Tuesday, January 5, 2021

தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கிஒலித்த குமார் பொன்னம்பலம் அவர்களது 21வது நினைவுநாளில்...

 


தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கியொலித்த அமரர் குமார்  பொன்னம்பலம் அவர்களின் 21வது நினைவுநாள் இன்றாகும்.

2000ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி இதேபோன்றதொரு நாளில் தலைநகர் கொழும்பில் குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

குமார் பொன்னம்பலம் என நன்கறியப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம் 1938ம் ஆண்டில் பிறந்திருந்தார் இறக்கும் போது அவருக்கு 61வயது மட்டுமே. 

இன்றைய நாளில் குமார் பொன்னம்பலம் அவர்களின் சிறப்பை விளக்கிய அவரது நண்பரும் ஆதரவாளருமான க.மு.தர்மராசா அவர்கள் தொகுத்து வழங்கிய கட்டுரையை இங்கே மீளப்பிரசுரம் செய்கின்றோம்.

தலைநகரில் அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல்


தலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளது. ஆனால் கொழும்பில் தமிழ்க் குரல் அடக்கப்பட்டதால் தனது அநியாயங்களும், மனித உரிமைமீறல்களும் அமுங்கிப் போய்விடுமென சதிகாரர்கள் எண்ணினால் அது நிச்சயமாகவில்லை. கொழும்பிலிருந்து எழுந்த குமார் பொன்னம்பலம் எனும் ஆத்மா அடக்கப்பட்டுவிட்டதாலும் அவரது மறைவின் மூலம் எழுந்துள்ள எழுச்சியானது சர்வதேச ரீதியில் தமிழ்த் தேசிய இனத்திற்குச் செய்யும் அட்டூழியங்களை இனங்காட்டும் என்பது நிச்சயம். வடக்குக் கிழக்கில் அரசாங்கங்களால் கைது செய்யப்பட்டு தமிழர்கள் சித்திரவதைகளை அனுபவித்தபோதும், கொழும்பில் காரணமின்றி கைது செய்யப்பட்டபோதும், சிறைக்கூடங்களில் தமிழ்க் கைதிகள் அடக்கப்பட்டபோதும் துணிந்து சென்று வாதாடி அவர்களை மீட்டவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான்.

ஒரு முறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அரசின் தமிழர் விரோதப் போக்குகளை வெளிக்கொணர்ந்ததாலும் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும் பேட்டியின் பின் உளவுத்துறையினரால் கடுமையான விசாரணைக்கு குமார் பொன்னம்பலம் உட்படுத்தப்பட்டார். இவ் விசாரணை நடவடிக்கைகள் சிலவேளைகளில் குமார் பொன்னம்பலத்தின் எதிர்காலத்திற்கே கேள்விக் குறியாக அமையுமோ என நண்பர்கள் எதிர்பார்த்தவேளை, அவர் அரசின் சவாலை உறுதியாக எதிர் கொண்டார்.தன் மீதான விசாரணையின் போது ஒரு கட்டத்தில் அவர் நான் ஸ்ரீலங்காவில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு எதிராக நடந்துகொள்ளவில்லை. சட்டம் தடைசெய்த எதனையும் நான் செய்யவில்லை. நீதித்துறையிடம் எனது பிரச்சினையை விட்டுவிடுங்கள். அவர்கள் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என்றார். அதேவேளை, ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது. மற்ற சமூகத்தினரை விட தமிழ்ச் சமூகம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது என அதே நீதித்துறையின் மீது அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றையும் தாக்கல் செய்தார்.

குமார் பொன்னம்பலத்தை மிகச் சாதாரண மனிதர் என்றே கூறலாம். பல தடவைகள் அவரது நண்பர்கள் அவரது பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறியபோதிலும், அவர் சாதாரணமாகவே கொழும்பு வீதிகளில் நடமாடினார். அவர் தான் சந்திக்கக் கூடிய இன்னல்களையும், சிக்கல்களையும் என்றுமே எண்ணிப்பார்க்கவில்லை.எல்லோரையும் நம்பினார். அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள்: வயது வித்தியாசம் இன்றி எல்லோருடனும் பழகக் கூடியவர். அவரது தமிழ் வார்த்தைப் பிரயோகம் மிக அழகானது.பேசும்போது கூட மிகச் சாதாரண சொற்றொடர்களையே பாவிப்பார். ஆனால், வானொலி,தொலைக்காட்சி பேட்டிகளில் மிக ஆழமான வசனங்களை அவர் கையாள்வது வழக்கம்.

ஆனால், இன்று நாம் அவரை இழந்துவிட்டோம். தமிழீழ விடுதலைப்போர் மற்றுமோர் தியாகத்தை தன்னகத்தே ஏற்றுக் கொண்டது. குமார் பொன்னம்பலம் அவர்கள் எம்மைவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அவரது துணிவு, அவரது செயற்பாடு, அவரது இலக்கு, அவரால் ஏற்பட்ட எழுச்சி இன்று தமிழ் மக்களை மிகுந்த நெகிழ்விற்கும், ஓர் ஆவேசத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது. இதையே உலகளாவிய ரீதியில் அவருக்காக எழுப்பப்படும் அனுதாபச் செய்திகளும் கருத்துகளும் கூறிநிற்கின்றன.

ஜனநாயகக் குரல் ஓய்ந்தது

இலங்கைத் தமிழர்களது பாரம்பரிய ஜனநாயகக் கட்சிகளின் வரிசையில் இடையறாது ஒலித்துவந்த ஒரு ஜனநாயகக் குரல் ஓய்ந்துவிட்டதாக தமிழர்கள் கருதுகிறார்கள்.

பேரினவாதப் போக்குடையவர்களால் தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்படும்போது அதற்கு எதிராக துணிவுடன் கருத்து தெரிவிக்கும் ஆளுமையை குமார் பொன்னம்பலம் பெற்றிருந்தார். வெறும் பத்திரிகைகளுக்கு விடுக்கும் அறிக்கைகளுடன் மாத்திரம் அவர் பணி நின்றுவிடவில்லை. நேரடி விவாதங்களின் போதும் அவர் துணிவுடன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

1977 ஆம் ஆண்டு முதலாவது தடவையாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார். எனினும் இரண்டிலுமே அவர் வெற்றிபெறவில்லை.

அரசியல் அபிலாசைகளுக்காக வாய்மூடி மௌனியாக இருப்பதைவிட தனது சமூகம் தன்மானத்துடன் வாழ குரல் கொடுப்பதே மேலானது என்று நவீன சித்தாந்தத்தை கடைப்பிடித்திருக்கிறார். இதன் விளைவாக இவர் எதிர் விமர்சனங்களுக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிய சம்பவங்கள் உண்டு.

1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த குமார் பொன்னம்பலம் இயற்கை விஞ்ஞானத்திலும் பட்டம் பெற்று 1974 ஆம் ஆண்டு பரிஷ்டராகப் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் தனது அறுபதாவது சஷ்டியப்த பூர்த்தியை தமிழ்நாடு திருக்கடையூரில் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வாலிபர் முன்னணியின் செயலாளராக அரசியலில் பிரவேசித்த குமார் பொன்னம்பலம் இறுதியில் அதன் தலைவராகவும் பரிணமித்தார்.

வடகிழக்கு தமிழர்களுக்கும், மலையக இந்திய வம்சாவளி, தென்னிலங்கை தமிழர்களுக்கும் இடையே பாரிய இடைவெளியை நீக்கியதில் குமார் பொன்னம்பலத்திற்கு பங்குண்டு. மலையக மக்கள் மீதும் அவர் பற்றுக் கொண்டிருந்த பல சம்பவங்கள் உண்டு. மலையக வாலிபர்களுக்கு எதிரான பல வழக்குகளில் அவர் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்.

களுத்துறைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பல இளைஞர்களது நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக வாதிட்டும் இருக்கிறார். குமார் பொன்னம்பலம் சட்டத்தரணிகளை மிகவும் மதித்து பண்புடன் பழகும் இனிய சுபாவம் உடையவர்.அவர் மமதையுடன் செயல்பட்டதில்லை. எல்லோருடனும் அன்புடன் பழகும் பண்புடையவர். நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதில்லை. நீதிபதிகளும் அவருடன் சிநேகபூர்வமாகவே இருந்திருக்கிறார்கள். அவர் சாதிக்க வேண்டியவை ஏராளம் இருந்தது. சந்தர்ப்பமும் இருந்தது. ஆனாலும் அவை கைகூடி வரமுடியாது போனமை துரதிர்ஷ்டவசமானது.

வழக்காளிகள் விடயத்தில் தனக்கென்று சில உதாரண கொள்கைகளை அவர் கடைப்பிடித்திருந்தார். எந்தவொரு வழக்காக இருந்தாலும் அதை ஆரம்பத்திலிருந்தே தானே நடத்த வேண்டும் என்ற விருப்புடையவர். இடைநடுவில் இன்னொரு சட்டத்தரணியிடமிருந்து அந்த வழக்கைப் பெற்று தொடர்ந்து நடத்துவதை அவர் விரும்பியதில்லை. தனது தந்தையார் ஜி.ஜி.பொன்னம்பலம் இதைத் தனக்கு கற்றுக் கொடுத்ததாக குமார் அநேக சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.

அவர் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரருக்காக ஆஜராகி வாதாடும் போது அதைப் பார்ப்பதற்கென்றே பலரும் குழுமியிருப்பதை அவதானிக்க முடியும்.அவரது குறுக்கு விசாரணைகள் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும்.இங்கு சிங்கள மொழியிலும் சரளமாக வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுவதை அவதானிக்கலாம். நெற்றியில் விபூதி, பெரிய சந்தனத் திலகத்துடன் கொழும்பு மேல் நீதிமன்றங்களில் அவர் தனது கனிஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பல வழக்குகளில் வெற்றியீட்டியுள்ளார். அநேக இளைஞர்களின் விடுதலைக்குக் காரணமாகவுமிருந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை சம்பவம்

பிற அரசியல் கட்சித் தலைவர்களைப் போன்று வார்த்தை ஜாலங்களால் அரசியல் நடத்தவில்லை. துணிவுடன் காரியங்களைச் சாதித்தவர் இவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச் சோலையில் 67 பொது மக்கள் பலியான சம்பவத்தின்போது அதை விமர்சித்ததுடன்,அந்த விசாரணைக்கு துணிவுடன் ஆஜராகியிருந்தவர். பிற சட்டத்தரணிகள் தயக்கம் காட்டியிருந்தபோது குமார் பொன்னம்பலம் துணிவுடன் ஆஜராகியிருந்தார். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கிலும் யாழ்.பெண்கள் மனித உரிமைகள் சங்கத்தின் சார்பில் ஆஜராகியிருந்தார். இன்னும் இது போன்ற மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குமார் பொன்னம்பலம் ஆஜராகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் தன்மானம் காத்துவாழ வேண்டும் என்ற சிந்தனையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆழமாக வலியுறுத்தி வந்தவர் குமார் பொன்னம்பலமேயாவார். இதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் மிக நம்பிக்கையும், செல்வாக்கும் பெற்றவராக இவர் காணப்பட்டார். இதன் காரணமாக பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.

அவரது விவேகமும், அறிவாற்றலும் இக்கட்டான இச்சூழ்நிலையில் தமிழினத்துக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமானது.குமார் பொன்னம்பலம் என்ற தனி மனிதன் மறைந்தாலும் தமிழினத்தின் மத்தியில் அந்த நாமம் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்.

கருத்துகளை அஞ்சாது தெரிவித்த தமிழ்த் தலைவன் (09.01.2000)

குமார் பொன்னம்பலம் தமிழரசியல் கட்சியொன்றின் பிரமுகர் மனிதாபிமானமிக்க பண்பாளர், மனித உரிமைகள் இயக்க நடவடிக்கையாளர். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு வழக்கறிஞர். இந்நாட்டின் அரசியல், சட்டத்துறை அவருக்கு அவர் நிகர் என்று ஒருவரான அமரர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புதல்வர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது “சாவே உனக்கு சாவு’ வந்து சேராதோ என்று கூறப்பட்டது. அந்த ரீதியிலேயே குமாரின் மறைவு தமிழினத்தின் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலவிதம். தங்கள் பதவிகளை தக்க வைப்பதற்காக அமைதி பேணும் தலைவர்கள் உண்டு. தங்களது சலுகைகளை பாதுகாக்க வாய்மூடி மௌனியாய் இருக்கும் தலைவர்களும் உண்டு. கருத்துகளை அஞ்சமின்றி துணிந்து எடுத்துச் சொல்லக் கூடியவர்களும் உண்டு. அந்த வரிசையில் எதற்கும் அஞ்சாது துணிவுடன் கருத்துகளை எடுத்துக் கூறிய ஒரு அரசியல்வாதியாக, தமிழராக குமார் பொன்னம்பலம் விளங்கியிருக்கிறார். தனி மனிதனின் விருப்பு,வெறுப்புகளின் விளைவே குமார் பொன்னம்பலத்தின் மரணம் என்பது தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டது. அவர் எப்போதும் தான் சார்ந்துள்ள தமிழர் மக்களுக்கு எதிரான அரசியல் மாயவலைகள் எங்கு பின்னப்படுகிறதோ, அப்போது அதை அறுத்தெறியும் துணிவைப் பெற்று அம்பலப்படுத்திய நினைவுகள் ஏராளம்.

உள்ளதை உள்ளவாறு கூறுவது குமாரிடமுள்ள சிறப்பம்சம் (05.05.2000) மேன்முறையீட்டு நீதியரசர்

குமாரிடமிருந்த உறுதியான சிறப்பம்சம் உள்ளதை உள்ளவாறே வெளிப்படையாகக் கூறும் தன்மையாகும்.(ஏடிண் ஞூணிணூt தீச்ண் ஞிச்டூடூடிணஞ் ச் குணீச்ஞீஞு ச் ண்ணீச்ஞீஞு) அவர் இதை எதுவித பயமோ தயக்கமோ இன்றி சரியெனத் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர். குமார் ஒருபோதும் சுயநலனுக்காக தனது சிந்தனையின் வெளிப்பாட்டினை வார்த்தை ஜாலங்களால் மூடிமறைந்தவர் அல்ல. அவர் தனது வழக்கின் பலம் என்ன என்பதை மட்டுமல்ல பலவீனத்தையும் எடுத்து விளக்கி நிற்பார். அது மட்டுமல்ல சிங்களவரோ, முஸ்லிமோ, தமிழரோ அல்லது எந்த சமூகத்தவர் என்றில்லாமல் தனது கட்சிக்காரருக்காக ஒவ்வொரு அங்குலமும் விட்டுக் கொடாது வாதிடும் வல்லமை பொருந்தியவர் குமார். பலர் மனித உரிமை பற்றி பேச்சோடு மட்டும் காலம் போக்குகையில் பாதிக்கப்பட்டவர்களின், பாதிப்பை, இழப்பை, துயரத்தை தன் செயலால் எடுத்துக் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தின் தேவையை வலியுறுத்தி நிற்பது இவருடைய தனிப் பண்பு.

உண்மையான மனத்தாங்கலை, உரிமை நாடிய துயரத்தை கொலைகளாலும் சித்திரவதைகளாலும் அடக்க, நசுக்க முயலுதல் ஒருபோதும், பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையையோ அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் பிரச்சினையோ தீர்க்கமாட்டாது. ஒரு இறப்பர் பந்தினை நீர் வாளியின் அடிவரை அமுக்கினால் அது அங்கே நிற்காது. மேற்தளத்திற்கு உந்திக் கொண்டு வரும். குமாரை தனிப்பட்ட ரீதியில் அறிந்த அனைவரும் அவரது அநாவசியமான அகால மறைவினால் உள்ளத்தால் துயருறுவர் என்பதில் ஏதும் சந்தேகம் இருக்க முடியாது.

அஞ்சா நெஞ்சங்கொண்ட தலைவர் (05.01.2000)

“நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்தாரே ஐயா, உன் தமிழ் உயிருக்கு வஞ்சனை செய்தாரே ஐயா’ எம் இனத்தை சிறுமைப்படுத்தி மரம்,செடி,கொடியென்றும் வந்தேறும் குடிகள் என்றும் கூறியவர்களின் முகத்திரையைக் கிழித்து, உலக அரங்கத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை ஆதாரத்தோடு எடுத்துக் கூறிய பெருந்தகையே. உனது நீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், உன்னையும் சட்டப்படி சந்திக்க முடியாமல் போனவர்கள், அநீதியை எதிர்த்து எவ்விதப் பயமுமின்றி வாதாடிய எம் இனத்தலைவரான உன் சிம்மக் குரலை அடக்க நினைத்தோர் அது முடியாது என்று நினைத்தோ கோழைகளான ஈனர்கள் சதிசெய்து உன் உயிரை எடுத்தனர். ஐயா! இன்று நீ உறங்குகின்றாய். எம் இனம் யாருமற்ற அநாதைகளாக தட்டிக் கேட்க ஆளின்றித் தவிக்கின்றது. கொழும்பில் நீ தான் தமிழர்களின் தலைவனாக இருக்கின்றாய் என்று உலகத்திலுள்ள தமிழர்கள் ஆறுதல் அடைந்திருந்தனர். உன் மண்வாசனை கலந்த தமிழாய் தட்டிக் கேட்பாய் என்று அமைதியாக இருந்தனர். உம் சிம்மக் குரலும் பேச்சும் ஒரே நேரத்தில் இருந்ததை அறிந்த உலகத் தமிழ் மக்கள் அனைவருமே இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். எம்மையெல்லாம் விட்டு எங்கு ஐயா சென்றாய்? உன் இடத்தை நிரப்ப எமக்கு இனியாருமில்லை. தட்டிக் கேட்க ஆளில்லாத பாவிகளாய் தவிக்கின்றனர் உன்பிரிவால் தமிழர்கள்.

ஒரு மானமுள்ள தமிழனின் நினைவாக (09.01.2000) நோர்வே

பனைமரங்கள் அங்கு வளர்வதில்லை. ஆனாலும் அதிசயமாய் நீ அங்கு ஒற்றைப் பனைமரமாய் ஓங்கி வளர்ந்து நின்றாய். பற்றைக்குகந்த மண்ணிலே பனை மரங்கள் எத்தனை நாள் உயிர்வாழும் என்று எப்போதும் பயந்திருந்தோம். ஈற்றில் நிகழ்ந்தது அது. கொக்கட்டிச் சோலையிலே கொலையுண்டு போனவர்கள்,கொழும்பிலே ஆயிரமாய் கூண்டுகளில் அழுதவர்கள், வெறிநாய்கள் தாக்கியதால் கிருசாந்தியானவர்கள் என்று எத்தனையோ ஈழவர்கள் இன்னல்களில் கைகொடுத்தாய், நீசர்களின் பொய்மதுவில் நீதிமயங்கி நின்று உலகெங்கும் நீ சென்று உள்ளதை எடுத்துச் சொன்னாய், உண்மையை அடித்துச் சொன்னாய், இனத்தின் விடுதலைக்காய் ஜனநாயக வழியிலே போர் முரசு செய்தாய், தன்மானமுள்ள தமிழனாய் நீ வாழ்ந்ததற்கும் எவருக்கும் அஞ்சாத ஈழவனாய் நீ வாழ்ந்ததற்கும் உமக்கு எங்களால் நன்றிக் கடன் தீர்க்க முடியுமா? மறைந்தாலும் வாழ்பவனே.

எம் இனத்தின் விடிவிற்காக தனியொருவனாக நின்று குரல் எழுப்பிய தமிழ்ப் பெருந்தகையே, அகதிகளாக இதுவரை வாழ்ந்த எம்மை அநாதைகளாகவும் தவிக்க விட்டு சென்றதேனோ! எம் இனத்திற்கும் விமோசனமே இல்லையென இறைவன் முடிவெடுத்துவிட்டதனால் தான் உங்களைத் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும்.

மறைந்த தமிழ் மகாத்மாவுக்காக

களுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகள் 2000

தமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல், ஆவி பொருள் எத்தனை உயர்வாக உன்னத தமிழுக்குக் கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே தமிழர்களின் தன்மானம் காத்த தகையே, பாடுபட்டு உழுதாலும் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்தபோதும் இடறாமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே! நாடு கேட்டீர்கள்! தமிழ் மக்களுக்குச் சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக. தடைகள் பல அகற்றி தமிழ் மக்களுக்கெல்லாம் குடையாக நிழல் கொடுத்த தமிழ் ஞான மரமே கொடையாக உயிரையும் கொடுத்துச் சென்றீர்களே.இப்போது முடையாகிவிட்டது எங்கள் முழுமனதும் ஐயா. யுத்தங்களால் நசிந்துபோன இத்தரணியில் மலர்ந்த பத்தாயிரம் ஆண்டென்ன இம்மண்ணிலே இனிமேல் பத்தாயிரம் ஆண்டுகள் மலர்ந்தாலும் மறைந்த குமார் தான் வித்திட்ட மலர்ந்திடுவாரோ? விடையறியோம் பரா பரமே.

தமிழ்த் தேசிய இனம் என்றும் மறக்காத நினைவுகள்

துன்பத்தின் மடியிலே துயரத்தின் பிடியிலே வாடி நின்ற தன்னவரைத் தேற்றிவாழ வைக்கத் துடித்தோடி வந்த தொண்டன் அவன்.

செல்வமும் செல்வாக்கும் மிக்க இல்லத்தில் தோன்றியபோது இல்லாமையினால் இயலாமையடைந்தோரை மறக்காத செழித்த தமிழ் நெஞ்சம் அவன்.

தமிழினத்தின் அழுகுரல் கேட்ட இடமெல்லாம் விரைந்தோடி அவர்கள் கண்ணீரைத் துடைத்த அன்பின் தளிர்க்கை அவன்.

அனைத்துலகும் பறந்து தமிழினத்தின் துயரங்களை ஆர்ப்பரித்த அறத்தின் சங்கம் அவன்.

ஈழத்தமிழினத்தின் விடுதலையே தனது பேச்சாக தனது மூச்சாக, தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த ஈடிணையற்ற தமிழன் அவன்.

விடுதலையை நாடிநின்ற தன்மானத் தமிழனுக்கு நம்பிக்கை ஒளியாக அரசியல் வானிலே இடியென முழங்கி நின்ற அஞ்சாவீரன்.அதற்கு ஆயுதம் ஏந்தாமல் தன் பேனா முனை கொண்டு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற நல்லறிஞன் அவன்.

இவர் போன்ற மாமனிதர்கள் பிழைக்க வழிதேடி விடுதலைப் போராட்டத்தில் இறங்கியவர்கள் அல்ல. இவர்கள் காலத்தினால் அழியாதவர்கள் இவர்கள் பெயர்களை, நினைவுகளை, திறவினைகளை வரலாறு என்றும் சுமந்து நிற்கும்.இவர் சாவதில்லை.

தொகுப்பு: க.மு.தர்மராசா

No comments:

Post a Comment