Tuesday, January 26, 2021

டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய படுகாயத்தை ஜோ பைடன் ஆற்றுவாரா?

 


வெகு நாட்களாக ஜனவரி 20, 2021 என்ற திகதி  ஒருபோதும் வராதோ என்று தோன்றியது. நாட்காட்டியில் மிகுந்த இடைவெளியில் அந்தத் திகதி இருந்தது, அமெரிக்காவின் அற்பமான, மிகுந்த ஊழல்வயப்பட்ட, மிகவும் திறமையற்ற ஒரு ஜனாதிபதியிடம் இருந்து  அமெரிக்கா விடுதலை பெறும் தருணமாக நாட்காட்டியில் பரவசப்படுத்திக்கொண்டிருந்தது.

ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நாள் முதலில் வாரக் கணக்கில் எண்ணப்பட்டது, பிறகு நாள் கணக்கில், பிறகு மணிக் கணக்கில், நிமிடக் கணக்கில், ஏதோ அமெரிக்கர்கள் புத்தாண்டின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததைப் போல. இந்த விஷயத்தில், வெறுக்கத்தக்க ஒரு நிர்வாகத்தை உதறித் தள்ளுவதற்கான 8.1 கோடி அமெரிக்கர்களின் தீவிர விருப்பம் மட்டுமல்லஇ டொனால்டு ட்ரம்ப் பதவியில் இருக்கும்போதே என்ன செய்வார் என்பது குறித்த நியாயமான பயமும் அடங்கியிருந்தது.


சிறந்த பதிலடி


ஒருவழியாக ஜனவரி 20-ம் திகதி வந்தேவிட்டது; அமெரிக்கத் தலைநகரில் குளிர் மிகுந்த, பலத்த காற்று வீசும் புதன்கிழமை காலைப் பொழுது. நேஷனல் மாலில் இந்த முறை கூட்டம் இல்லை. குறைந்த அளவு விருந்தினர்கள் மட்டும் சீரான இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்பு இருந்த திடலில் ஏராளமான கொடிகள் இருந்தன. மதியம் 12 மணி ஆவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் , ஜோ பைடனுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பைடனும், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸும் பதவியேற்றுக்கொண்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப்பால் தூண்டப்பட்ட கலவரக்காரர்கள் எந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்தார்களோ அதே இடத்தில் பைடனும் கமலாவும் பதவியேற்றுக்கொண்டார்கள். அந்தக் கறுப்பு தினத்துக்கு இதைவிட சிறந்த பதிலடி இருக்க முடியாது.

ஜனவரி 6 அன்று கேப்பிட்டலைச் சூறையாட முயன்ற, வன்முறை பீடித்த, வெறுக்கத் தக்க கும்பல் அமெரிக்காவின் மோசமான பக்கத்தைப் பிரதிபலித்தது என்றால் பைடனின் பதவியேற்பில் மேடையில் இருந்தவர்கள் அமெரிக்காவின் சிறப்பான பக்கத்தைப் பிரதிபலித்தார்கள்.

'ஜனநாயகமானது எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது. இந்த நேரத்தில், என் நண்பர்களே, ஜனநாயகம் வென்றிருக்கிறது' என்று ஜனாதிபதி பைடன் தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டார். 'ஒரு ஜனநாயகத்தில் மிகவும் அரிதான விஷயம்: ஒற்றுமை. ஒற்றுமை இன்றி அமைதி இல்லை. கசப்பும் சீற்றமும்தான் இருக்கும். நாடு இருக்காது. அலங்கோலத்தின் ஆட்சிதான் இருக்கும்' என்றார் பைடன்.

கறுப்பினத்தவருக்கான விடுதலைப் பிரகடனத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரஹாம் லிங்கன் கையெழுத்திடும்போது கூறிய வார்த்தைகளை பைடன் நினைவுகூர்ந்தார்: 'என் முழு ஆன்மாவும் இதில் இருக்கிறது.'



ட்ரம்ப்பின் கோழைத்தனம்

ஒரு விஷயத்தை பைடன் பேசவில்லை: அவருக்கு முன்னால் இந்தப் பதவியை வகித்தவரின் பெயர்தான் அது. வழக்கமான சூழல்களில் இப்படிச் செய்வது அவமரியாதையின் உச்சமாகவே கருதப்படும். ஆனால், அந்த நிகழ்ச்சிக்குக்கூட வந்திராத ட்ரம்ப்புக்கு இது சரியான விடைகூறலே ஆகும். கடைசிவரை முசுடுபிடித்தவராகவும் சிறுபிள்ளைத்தனமான கோழையாகவும் இருந்த அந்த நபர் நகரத்தை விட்டுப் பல மணி நேரங்களுக்கு முன்பே வெளியேறினார்.

வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற முதல் நபர் போல ட்ரம்ப் நடந்துகொண்டார். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் ஒரு தோல்வியாளர் இருக்கவே செய்வார். புதன் கிழமைக்கு முன்புவரை வெளியேறும் ஜனாதிபதிகள் புதிய ஜனாதிபதியிடம் அதிகாரத்தின் கடிவாளத்தைக் கண்ணியத்துடன் ஒப்படைத்திருக்கிறார்கள். தங்களை அடுத்துப் பதவிக்கு வருபவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த மிகச் சிலரும்கூட அன்ட்ரூ ஜோன்ஸன் போன்றவர்கள்இ புதிய ஜனாதிபதிகளின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும்படி பொய்களைப் பரப்பியதில்லை. பெரும்பாலான ஜனாதிபதிகளுக்கு தாங்கள் கொண்டுசென்ற திசையிலும் மாறுபட்ட திசையில் புதிய ஜனாதிபதிகள் நாட்டைக் கொண்டுசெல்வார்கள் என்பது தெரியும். அதை அறிந்துகொண்டுதான் அதிகாரத்தைக் கைமாற்றிவிடுகிறார்கள். தங்கள் அகந்தையைவிட அமெரிக்கா எனும் லட்சியத்தை அவர்கள் பெரிதும் மதித்ததால் அப்படிச் செய்தார்கள். அதற்குப் பதிலாக ட்ரம்ப் தனது கடமையைத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் தள்ளிவிட்டுச் சென்றார். மேடையில் மைக் பென்ஸ் அமர்ந்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது எஜமானரின் காலடியில் விசுவாசமாக இருந்துகொண்டு அவர் தன்னைத் தானே கேவலப்படுத்திக்கொண்டவர்.

வரலாற்றிலேயே மிகவும் அவமானப்பட்ட, மிகவும் அவமானகரமான அதிபராக ட்ரம்ப் தனது பதவியை விட்டுச் சென்றார். ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் பிளவுபடுத்தி அதனைக் களைப்படையச் செய்துவிட்டார். கடைசி நொடி வரை தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தினார். கடைசி நிமிட மன்னிப்புகளை ஸ்டீவ் பனான் உள்ளிட்ட நண்பர்களுக்கு வழங்கினார். அவரது முன்னாள் பிரச்சார மேலாளரான ஸ்டீவ் பனான் அமெரிக்க எல்லையில் சுவர்கள் எழுப்பப்போவதாகச் சொல்லி ட்ரம்ப்பின் ஆதரவாளர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்.


ட்ரம்ப்பின் வசம் இன்னொரு சாதனையும் இருக்கிறது: இரண்டு முறை பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட முதல் அதிபர் அவர். அவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக ஆகாதவாறு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்ரீதியிலான பொறுப்பேற்பை அவர் எதிர்கொண்டிருக்கிறார் அதே நேரத்தில் பொருளாதாரரீதியிலான, சமூகரீதியிலான, குற்றவியல்ரீதியிலான பொறுப்பேற்பையும் அவர் சந்திக்க வேண்டும்.

ட்ரம்ப் தற்போது பதவியில் இல்லையென்றாலும் நாட்டில் அவர் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் நீடிக்கவே செய்கிறது. அவருக்கு வாக்களித்த 7.40 கோடி பேர் இன்னமும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். மிகவும் பிளவுபட்ட நாடு ஒன்று எப்படி ஒன்றுபட்டு தனது காயங்களை ஆற்றிக்கொள்ளும் என்பதற்கு வழியறிவதற்கு நேரம் வரும். அது நடந்தாலும், ட்ரம்ப்பின் துஷ்பிரயோகங்களையோ அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதையோ மறந்துவிட்டு அது நடக்காது. அமெரிக்கர்களை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளிவிட்ட தீவிரமான பிரச்சினைகளை – பொருளாதார சமத்துவமின்மையில் ஆரம்பித்து இனவெறி, சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்புவது வரை – மறந்துவிட்டு அது நடக்காது.


பைடன் முன்னுள்ள சவால்கள்


பைடனால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, என்றாலும் பிரச்சினையின் தீவிரத்தையும் காத்திருக்கும் முட்டுக்கட்டைகளையும் பற்றி அவர் நன்கு அறிவார். அவரது நாடாளுமன்றச் செயல்திட்டங்கள் உச்ச நீதிமன்றத்தால் சவாலான சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். ஏனெனில், நூற்றாண்டிலேயே மிகவும் தீவிரமான மரபியர்கள் உச்ச நீதிமன்றத்தை ஆக்கிரமித்துவிட்டனர். பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு நேர்மாறாக சிந்திக்கும் நீதிபதிகள் அங்கே இருக்கிறார்கள்; நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை விளங்கிக்கொள்வதிலும் சட்டங்கள் தொடர்பாகவும் இனி வரும் சில தசாப்தங்களுக்கு அவர்கள் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பாக இருக்கும்.

எனினும், தற்போது கொஞ்சம் நிதானம் கொள்வோமாக, பைடனை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததைக் கொண்டாடுவோம். அவர் பதவியேற்றதற்கு முந்தைய நாளில் இருந்ததைவிட மாயாஜாலம் போல வேறொன்றாக அமெரிக்கா மாறிவிடவில்லைதான். எனினும், அமெரிக்கா தற்போது ஒரு கண்ணியமான, அனுபவம் வாய்ந்த பொதுச்சேவையாளர் ஒருவரால், அதாவது தனக்கு வாக்களித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அக்கறை கொண்ட ஒருவரால் ஆளப்படுகிறது என்பது பெரிய விஷயம். ஊழல்கறை படிந்த, எதேச்சாதிகாரி ஒருவரைத் தேர்தல் மூலம் அதிகாரத்தை விட்டுத் துரத்தியது சாதாரணச் செயல் அல்ல. அமெரிக்க மக்கள் அதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இந்த தினத்தை (ஜனாதிபதி பதவியேற்பு தினம்) பெறுவதற்குத் தகுதியானவர்களே. புதிய அதிபரின் பதவியேற்பு என்பது சுயாட்சியின் சிகரமான சடங்காகும்.

தன் பதவியேற்பு நாளில் அவர் ஆற்றிய உரையின் இறுதியில், எதிர்காலத் தலைமுறைகள் 'அவர்கள் இந்த சிதறுண்ட நாட்டின் காயங்களை ஆற்றினார்கள்' என்று சொல்வார்களா என்று கேட்டார். பைடன் அதிகாரத்துக்கு வந்திருப்பதன் மூலம் காயத்தை ஆற்றும் செயல்பாட்டை நாடு தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நமது இதயபூர்வமான வாழ்த்துகளுக்குத் தகுதியானவர் அவர்.


மூலம்:@நியூயார்க் டைம்ஸ். சுருக்கமாகத் தமிழில்: ஆசை-  த ஹிந்து

No comments:

Post a Comment