Monday, August 31, 2020

சம்பூரில் அமெரிக்க நிதி உதவியோடு புதிய பாடசாலை நிர்மாணம்



கிழக்கு மாகாணத்தின் சம்பூரில் அமெரிக்காவின் நிதியுதவியோடு பாடசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   




சம்பூரில் புதிய கூனித்தீவு நாவலர் பாடசாலையை ஓகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் திறந்து வைத்தார். எட்டு வகுப்பறைகளுடன் கூடிய இரண்டுமாடி வகுப்பறை கட்டிடம், 30,000 லீற்றர் கொள்ளளவுடைய சேமிப்புத் தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு முறைமை, மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் அங்கவீனமுடையோருக்கான வசதிகளுடன் கூடிய கழிவறைகள் என்பன இந்த புதிய வசதித்திட்டத்தில் உள்ளடங்குகின்றன. அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command) முன்னெடுப்பொன்றான இந்த திட்டத்தில் அமெரிக்காவும் இலங்கை கல்வி அமைச்சும் 93 மில்லியன் ரூபாவை (ஏறக்குறைய 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) முதலீடு செய்துள்ளன.



'புதிய கோட்பாடுகள் மற்றும் சிந்தனைகளை ஆராய்ந்தறிவதற்கு மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலொன்றை இந்த புதிய கட்டிடம் வழங்கும் அதேநேரம், அவர்களுக்கும் அவர்களது சமூகத்துக்குமான எதிர்காலமொன்றையும் நிர்மாணிக்கிறது,' என்று தூதுவர் டெப்லிட்ஸ் இந்த நிகழ்வில் தெரிவித்தார். 'பிள்ளைகளின் கல்வியில் அவர்களை ஆதரிக்கும் மற்றும் வலுவூட்டும் சிறப்புரிமையையும் பொறுப்பையும் அனைத்து பெரியவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்,' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   


 
மிகவும் அவசியமாக இருந்த வகுப்பறை வசதிகளை வழங்குவதற்கு மேலதிகமாக, உள்ளூரில் இருப்பிடங்களை இழந்த 400 பேர் வரையானோருக்கான அவசரகால தங்குமிடமாக செயற்படக்கூடிய வகையிலும் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பிராந்தியம் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடியது என்ற வகையில் இது பயனுள்ளதாக அமைந்துள்ளதாக    அமெரிக்கத்தரப்பினரால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 



கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹாம்பத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. இஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், மற்றும் பிரதேச செயலளார் எம்.பி.எம். முபாரக் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
 


கடந்த ஒன்பது வருடங்களில், அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத்தின் ஊடாக அமெரிக்க மக்கள் 5.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் மூலம் 14 பாடசாலைகளின் நிர்மாணத்திற்கு உதவியுள்ளனர். பாடசாலை நிர்மாண திட்டங்களானது வசதிகளற்ற சமூகங்களுக்கு நேரடியாக பயனளித்து அமெரிக்காவுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேநேரம், இலங்கையின் இளையோருக்கு கற்பித்தல் தொடர்பிலும் பங்களிப்புச் செய்வதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.      


No comments:

Post a Comment