Thursday, August 27, 2020

இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பு



இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை . இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு  வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன் தேர்தலை முறையாக ஏற்பாடு செய்து சமாதானமான முறையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய முன்னெடுத்திருந்தமையையும் பாராட்டியிருந்தார். ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு துரித கதியில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயலாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பதாக பிரதமரிடம் தூதுவர் எஸ்கடேல் குறிப்பிட்டதுடன் இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மை மற்றும் பரஸ்பர உறவுகளையும் பாராட்டியிருந்தார். இரு நாடுகளுக்கிடையேயும் கடல்சார் பொருளாதாரங்கள், தனியார் துறை கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பொதுவான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலு ,சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் பிறப்பாக்கல் மற்றும் கடற்றொழிற்துறை போன்றவற்றில் நோர்வே நாட்டின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2013 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையின் மீன்பிடித் துறைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் மாதத்தில் இலங்கையுடன் மீன்பிடி நிர்வாக சாதனங்களை கட்டியெழுப்புவது தொடர்பில் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதார தாக்கங்கள் தொடர்பிலும் பிரதமர் ராஜபக்ச மற்றும் தூதுவர் எஸ்கடேல் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொவிட்-19 தொடர்பான ஐக்கிய நாடுகளின் பன்முக நன்கொடை நம்பிக்கை நிதியத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் சமூக-பொருளாதார தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நோர்வே மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம், இலங்கைக்கு இதுவரையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை பேண வேண்டிய தேவை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட தூதுவர், பிரதமரும் புதிய அரசாங்கமும் தமக்கு கிடைத்த தெளிவான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கை மக்களுக்கும் உள்ளார்ந்தமான சமூகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment