ஜனநாயகம் கடுமையான சவால்களை கண்டிருந்த போதும் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்தார்.
அரசியல் பிளவு, பொருளாதார தேக்கநிலை மற்றும் கொரோனா வைரஸ் பொருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜோ பைடன் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக இன்று அமெரிக்க நேரப்படி (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
'இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்' ,
'பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம்' ,
'ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது'
'சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (கெபிடல் ) வன்முறை வெடித்தது. ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.'
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் பேசிய முதல் உரையில் பெண் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் குறித்தும் பைடன் குறிப்பிட்டார்.
'180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது' என்று அவர் தெரிவித்தார்.
எனக்கு வாக்களிக்காதவர்களையும் நான் பாதுகாப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று அவர் பேசினார்.
வொசிங்டன் டி.சியில் கெபிடல் பாராளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் இடம்பெற்ற பதவியேற்று நிகழ்வில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவியில் இருந்து விடைபெறும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தில் இந்த மாதம் ஆரம்பத்தில் கலகத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 25,000 துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே பதவியேற்று நிகழ்வு இடம்பெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் குடியிருந்த டொனால்ட் ட்ரம்ப், அதனை விட்டு புளோரிடாவில் தமது இல்லத்திற்கு திரும்பினார்.
பைடனின் பதவியேற்பு நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்காதது அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் கடைசியாக 1869 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக உலிசஸ் எஸ் கிராண்ட் பதவி ஏற்றபோது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜோன்சன் பங்கேற்கவில்லை.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜோன் ரொபட்ஸ் முன்னிலையிலேயே பைடன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு சம்பிரதாயமான அம்சங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தவிர, ஜனவரி 06 ஆம் திகதி டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாதுகாப்பு வழக்கத்தை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் முன்னர் பைடன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்றிருந்தனர்.
ட்ரம்பின் துணை ஜனாதிபதியான மைக் பென்ஸும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தார். தலைநகருக்கு வெளியில் இராணுவத் தளம் ஒன்றில் ட்ரம்பின் பிரியாவிடை வைபவத்தை தவிர்த்தே பென்ஸ் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பைடன் அரை மணி நேர உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அதில் தேசிய ஐக்கியம் அதிகம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முதலாவது பெண் மற்றும் கறுப்பு மற்றும் ஆசிய அமெரிக்கராக ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
மறுபுறம் 78 வயதான பைடன் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாகவே பதவியேற்றார்.
முன்னதாக அமெரிக்க நேரப்படி இன்று காலை மெரிலாந்தில் இருக்கும் அன்ட்ரூஸ் கூட்டுப்படை தளத்தில் ட்ரம்ப் பிரியாவிடை வைபவத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் ஜனாதிபதிக்கு பின்னரான வாழ்வை தொடர்வதாற்காக பாம் பீச்சில் மாரா லேகோ கொல்ப் விடுதிக்கு ஏர்போர்ஸ் ஒன் விமனாத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி பதவியின் கடைசி நேரத்தில் ட்ரம்ப் 140க்கும் அதிகமானவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்தார். இதில் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தமது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பெனொனும் உள்ளார்.
பிரியாவிடை செய்தி ஒன்றையும் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்துக்கொள்வதற்கு அடுத்த நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவத்துக்கொண்டார்.
ஆனால், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பெயரை அவர் தமது உரையில் குறிப்பிடவில்லை.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பைடன் பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்து வருகிறார்.
இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதலை 'தூண்டியதாக' ட்ரம்ப் மீது ஏற்கனவே பாராளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செனட் அவையில் விசாரணை நடைபெறும். செனட் அவை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்யும்பட்சத்தில் அவர் பதவி நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால், அவர் பதவிக்காலம் அதற்கு முன்பே முடிவுக்கு வருவதால், அவர் மீண்டும் அமெரிக்க அரசு பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.
அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டு முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்ற முதல் ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார்.
எனினும், பிரச்சினைகளை விடுத்து தனது தலைமையிலான நிர்வாகம் சாத்தியமாக்கிய இலக்குகளை மட்டும் தனது வீடியோவில் பட்டியலிட்ட ட்ரம்ப்இ 'எனது நிர்வாகம் உலக வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரத்தை கட்டமைத்துள்ளது' என்று கூறினார்.
No comments:
Post a Comment