Friday, August 14, 2020

உயிரோடு உணர்வுகளைச் சாகடிக்கும் போலிச் செய்திகள்


பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தவாறு தனது கைகளை உயர்த்தி காண்பிக்கின்ற புகைப்படம் கடந்த சில மணித்தியாலங்களாக அவரது உடல்நிலை பற்றி வெளியான செய்திகளைப் படித்த பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பது திண்ணம். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வந்த  தனியார்  மருத்துவமனை நிர்வாகம்  உத்தியோக பூர்வமாக அறிக்கையொன்றை இன்று மாலை வெளியிட்டிருந்தது. 


இதனையடுத்து இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் தம் இஷ்டப்படி எவ்வித ஊடக தர்மமும் இன்றி தகவல்களைப் பதிவேற்றம் செய்திருந்தார்கள். இதிலே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக பிரசுரிக்கப்பட்ட பதிவுகளும் அடங்கும். 


கொரோனா வைரஸ் பற்றி பரப்பப்பட்ட போலிச் செய்திகள்  காரணமாக இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் உலகின்  பல்வேறு பகுதிகளிலும் சுமார் 800 பேர் வரை உயிரிழந்திருந்ததாக ஆய்வொன்றில் இருந்து அறியவந்துள்ளதாக கடந்த 12ம் திகதி BBC  செய்திச் சேவை செய்திவெளியிட்டிருந்தது.American Journal of Tropical Medicine and Hygiene என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்தத்தகவல் வெளியாகியிருந்தது. சமூக வலைத்தளங்களில் வெளியான போலிச் செய்திகள் காரணமாக 5800 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஒருவர் கடுமையான சுகவீனமடைந்து அவர் வாழ்வதற்கு ஒரு சதவீதமான வாய்ப்பே இருந்தாலும் அவரைச் சார்ந்தவர்கள் பலரும் அவரது உயிரை எப்படியேனும் காப்பாற்றிவிடவேண்டும் எனவே போராடுவர் என்ற பொதுநலச் சிந்தனையில்லாத ஜடங்களாக பலரும் மாறிக்கொண்டிருப்பது கவலைக்கிடமானது. 

கடந்த மாதம் 19ம்திகதி யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி கடுமையான காயங்களுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழந்துவிட்டதாக மறுநாளான 20ம்திகதியே பல்வேறு இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தமை நினைவிருக்கும் .


வென்டிலேற்றர் உதவியோடு தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட அந்தவிரிவுரையாளர் ஒகஸ்ட் 2ம்திகதியே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் எவ்வித பொறுப்பும் இன்றி கிடைத்த ஆரம்ப தகவலை எப்படி படிமுறையாக பல இடங்களிலும் ஆராய்ந்து செய்தியாக்க வேண்டும் என்ற  தராதரம் இன்றி பதிவுகளை போடுகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தமக்கும் ஏதோ தெரியும் என்ற எண்ணத்தில் சிலர், நாமும் கருத்துக்கூறவேண்டும் என்ற நினைப்பில் சிலர், மற்றவர்கள் போடாத விடயத்தை போட்டு அவதானத்தைப் பெறவேண்டும் என்று சிலர், தமது பதிவுகளுக்கு அதிக லைக்குகளும் ஷெயார்களும் கிடைக்கவேண்டும் என்று சிலர் என பல்வேறு விதமானவர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளனர். 

ஒருவரை உயிருடன் கொன்றேனும் அவதானத்தைப் பெறவேண்டும், தமது பதிவுகளுக்கு அதிக ஹிட்ஸ் எடுக்க வேண்டும் என்ற கேடுகெட்ட தரப்பின் மீது மட்டும் இவ்வாறான போலிச் செய்திகளுக்கான பொறுப்பை போட்டுவிட்டு நாம் கழன்றுவிடமுடியாது. எம்மில் எத்தனைபேர் சினிமாவிற்கும், தொலைக்காட்சி களியாட்ட நிகழ்ச்சிகளுக்கும்  கிசுகிசு பேச்சுக்களுக்கும் நேரத்தை அதிகமாக கொடுத்துவிட்டு போலிச்செய்திகளால் ஏமாற்றப்படும் பேர் வழிகளாக மாறிக்கொண்டிருக்கின்றோம். போலிச் செய்திகளை எப்படிக் கண்டுபிடிப்பது.? போலிச் செய்திகளில் இருந்து தவிர்ந்துகொள்வதற்கு எமது பக்கத்தில் என்ன செய்யவேண்டும் என அறிந்து செயற்படுவோமானால் எம்மையும் பாதுகாத்து எம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். 

இறுதியில் ஒருவிடயத்தை கூறுகின்றேன். எனக்கு இசையைப் பற்றி பெரிதாக தெரியாது. ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இடைக்காலப் பாடல்களைக் கேட்கும் போது எந்த விதமான சோகமான நிலையில் நான் இருந்தாலும் என்மனத்திற்கு ஆறுதலாக இதமாக வருடிக்கொடுக்கும் அவரது காந்தக்குரல். சில காலத்திற்கு முன்பாக எஸ். ஜனாகி அம்மையார் உயிரோடு இருக்கையிலேயே அவர் இறந்துவிட்டதாக குழி தோண்டிப் புதைக்க முனைந்தபோது அவர் இன்னமும் உயிரோடு இருக்கின்றார் என நம்பிக்கை தந்தவர் எஸ்.பி.பி.  தனது பாடல்களால் லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் எஸ்.பி.பி இன்னமும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் .இசை உலகை ஆளவேண்டும் என்று பிரார்த்திப்போமாக!

அருண் ஆரோக்கியநாதர்


போலிச் செய்திகளை எப்படிக் கண்டறிவது?





No comments:

Post a Comment