ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு சில தரப்புக்களில் இருந்து கடும் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. தற்போது பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பிலிருந்தும் அவரது நியமனத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள அதேவேளை ராவண பலய போன்ற பௌத்த அமைப்புக்கள் சிலவற்றிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இவை இரண்டுமே வெவ்வேறு காரணங்களுக்காக என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் சார்பாக கடந்த காலத்தில் பல வழக்குகளில் அலி சப்றி ஆஜராகியதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று பகிரங்க குற்றஞ்சாட்டியிருந்தது.
ஒரு முஸ்லிமாக அலி சப்றி இருப்பதால் அதனைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிமாக இருப்பது பிரச்சனை இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் ஹரின் பெர்ணான்டோ தெளிவுபடுத்தியிருந்தார்.
அலி சப்றி, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான பல நபர்களுக்காக ஆஜரானர் எனவும் இப்ப அவர் நீதி அமைச்சராக உள்ளமையையிட்டு பயமாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மறுமுனையில் சிங்கள ராவய மற்றும் சிங்கலே ( சிங்க இரத்தம்) அமைப்பு ஆகிய இரண்டும் அமைப்புக்களும் கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அலி சப்றி நியமிக்கப்படுவதற்கே எதிர்ப்புத்தெரிவித்தனர். அதிலும் நீதியமைச்சராக அவர் நியமிக்கப்படுவதை முற்றுமாக எதிர்த்தன.
கொவிட்-19 காரணமாக முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் நடவடிக்கை தொடர்பாக அல்ஜஸீரா சர்வதேச செய்திச்சேவைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக ராவணா பலய அமைப்பின் மேகல்கந்தே சுதத தேரர் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யும் நடவடிக்கை தொடர்பாகவே அலி சப்றி தனது அதிருப்தியை அல் ஜஸீரா சர்வதேச செய்திச்சேவைக்கு வெளியிட்டிருந்தார்.
சுதத தேரரும் அவரது நிலைப்பாட்டையொத்த மடிலே பன்னாலோக்க தேரரும் அலி சப்றியை 'ஒரு கடும்போக்காளரெனவும் சிறையிலுள்ள பயங்கரவாதிகளை அவர் விடுவிப்பார் ' எனவும் எச்சரித்திருந்தனர்.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குலுடன் தொடர்புடைய கடைசி நபரையும் கூட கண்டுபிடித்து தண்டிக்கும் வரை ஓயப்போவதில்லை என நேற்றையதினம் ஊடகங்களிடம் பேசியபோது நீதி அமைச்சர் அலி சப்றி சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அலி சப்றி, தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த இந்த தேரர்கள் முடிந்தால் போட்டியிட்டு வருமாறு சவால் விடுத்திருந்தனர். அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்டிருந்த பன்னாலோக்க தேரர் சிங்களவர்களின் மிகவும் புனிதத்திற்குரிய இடத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததன் மூலம் சிங்கள பௌத்தர்களை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
'ஜனாதிபதிக்கு பௌத்தர்களை விடவும் அலி சப்றியே மிகவும் முக்கியமானவர் ' அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே அலி சப்றிக்கு நீதியமைச்சு வழங்கியதை அடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத்தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஊடகங்களுக்காக கருத்துவெளியிடும் வொய்ஸ் கட் தேரர்களின் எதிர்ப்பினையும் மீறி அலி சப்றியை நீதியமைச்சராக நியமித்தமைக்கு பாராட்டுக்கள் என்று தனது டுவிட்டரில் மங்கள சமரவீர பதிவிட்டிருந்தார்.
இதேவேளை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ஊடக தெரண வலையமைப்பின் உரிமையாளர் துலித் ஜயவீர ' அலி சப்றி தனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும் வரையறையற்ற நம்பிக்கை அவர் மீது இருக்கின்றது ' எனவும் தெரிவித்திருந்ததுடன் ராஜபக்ஸகளுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பெருமை தன்னையே சேரும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
தாம் உட்பட பல தேசிய அமைப்புக்கள் அலி சப்றியை தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக துலித் ஜயவீர கூறியிருந்தார். அமைச்சரானமை காரணமாக தனது சட்டத்தொழிலை முன்னெடுக்க முடியாதநிலையில் அலி சப்றி பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதும் சப்றி முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டுவந்து அனைவரையும் உள்ளடக்கிய தேசியத்தை உருவாக்க முன்னின்று செயற்படுவார் எனவும் துலித் ஜயவீர நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
சில பௌத்த அமைப்புக்கள் கலாநிதி . விஜயதாஸ ராஜபக்ஸவை நீதியமைச்சராக்கவேண்டி முனைப்புக்களை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை 'சமகால நெருக்கடியில் இருந்து முஸ்லிம்கள் மீள்வது எப்படி?' என்ற தொனிப்பொருளில் குளோப் தமிழ் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுணவின் தலைமை சட்ட ஆலோசகருமான அலி சப்றி பங்குபற்றி முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது அல் ஜஸீராவிற்கு வழங்கிய நேர்காணல் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அந்த கலந்துரையாடல் காணொளி இதோ..
No comments:
Post a Comment