ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு ஆதரவாகவும், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை மேற்குலக நாடுகள் ஊக்குவிப்பதாக ரஷ்ய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, ரஷ்யா முழுவதும் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காவல்துறையினரை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணிகளில் பங்கேற்றனர். இதையடுத்து பேரணியில் பங்கேற்றதாக சுமார் 3,500 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த பேரணியில் 'மிகவும் குறைந்தளவிலான' மக்களே பங்கேற்றதாக நேற்று (ஜனவரி 24இ ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரஷ்ய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
குறிப்பாக, இந்த 'கைது நடவடிக்கையுடன் தொடர்புடைய ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள்' எடுக்கப்பட வேண்டுமென்று எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனர்.
நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுமாறு போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவும் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் அந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி கடந்த வாரம் ரஷ்யாவில் நுழைந்த உடனேயே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும், சைபீரியாவிலிருந்து மாஸ்கோ வரை என நாடுமுழுவதும் சுமார் 100 நகரங்களில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
குறிப்பாக, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், வன்முறை தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது.
ரஷ்யா முழுவதும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் முன்னெப்போதுமில்லாத வகையில் இருந்ததாக அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தலைநகர் மாஸ்கோவை பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் கடுமையான எச்சரிக்கை மற்றும் தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேருந்துகளில் பயணித்தவர்கள் கையசைத்தும், வாகன ஓட்டிகள் ஒலியெழுப்பியும் ஆதரவு தெரிவித்தது அவர்களை உற்சாகப்படுத்தும் படியாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபோன்ற கருத்தை தெரிவித்ததன் மூலம் 'தங்களது நாட்டின் உள்விவகாரங்களில்' அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்தார்.
எனினும், இதுபோன்ற அறிவிப்புகள் 'வழக்கமான செயல்பாடே' என்று மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்றதற்காக தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்இ காவல்துறையினரின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதே சூழ்நிலையில் மேற்குலக நாடுகள் மாஸ்கோவிலுள்ள தங்களது தூதரகங்களின் வாயிலாக ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவிப்பதாக பிரிட்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டிருந்தது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள், 'மேற்கத்திய போலி ஜனநாயகம் மற்றும் போலி தாராளமயத்துடன் தொடர்புடைய மேற்கத்திய சிந்தனையின் வெளிப்பாடு' என்று கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் ரஷ்யாவின் செயல் 'சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வது' என்று கருத்துத் தெரிவித்துள்ள பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தால் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னியை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்று உயிர் தப்பிய நவால்னி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் ஜெர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு வந்தவுடன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அலெக்ஸே நவால்னி மீது கையாடல் (Embezzlement)வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தன் மீது தொடுக்கப்பட்டதாக நவால்னி கூறுகிறார். இந்த தண்டனை காலத்தில் நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததால் கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை கடந்த வாரம் (ஜனவரி 17) ஒரு அறிக்கை வெளியிட்டது.
இது மட்டுமின்றி ரஷ்ய அரசுத் தரப்பு நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் பதிந்திருக்கிறது. தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுத்து பேச்சை நசுக்குவதற்காகவே தனக்கு எதிராக புதின் வழக்குகளை ஜோடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் நவால்னி.
நன்றி - பிபிசி உலகச் சேவை
No comments:
Post a Comment