Friday, January 8, 2021

34 லட்சம் கோடிகளுடன் உலகின் மிகப்பெரிய பணக்கார் வரிசையில் முதலிடம் பிடித்தார் எலன் மஸ்க்

 





உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் அமெஸன் நிறுவனத்தலைவர் ஜெஃவ் பெஸோஸை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் .

நேற்றைய தினத்தில்  எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இலங்கை நாணயத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களின் தற்போதைய மதிப்பு 18800 கோடி  ரூபா என்கின்ற நிலையில் எலன் மஸ்கின் சொத்துப்  பெறுமதி தற்போதைய நிலையில் 3 478 000 கோடி ரூபா என்றால் வியப்பாகவுள்ளதா?

உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரராக பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த மைக்ரோ ஷொஃப்ட் நிறுவனத்தலைவர்  பில் கேட்ஸை பின்தள்ளி 2017ம் ஆண்டில் முதலிடம் பிடித்திருந்தார் அமெஸன் நிறுவனத்தலைவர் ஜெஃவ் பெஸோஸ் .

இந்த நிலையில் மின்சார கார் {எலெக்ரிக் கார்} தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் தலைவரான எலன் மஸ்க் நேற்று ஜனவரி 7ம் திகதி உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளதாக புளும்பேர்க் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உலகம் திண்டாடிக்கொண்டிருந்த 2020ம் ஆண்டில் மட்டும் எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. இது இலங்கை நாணயத்தில் 2,820 ,000 கோடி ரூபா ஆகும்.

2020ம் ஆண்டு ஆரம்பித்த போது எலன் மஸ்கின் சொத்துமதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டது. உலகில் முதல் பத்து பணக்காரர் வரிசையில் கூட அவர் இருக்கவில்லை. டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக பலமடங்குகள் அதிகரித்ததன் விளைவாகவே கிடுகிடுப்பென அவர் முதலிடத்திற்கு வந்திருக்கின்றார். கடந்தாண்டில் டெஸ்லா பங்குகள் 9 மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பணக்காரர் வரிசையில்   இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெஃவ் பெஸோஸ் 25 ஆண்டுகளாக மனைவியாக இருந்த மெக்கன்ஸி ஸ்கொட்டை கடந்தாண்டில் விவாகரத்து செய்த போது அவருக்கு 38 பில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியிருந்தார். கடந்தாண்டு ஜுலை மாதத்தில் விவகாரத்து  செய்திருக்காவிடின்  200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்பு எல்லையைக் கடந்த முதலாவது செல்வந்தர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். 

புதிய பணக்காரர் வரிசை விபரம் வருமாறு

1. எலன் மஸ்க் -185 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 

2. ஜெஃவ் பெஸோஸ்-184 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 

3.பில் கேட்ஸ்-132 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

4. பேர்னாட் ஆர்னோல்ட்-114 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

5 மார்க் ஸக்கர்பேர்க் -100 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

6. ஷொங் ஸன்ஸன்- 93 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

7. வொரன் பஃவ்வட்-87 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

8. லரி பேஜ்- பில்லியன் அமெரிக்க டொலர்கள்

9. சேர்ஜி பிரின்-79 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

10. லரி எலிஸன்-79 பில்லியன் அமெரிக்க டொலர்கள்


No comments:

Post a Comment