Thursday, August 27, 2020

மைத்திரிபால சிறிசேன: செல்லாக்காசா? சிரிப்புப்பீஸா? அன்றேல் சீரியஸாக எடுக்கப்படவேண்டியவரா?

 





புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில் இன்று சமூக ஊடகங்களில் அதிகமான கிண்டலுக்கு உள்ளாகிவரும் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.

பல கேலிச்சித்திரக் கலைஞர்களுக்கும் மீம்ஸ் படைப்பாளிகளுக்கும், ; அண்மைக்காலத்தில் தனது செய்கைகளால் பார்வைகளால் பதிவுகளால் ஏராளமான கருப்பொருட்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றார் சிரா ஆமா சிறிசேன!

 


அமைச்சரவையில் சிறிசேன இடம்பெறாதது ஏன்?

இந்தக் கேள்விக்கு இம்மாதம் 12ம் திகதி அமைச்சரவை நியமிக்கப்பட்டது முதலாக பதில்களைத் தேடியபோதும் இவ்வார முற்பகுதிவரை தெளிவற்ற நிலையே காணப்பட்டது. சிறிசேனவிற்கு உபபிரதமர் பதவி வழங்கப்படவுள்ளமையினாலே அவர் உள்வாங்கப்படவில்லை என்று ஆரம்பத்தில் தகவல்கள் உலவின. துணைப் பிரதமரை நியமிக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை,20வது திருத்தத்தில் உபபிரதமர் பதவிதொடர்பாக ஏதும் பரிசீலிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சரும் அரசியல் சாசன நிபுணருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டிருந்தார்.இதிலிருந்து தெளிவான விடயம் மைத்திரிபால சிறிசேன உபபிரதமர் பதவிக்கு மட்டுமல்ல அமைச்சர் பதவிக்கு கூட கருத்திற்கொள்ளப்பட்டவில்லை என்பதாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பகிரங்கமாக அறிவித்து தேர்தல் காலங்களில் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார் சிறிசேன.  இம்முறை பொதுஜன பெரமுணவின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பொலநறுவை மாவட்டத்தில் 110,000 அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இருந்தபோதும் அவரை அமைச்சரவையில் உள்ளடக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படும் அமைச்சுக்களில் ஒன்று வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக அமைச்சர் பதவிக்காக சிபார்சு செய்யப்பட்டிருந்தவர்களின் பட்டியலில் கூட சிறிசேன இடம்பெற்றிருக்கவில்லை. அதில் நிமல் ஸ்ரீபால டி சில்வா ,மஹிந்த அமரவீர மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்களே இடம்பெற்றிருந்தன என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கின்றபோதும் அவருக்கு கட்சிக்குள்ளேயே மதிப்போ விசுவாசமோ கிடையாது உள்ளிருக்கின்றவர்கள் தத்தமது எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர் என கட்சிக்கு நெருக்கமான ஒருவரது கருத்து. 




சிறிசேன உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை?


போர் வெற்றிக்கு பின்னர் பல தசாப்தங்களுக்கு  அசைக்க முடியாது நாட்டை ஆளமுடியும் என மனக்கோட்டை கட்டியிருந்த ராஜபக்ஸ தரப்பினர் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. தனது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேன  தன்னை எதிர்த்துப் போட்டியிடுவார் என மஹிந்த ராஜபக்ஸ கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.  முன்னைய தினத்தில் தன்னோடு ஒன்றாக சேர்ந்து அப்பம் சாப்பிட்டு விட்டு ஆட்சிக்கு ஆப்புவைத்த சிறிசேனவின் செயலை ராஜபக்ஸ தரப்பினர் பெருந்துரோகமாக இன்னமும் கருதுகின்றனர். அவர்கள் இன்னமும் அதனை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பதற்கு சான்றுதான் தற்போது சிறிசேனவிற்கு நடக்கும் அலைக்கழிப்பு என்ற கருத்தும் அரசியல் அவதானிகளிடம் உள்ளது. 

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தினால் உள்ளே அடக்கிவைத்திருந்த ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து சிங்கம் போன்று ஊடக சந்திப்புக்களிலும் மேடைகளிலும் பேசிய சிறிசேன, இந்நாட்களில் மிகவும் அமைதிகாக்கின்றார். அவரது கட்சியினர் தம்மை நடத்துவிதம் தொடர்பாக மனக்கவலைகளை வெளிப்படுத்தியிருந்தபோதும் சிறிசேன ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவை மாத்திரமே போட்டிருந்தார்.

 වෙහෙසකර අභියෝගයක් සාර්ථකව ජය ගත් පසු එහි අග්ර ඵලය ලබන්න නිහඬව ටික කලක් බලා සිටිය යුතුයි



ராஜபக்ஸ அரசாங்கத்தினர்  அரசியல்யாப்பில் முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு  தேவையான  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தீர்மானத்தில் சிறிசேன தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆசனங்கள் முக்கியமானவை. தேசியப்பட்டியல் அடங்கலாக அக்கட்சிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இதை பேரம் பேசும் சக்தியாக வைத்து 20வது அரசியல்யாப்புத்திருத்தத்தின் போது தாம் ஆசைப்படும் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற துணைப்பிரதமர் பதவியை சிறிசேன பெறுவாரா என்பது அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வழங்கும் ஆதரவிலேயே தங்கியுள்ளது. 

சிறிசேனவிற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பான விசாரணைகள் அவரது அடுத்த நகர்வுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. 

நன்றி . பிரதீப்- தி சன்டே மோர்னிங்


தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்சிக்குள் மதிப்பு இல்லை என்றபோதும் கட்சியைச் சேர்ந்த ஏனையவர்களுக்கும்  ராஜபக்ஸ அரசாங்கத்தில் சரியான மதிப்பும் பெறுமதியான அமைச்சுப்பதவிகளும்  கிடைக்காத நிலையில் மிகவும் அதிருப்தியில் உள்ளமையால் அடுத்துவரும்  நாட்கள் தீர்மானமிக்கதாக அமைய வாய்ப்புக்கள் உள்ளன. 

அரசியல் களத்தில் இனிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள நகர்வுகளில் சிறிசேனவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடிய ஏதுநிலை காணப்படுவதுடன் இறுதிப் புன்னகையையும்  தற்போது நகைப்பிடமாகியிருக்கும் சிறிசேனவின் முகத்தில் காணமுடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல்வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.


நன்றி நாமல் அமரசிங்க- தமிழ் மிரர்




இந்தக்கட்டுரையை மீளப்பிரசுரிப்பதாயின்  இது முதலில் www.globetamil.com ல் பதிவேற்றப்பட்டது எனக் குறிப்பிடுவது ஊடக நாகரிகத்திற்கு ஏற்புடையது.-

அருண் ஆரோக்கியநாதர் 

No comments:

Post a Comment