புதிய கத்தோலிக்க ஆயரைத்திருநிலைப்படுத்தும் ஆயத்துவ திருப்பொழிவு திருப்பலி இன்று எவ்வாறு நடைபெற்றது?
கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் இன்று திருநிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு லூசியாஸ் பேராலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஆயத்துவ திருப்பொழிவு திருப்பலி வழிபாட்டின் போது கொழும்பு பேராயல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் அவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஜுலை மாதம் 13ம்திகதி பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஜுலை மாதம் 13ம்திகதி இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வத்திக்கானிலிருந்து வெளியிட்டிருந்த நிலையில் ,இன்றைய தினமே உத்தியோகபூர்வமாக ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிறப்புத்திருப்பலியில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் உட்பட பத்திற்கும் மேற்பட்ட ஆயர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கன்னியாஸ்திரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயராக கர்தினால் மல்கம் ரஞ்சித் இருக்கும் நிலையிலும் ஏற்கன இரண்டு துணை ஆயர்கள் கொழும்பு மறைமாவட்டத்திற்கு இருக்கும் நிலையிலும் 3வது துணை ஆயராக 53வயதுடைய அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்ஸ்வெல் சில்வா 2011ம் ஆண்டிலும் ஜே.டி. அன்டனி ஜயகொடி 2018ம் ஆண்டிலும் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு மருதானை புனித ஜோசப் கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றி தற்போது மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரியின் அதிபராகவும் இறையியல் கல்லூரியின் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராகவும் பணியாற்றிவரும் துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்.
1966ம் ஆண்டு செப்டம்பர் 23ம்திகதி பிறந்த அன்டன் ரஞ்சித் அவர்கள் 2000ம் ஆண்டு செப்டம்பர் 16ம்திகதி கொழும்பு புனிய லூசியாள் பேராலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
யாழ் பல்கலைக்கழத்தில் கணிதத்துறையில் இளமானிப்பட்டத்தை பூர்த்திசெய்த அன்டன் ரஞ்சித் அவர்கள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முதுமானிப்பட்டத்தையும் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment