நீண்டநாட் கனவான ஆங்கிலக் கல்லூரியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழ் இளையோரிடையே ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யவென்ற கனவோடு இயங்கிய இவரது உழைப்பு மிகப்பெரிய மாற்றத்தை வன்னியின் இளஞ்சமுதாயத்தில் தோற்றுவித்தது. இறுதிவரை அக்கல்லூரியையும் கல்வி மேம்பாட்டுப் பேரவையையும் பொறுப்பாக நடத்தி வந்தார். தனது உறவினரான செல்வி நாளாயினியையும் இணைத்துக் கொண்டு இவர் ஆங்கிலக் கல்லூரியைத் திறம்பட இயக்க வந்தார்.
அடிகளாரின் உழைப்பு அபரிதமானது. ஆங்கிலக் கல்லூரியில் தானே முழுநேரமாக ஆசிரியராகப் பணியாற்றியதோடு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அதேநேரம் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கான பணியையும் செய்துவந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறு ஓய்வுநேரத்தில் செய்து வந்தார். அடிகளாரை அறிந்த எவருக்குமே அவரின் கல்விபுகட்டல் மீதான அதீத ஈடுபாடும் அதற்கான அவரின் உழைப்பும் வியப்பை ஏற்படுத்தும்.
இவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்துவந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றி அடிகளாரின் உடல்நிலை அவ்வளவுதூரம் சுமுகமானதாக இருக்கவில்லை. அவசரமாக சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்தபோது அவரை சற்று ஓய்வெடுத்து மருத்துவத்தைக் கவனிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவரே அவரிடம் யாழ்ப்பாணம் போய் மருத்துவத்தைக் கவனித்துவிட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக்கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம், அதனால் எல்லாப்பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி இறுதிவரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.
கத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்தபோதுகூட தான் வெளியேறினால் திரும்பவும் வன்னிக்கு வரமுடியாத நிலையேற்படலாம் என்பதால் இறுதிவரை வன்னிக்குள்ளேயே பிடிவாதமாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றிய ஓர் உத்தமர்தான் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.
வன்னியில் போர் தீவிரமடைந்தபோது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும், கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார். அவரோடு கூடவே செல்வி . நளாயினியும் விக்னேஸ்வரியும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.
போரின் உச்சக்கட்டத்தில் நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கும்போது அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென தலைமை முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்னபோது மிகக்கடுமையாக அதை எதிர்த்து, எனது மக்களோடேயே தான் நான் இருப்பேன் என்று பிடிவாதமாக நின்றுகொண்டவர். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.
இறுதிக்கணம் வரை மக்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருந்தார் அடிகளார். வலைஞர்மடத்தில் தங்கியிருந்து பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்ததுவரை தனது ஆவணங்களையும் காவியபடியே மக்களோடு மக்களாக அவர் இருந்து பணியாற்றினார். முள்ளிவாய்க்காலில் உடல் அங்கவீனமான நவம் அறிவுக்கூடப் போராளிகள் சிலரைத் தங்கவைத்திருந்த ஒரு பதுங்குழியிலேயே அடிகளாரும் அவர்களோடு இணைந்து தங்கியிருந்து தனது பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிநாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17ம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வெட்டையிலே மக்களோடுதான் அடிகளார் இருந்தார். அவரோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.
மே மாதம் 18ம் நாள் காலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்தபோது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார். ஆனால் மற்றவர்களோடு அடிகளாரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். ஏராளமான மக்கள் பார்த்திருக்கத் தக்கதாக அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி) பிரியன் குடும்பம் உட்பட பலர் அடிகளாரோடு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவர்கூட இதுவரை திரும்பிவரவில்லை. ஒருவர்பற்றிய குறிப்புக்கூட யாருக்குமே தெரியவில்லை. அடிகளாரோடு இறுதிவரை பயணித்த செல்வி நளாயினியும், விக்னேஸ்வரியும் கூட திரும்பி வரவில்லை. அந்தச் சரணடைவில் குடும்பமாக அழைத்துச் செல்லப்பட்டபோது கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் பற்றிய சிறு தகவல் கூட யாருக்குமே இல்லை. அடிகளாரோடு அழைத்துச் செல்லப்பட்ட அத்தனைபேருமே அனாமதேயமாகிப் போனார்கள்.
தனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் 'குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக வெறித்தனமாய் உழைத்த அடிகளார்' இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற் போனோர் பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கப் போனவர்களின் கதை இன்று உலகின் முன் மாயமாகி விட்டது.
No comments:
Post a Comment