இலங்கை அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும் ஒரு உடனடியான நடவடிக்கையாக மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளிலுள்ள இலங்கைகத்தூதரகங்களிலுள்ள தொழில் மற்றும் நலன்புரி பிரிவுகளை மூடுவதற்கும் அங்குள்ள பணியாளர்களை திருப்பி அழைப்பதற்கும் தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
செலவுகளைக் குறைக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள பணிப்புரைக்கு அமையவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் யூ.கே. மாபா பத்திரண சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத்தூதரங்களில் இந்த தொழில் நலன்புரி பிரிவுகளை நடத்திச் செல்வது அரசாங்கத்திற்கு லாபகரமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்மானம், இலங்கையைச் சேர்ந்த 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் தேவைகளையும் நலன்புரி நடவடிக்கைகளையும் பார்த்துக்கொள்வதற்காக இத்தகைய பிரிவுகள் அமைக்கப்பட்ட 14 நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களால் அனுப்பிவைக்கப்பட்ட அந்நியசெலாவணி 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தநிலையிலும் இவ்வாறானதொரு தீர்மானத்ததை அரசாங்கம் எடுத்திருப்பது வியப்பாக உள்ளது. இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் இது மிகப்பெரிய வகிபாகத்தை வகிக்கும் ஒரு துறையாக காணப்படுகின்றது.
தற்போது சவுதி அரேபியா ,ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான் ,தென் கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உட்பட 14 நாடுகளில் உள்ள வெளிநாட்டுத்தூதரங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் நலன்புரி பிரிவுகளில் 160ற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கடந்த வாரத்தில் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியதுடன் வெளிநாடுகளில் உள்ள இந்தப்பிரிவுகளை நடத்திச் செல்வதற்கு வருடம்தோறும் 900 மில்லியன் ரூபாவை செலவழித்துவருவதாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment