மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியது.
19வது திருத்தத்தை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, இன்றைய அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாக கருத்துவெளியிடும்போது ' இது ஜனநாயகத்திற்கு நல்ல. ஜனாதிபதி என்ற ஒரு நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பது நாட்டிற்கு நன்மை பயக்காது. 19வது திருத்தத்தை இல்லாமல் செய்வது என்கிறபோது மீண்டுமாக ஜனாதிபதியின் கைகளுக்கு அதிகாரங்கள் செல்வதற்கு வழிகோலப்படுகின்றது என்றே அர்த்தப்படுத்தவேண்டும். 19வது திருத்தத்தின் கீழ் அமைச்சர் ஒருவரை நியமிக்கும் போது பிரதமரின் அறிவுரைக்கமையவே ஜனாதிபதி அதனை மேற்கொள்ளவேண்டும். ஆனால் நீக்குவதன் மூலம் தான் விரும்பியவாறு நியமனங்களை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு வழிகோலப்படுகின்றது. 'என்று தெரிவித்தார்.
இருந்தபோதிலும் எந்த விடயங்களை எவ்வாறு செய்யப்போகின்றனர் என்ற தெளிவு இன்றைய அறிவிப்பில் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 19-ஐ மாத்திரம் பிடித்துக்கொண்டு திருத்தம் மேற்கொள்வதை தாம் முற்றாக எதிர்ப்பதாக தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
'புதிய அரசியலமைப்பை கொண்டு வர இரண்டு வருடமாகும் என கூறுகின்றனர். இரண்டு வருடங்கள் காத்திருந்தால் இந்த மூன்றில் இரண்டு குறைவடைந்து மூன்றில் ஒன்றாக அமையலாம். அப்போது எமக்கு மூன்றில் இரண்டு இல்லை இதனை செய்ய முடியாது என கூற வாய்ப்புண்டு. பிள்ளை பிறப்பதற்கே 10 மாதங்கள் தேவைப்படுகிறது. அரசியல் அமைப்பை உருவாக்க இரண்டு வருடங்கள் தேவையா? 19 ஆவது திருத்தத்தில் மாற்றத்தை கொண்டு வருவதில் எதற்காக அவசரம் தேவைப்படுகிறது. அந்த காலப் பகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருந்த முரண்பாடு தற்போது இல்லை. தனிநபரின் சுயநல தேவை இல்லாவிட்டால்' அதில் வேறு தேவை கிடையாது. உடனடியாக 19-ஐ துண்டித்து மீளவும் பொருத்துங்கள்.'
என கலாநிதி குணதாச அமரசேகர கூறினார்.
No comments:
Post a Comment