பொதுத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியைத் தழுவிய நிலையிலும் தமிழரசுக் கட்சி அதன் தவறுகளை நிவர்த்திக்காமல் கட்சி உட்பூசலில் ஊறி நாறிக்கிடக்கின்றது என்ற விடயத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தேய்கிறது தமிழரசு என்ற தலைப்பில் இன்று பிரசுரமான ஆசிரியர் தலையங்கம் இதோ:
xxx
பொதுவாக வலிமையான அரசியல் கட்டமைப்பு ஒன்று தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்தால் உடனடியாக விரைந்து தன்னைச் சுதாகரிப்பதற்குத் தயாராகும்.
உள்கட்சிப் பிளவுகளால் தேர்தல் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்தால் அந்தப் பிளவுகளை சீர்செய்து, ஐக்கியத்தை உறுதிப்படுத்தி, மீண்டும் புதுமெருகு பெற அந்தக் கட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.
இதைச் செய்வதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று - மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குதல். அடுத்தது - சுயநலம் துறந்துஇ தான் சார்ந்த கட்டமைப்பை மீள வலிமையாக்கும் பொது நலன்நோக்கு இருக்க வேண்டும்.
வடக்குஇ கிழக்கில் தமிழர் தாயகத்தில் பெரும் தேர்தல் பின்னடைவைச் சந்தித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசு ஏனோ இந்த விடயங்களை உணர்ந்து கொண்டதாக இல்லை.
தேர்தல் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்கும் அக்கட்சியைத் தூக்கி நிறுத்தும் பொது நலனை விடத் தத்தமது தனிப்பட்ட அரசியல் நலனே முக்கியமானது - உயர்வானது - என்று கருதியே கட்சித் தலைவரில் இருந்து கடைசித் தொண்டன் வரைகங்கணம் கட்டி நிற்கிறார்கள் போலும். அவர்களின் செயற்பாடுகள் அப்படித்தான் உள்ளன.
தேர்தல் தோல்வியில் - அல்லது பின்னடைவில் - இருந்து மீளுவதற்கும், உயிர்ப்புடன் மீளெழுவதற்கும் எதை எதைச் செய்ய வேண்டுமோ அதையதை எல்லாம் செய்யாமல் தவிர்த்து எதை எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதை அதையெல்லாம் தேடிச் செய்வதில் தமிழரசு முனைப்பாக இருப்பது கண்கூடு.
பொதுத் தேர்தல் பின்னடைவில் இருந்து மீண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு இடையில் மீளவும் மக்கள் மத்தியில் தன்னை வலிமையான சக்தியாகக் காட்டுவதை விடுத்து, நாம் இன்னும் இன்னும் பலவீனமானவர்கள், பிளவுண்டவர்கள் உள்வீட்டு மோதல்களில் உச்சமானவர்கள் என்று பொதுமக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதிலும், தமிழரசுக் கட்சி தொடர்பில் அத்தகைய படிமானம் சாதாரண பொதுமகன் மனதில் ஏற்படுவதைத் தூண்டும் விதத்திலான செய்திகளைப் பறைசாற்றுவதிலும் அக்கட்சியும், அதன் தரப்புகளும் மிகவும் முனைப்பாக இருக்கின்றன போலும்.
சரியோ, பிழையோ காரணம் எதுவாயினும் மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குவது அரசியல்வாதிகளினதும் கட்சியினதும் தலையாய கடமை. ஆனால், அது இங்கு மாறி நடக்கின்றது. மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் யாரோ, அவர்களைக் கட்சிக்குள்ளேயே திட்டித்தீர்த்து காலைவாரி கட்சியையே குட்டிச்சுவராக்கும் நிகழ்ச்சித் திட்டம் கனகச்சிதமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது.
வடக்கும், கிழக்கும் ஐக்கியப்பட்டிருப்பதுதான் தமிழ்த் தேசியத்தின் தனிப்பலம். தமிழரசுக்கும் மிஞ்சியிருக்கக் கூடிய பலம் அது ஒன்றுதான். உங்கள் நடவடிக்கை மூலம் வடக்கு கிழக்குப்பிரிவினை - பிரதேசவாதப் போக்கு - வந்துவிடக்கூடாது என்று கட்சியின் மூத்த தலைவர் பேசும்போது அவர்தான் (கட்சியின் மூத்த தலைவர்தான்) பிரதேசவாதத்தை முன்வைத்தார் என்ற சாரப்பட்ட குற்றச்சாட்டைப் பகிரங்கப்படுத்தி அதன் மூலம் கட்சி மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பிரதேச வாதம் வந்து விட்டது என்ற தோற்றப்பாட்டைக் காட்டும் சிறுமைத்தனமும் அரங்கேறுகின்றது.
தோற்ற தரப்புகள் தோல்வி வெப்பியாரத்தில் அப்படிப் பேசுகின்றன செயற்படுகின்றன என்று பார்த்தால் விவகாரம் அதையும் தாண்டி மோசமானதாக உள்ளது.
கட்சிக்குள் பல அணிகள், குழுக்கள். கட்சித் தலைவரே பிரிந்து நிற்கும் அணி ஒன்றுக்குத் தலைமை தாங்கி உள்கட்சிச் சண்டைக்கு வாள் வீசும் பேரவலம்.
குட்டையைக் கலக்கிப் பருந்துக்குக் கொடுத்த மாதிரிஇ கட்சியைக் குழப்பி வெற்றியை மாற்றுத் தரப்புக்குக் கையளிக்கும் கைங்கரியத்துக்குக் கட்சித் தலைவரே தலைமை வகிக்கும் பேரவலக் கட்டத்தில் தமிழரசுக் கட்சி.
இப்படி ஈடாடிப் போய் நிற்கும் கட்டமைப்பு வரப் போகும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியைப் பெறும் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளேயிருந்து கொண்டே சிலர் வாள்தீட்டி விடுகின்றனர்.
பழம்பெரும் கட்சியான தமிழரசு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு' போய்க் கொண்டிருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அது ஐக்கியப்பட்ட - ஒற்றுமையான - கட்ட மைப்பல்ல என்ற மக்களின் கருத்து நிலைமை.
அதை ஊர்ஜிதப்படுத்தி உறுதிப்படுத்துமாற் போல கட்சித் தலைவரிலிருந்து அவரின் ஊது குழல் ஊடகம் வரை ஒற்றைக் காலில் நின்று செயற்படும் அவலம். இது விடயத்தில் தந்தை செல்வா சொன்னது அவரது கட்சிக்கே முதலில் பொருந்துவதாக இருக்கும். (காலைக்கதிர் - தலையங்கம் 30-08-2020)
No comments:
Post a Comment