இந்தியாவிற்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கையின் சுபீட்சத்திற்கும் அமைதிக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான உறவு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெறவுள்ளது.
தூதுவர் தரத்திலான பதவிநிலைகளுக்கு நியமிக்கப்படும் போது அதற்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழுவின் அங்கீகாரம் கிடைப்பது கட்டாயமாகையால் விரைவில் அந்தக்குழுவிற்கு முன்பாக அவர் முன்னிலையாகவுள்ளதாக அறியவருகின்றது..
இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவுகளைப் பலப்படுத்துவதுடன் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசாங்கம், நான்கு தென்னிந்திய மாநிலங்களுடனான உறவுகளையும் வலுப்படுத்துவதில் அதிக அக்கறையை வெளிப்படுத்திவரும் நிலையில் சென்னையைத் தளமாகக் கொண்ட தென் இந்தியாவிற்கான துணைத் தூதுவராக கலாநிதி வி.கே. வல்சன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. கலாநிதி. வி.கே. வல்சன் கொழும்பிலுள்ள நிப்போன் ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் ஒருவரான மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என அறியமுடிகின்றது.
1964ம் ஆண்டில் பிறந்த அசோக மிலிந்த மொரகொட சர்வதேச விவகாவரரங்களில் சிறந்த அனுபவம் உடையவராக கருதப்படுகின்றார். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக 2009 முதல் 2010ம் ஆண்டுவரையும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2007ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையும் அதற்கு முன்பாக பொருளாதார மறுசீரமைப்பு ,விஞ்ஞானம் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே நோர்வேயின் அனுசரணையில் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கியிருந்தார்.
அவர் கடைசியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராகவும் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment