இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள மிலிந்த மொரகொட கபினற் அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிகரான தரத்தைப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் வரலாற்றில் இராஜதந்திரி ஒருவருக்கு இத்தகைய கௌரவம் கிடைக்கவுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
வெளிநாட்டமைச்சுக்களுக்கு ஊடாக தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வழமையான இராஜதந்திர ஒழுங்குமுறையைத் தாண்டி இருநாடுகளின் தலைவர்களுடனும் நேரடியாக தொடர்பாடல்களை முன்னெடுக்க கூடிய அதிகாரத்தை அவர் கொண்டிருப்பார் என கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமிக்கப்படுகின்றவர்கள் அந்நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தரத்திற்கு நிகரானவர்களாக கருதப்படுகின்றனர். இப்போது தான் இலங்கையில் இத்தகைய நியமனம் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் ஒருவரான மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என அறியமுடிகின்றது.
1964ம் ஆண்டில் பிறந்த அசோக மிலிந்த மொரகொட சர்வதேச விவகாவரரங்களில் சிறந்த அனுபவம் உடையவராக கருதப்படுகின்றார். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக 2009 முதல் 2010ம் ஆண்டுவரையும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2007ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையும் அதற்கு முன்பாக பொருளாதார மறுசீரமைப்பு ,விஞ்ஞானம் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே நோர்வேயின் அனுசரணையில் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கியிருந்தார்.
அவர் கடைசியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராகவும் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment