Wednesday, August 26, 2020

பார்ஸிலோனா கழகத்தில் இருந்து வெளியேறுகின்றாரா லயனல் மெஸி?

  

உலகின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸி, பார்ஸிலோனா கழகத்தில் இருந்து வெளியேறுதவற்கு விரும்புவதாக அக்கழகத்திற்கு  எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக  மெஸிக்கு நெருக்கமான தரப்பினர் சி.என்.என் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  பார்ஸிலோனா கால்பந்தாட்டத்தில் இருந்து மெஸி உடனடியாக வெளியேறுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் அந்தக்கழகத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

தற்போது விளையாடிவரும் வீரர்களில் ஆற்றல்களின் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரராக லயனல் மெஸி கருதப்படுகின்றார். ஆர்ஜன்டீன நாட்டவரான மெஸி ஸ்பெயினிலுள்ள பார்ஸிலோனா கழகத்தில் பயிற்சிகளுக்காக 2000ம் ஆண்டிலேயே இணைந்துகொண்டு கனிஷ்ட அணிகளில் விளையாடி  2004ம் ஆண்டு முதல் பார்ஸிலோனா கழகத்தின் சிரேஷ்ட அணிக்காக விளையாடிவருகின்றார்.

2017ம் ஆண்டில் மெஸியை 2021ம்ஆண்டு ஜுன் 30ம் திகதிவரை  வரை பார்ஸிலோனா கழகத்தில் தக்கவைக்கும் ஒப்பந்தத்தில் பார்ஸிலோனாவும் மெஸியும் கையொப்பமிட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்திற்கு அமைய அவரது வாராந்த சம்பளத்தின் பெறுமதி 645,000 அமெரிக்க டொலர்கள் எனக்குறிப்பிடப்பட்டது. 

சம்பியன்ஸ் லீக் தொடரின் கால் இறுதிப்போட்டியில் பேயர் முனிச் கழகத்திற்கு எதிராக 8ற்கு 2 என்ற கோல்கள் கணக்கில் அடைந்த அவமானகரமான தோல்வியை அடுத்து கருத்துவெளியிட்டிருந்த கழகத்தின் தலைவர் Josep Maria Bartomeu பார்சிலோனாவிலே தனது விளையாட்டு வாழ்க்கையை முடிவுறுத்த விரும்புவதாக மெஸி பல தடவைகள் கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

'அவர் இன்னமும் மிகச் சிறந்த வீரராக  இருக்கின்றார். ஆனால் ஒரு சக்கரம் முடிவிற்கு வருகின்றது. இன்னுமொன்று ஆரம்பமாகின்றது. ஆனால் அது மெஸியின் யுகத்தில் "என்று கூறியிருந்தார்.

உலகின் மிகச்சிறந்த வீரருக்கான  Ballon d'Or விருதை ஆறுதடவைகள் வென்றெடுத்துள்ள மெஸி  10 தடவைகள் லாலீகா கிண்ணத்தை பார்ஸிலோனா வென்றெடுப்பதற்கு பங்களித்துள்ளதுடன் 4 முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கும்  வழிவகுத்துள்ளார்.

33வயதுடைய மெஸி பார்ஸிலோனாவிலிருந்து வெளியேறும் இடத்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிற்றி அன்றேல் ஜேர்மனியின் பரிஸ் செயின்ற் ஜேர்மன் அணிகள் அவரது அடுத்த கழகங்களாக இருக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 



No comments:

Post a Comment